Monday, December 24, 2012

சுனாமி: கருணையின் அதிகாரம்


சுனாமி தாக்கியதற்குப் பிறகு தமிழகத்தில் நிலவிய சூழலைப் பார்த்து எழுதிய கட்டுரை இது. காலச்சுவடு மாத இதழில் வெளியானது. பிறவழிப் பயணம் ( உயிர்மை, 2009 ) என்ற எனது நூலிலும் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது 

கடல் விட்டுச்சென்ற அழிவுகளின் தடங்களோடு “சுனாமி” என்னும் சொல்லும் இங்கு மீந்து நிற்கிறது.  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றபோது பல காலமாகப் பழகிய ஒரு சொல்போல அது புழக்கத்திலிருப்பதைக் கண்டேன்.

பேரழிவுச் செய்திகளில் சாவு எண்ணிக்கை பெருகிக் கொண்டிருந்த நேரத்தில் என் நண்பர் ஒருவர் அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார்.  “வீட்டில் பழைய துணிகள் இருந்தால் எடுத்துவையுங்கள்.  இதோ வருகிறேன்” என்றார்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது இரக்க உணர்வை வெளிப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இந்த வழக்கம் இருந்துவந்தது.  ஆனால் மீனவ மக்கள் பழைய துணிகளை வாங்க மறுத்தனர்.  இப்போது பாதிக்கப்பட்ட ஊர்களில் தெரு ஓரங்களில் குவிந்துகிடக்கும் அந்தப் பழைய துணிகளோடு மத்தியதர நகரவாசிகளின் கருணையும் மட்கிக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் குப்பைத் தொட்டிகளாக எண்ணும் மனப்பாங்கின்மீது முதன்முறையாகப் பலமான அடியொன்று விழுந்துள்ளது.
கருணையை வெளிப்படுத்துவது ஓர் அதிகாரச் செயல்பாடாகும்.  கருணை காட்டுபவர் அங்கே தன்னைக் கொடுக்கும் இடத்தில் வைத்துக்கொள்கிறார்.  கருணை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள, பாதிக்கப்பட்ட ஒருவரை முன்தேவையாக்குகிறது.  எவரும் பாதிக்கப்படாதபோது கருணைக்கு இடமின்றிப்போகிறது.

கருணைகாட்டும் ஒருவர் அந்த செயலினூடாகத் தான் பாதிக்கப்பட்டவர் (Victim) அல்ல என்பதை நிரூபிக்கவேண்டிய நிலையில் இல்லை என்பது அவருக்குப் பெரும் ஆறுதலைத் தருகிறது.  அபய முத்திரையைக் குறிக்கும் கரத்தின் கீழே குனிவதற்கு ஒரு தலை இருந்தாகவேண்டும்.  அந்தக் கரத்தைவிட உயர்ந்த நிலையில் அந்தத் தலை இருக்குமெனில் அந்தக் கரத்தின் குறியீடு அர்த்தமற்றதாகிவிடும்.  கருணை செலுத்துபவர் தன் செயலினூடாக இன்னொன்றையும் உணர்த்துகிறார்.  பாதிக்கப்பட்டவரின் எதிர்காலத்தின் மீது தன்னால் செல்வாக்குச் செலுத்த முடியும் என்னும் செய்திதான் அது.

பழைய துணிகளை நிராகரித்ததன் மூலம் நமது கருணையின் அதிகாரத்துக்கு அந்த மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.  “பாவம் அந்த ஜனங்க” என்று உச்சுக் கொட்டியபடி நமது உதடுகளிலிருந்து ஒழுகிய கருணை, அடுத்த நிமிடமே “என்ன திமிரு பார்த்தீங்களா அதுங்களுக்கு!” என்று ஆத்திரமாகத் தெறிக்க ஆரம்பித்துவிட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தப்பிப் பிழைத்தவர்களிடம் பேசியபோது அவர்களது குரலில் துயரத்தை விடவும் தாங்கள் தப்பிவிட்டோம் என்ற உண்மையே தூக்கலாக வெளிப்பட்டதைப் பார்த்தேன்.  கடலூரில் அதிகம் சேதமடைந்த சோனான்குப்பம், சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம் பகுதிகளை நகரவாசிகள் “பிக்னிக்“ செல்லும் உற்சாகத்தோடு சென்று பார்த்துத் திரும்பிக்கொண்டிருந்தனர்.  பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் சிறு யத்தனம்கூட அவர்களிடம் தென்படவில்லை.  மரித்தவர்களின் உடல்கள் நாம் உயிரோடிருக்கிறோம் என்பதைத்தான் நமக்கு முதலில் ஞாபகப்படுத்துகின்றன.  அலைகளில் அடிபட்டுத் தப்பியவர்களிடம் மட்டுமல்ல அதற்குப் பிறகு அங்கு வேடிக்கை பார்க்கப் போனவர்களிடமும் தாம் பிழைத்திருப்பதன் பெருமிதம் தளும்பிக்கொண்டிருந்தது.

மரணம் இப்படித் திடீரெனத் தாக்கும்போது ஒவ்வொருவரும் உயிர்பிழைக்கவே விரும்புவார்கள்.  அதற்கான ஓட்டம் ஒரு பந்தயமாக மாறிவிடுகிறது.  சுனாமித் தாக்குதல் பற்றிய சித்திரங்கள் தொலைக்காட்சியில் வந்தன.  அலையைத் திரும்பிப் பார்த்தபடியே மனிதர்கள் ஓடுவதை அவை காட்டின.  மரணத்தின் வசீகரம், அதன் அண்மை, வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக மாறுகிறது.  இறந்த உடல்கள் சிதறிக் கிடக்க, நடுவில் நடக்கும்போது பிழைத்திருப்பதை அதிர்ஷ்டமாகவன்றி ஒரு வெற்றியாக எண்ணுகிறது மனம்.

பாதிக்கப்பட்ட மக்கள் பழைய துணிகளை நிராகரித்த செயலோடு, வெளிநாட்டு உதவி வேண்டாமென்று இந்திய அரசின் செயலை ஒப்பிட முடியுமா?  சில விதங்களில் இவற்றுக்கு இடைய ஒற்றுமைகள் உள்ளன.  கருணையின் அதிகாரம் வெளிப்படுத்தப்படுவதில் பழைய துணிகளைக் கொடுத்த நகர வாசிகளுக்கும் நன்கொடைகள் தர முன்வந்த “மேலை நாடுகளுக்கும்“ ஒற்றுமைகள் உள்ளன.  ஆனால் இந்த அரசின் இந்த மறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவரின் மறுப்பாகாது.  கருணை காட்டுவதன் அதிகாரம் முழுவதையும் தன்னிடமே வைத்துக்கொள்ளும் பேராசையின் அடையாளமாக வேண்டுமானால் இதைக் குறிப்பிடலாம்.  இது எந்த விதத்திலும் சுயமரியாதையின் வெளிப்பாடு அல்ல.  தானே முன்வந்து (சர்வதேசச் சந்தையில்) தன்னை அடிமையாக விற்றுக்கொண்டவர்களிடம் சுய மரியாதையை, சுயச்சார்பை நாம் தேடிக்கொண்டிருக்க கூடாது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில், மீட்புப் பணிகளைச் செய்வதில் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.  இதனைத் தொடர்புச் சாதனங்கள் பாராட்டிப் புகழ்ந்துள்ளன. எல்லா மதங்களும் பேரழிவைச் சொல்லித்தான் மக்களை மிரட்டிவருகின்றன.  ஊழிக்காலத்தை நினைவுபடுத்தாமல் அவை செயல்பட முடியாது.  பேரழிவு என்பது கடவுளின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு தருணம் என்பதாகவே மதங்கள் கற்பித்து வருகின்றன.  அவற்றின் கொள்கைப்படி உயிரிழந்தவர்கள் குற்றவாளிகள்.  பிழைத்திருப்பவர்களும்கூடத் தண்டனைக்குக் காத்திருப்பவர்கள்தாம்.  இந்த மீட்புப் பணி தம்மை இறைத் தூதர்களாகக் காட்டிக்கொள்வதற்கு இவர்களுக்கொரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.  மதச் சார்பின்மையை உள்ளீடாகக்கொண்ட ஜனநாயக அரசியல் மத நம்பிக்கையாளர்களை அடிப்படை வாதிகளாகக் கருதிப் புறக்கணிக்கச் சொல்கிறது.  அவர்கள் மனிதநேயம் மிக்கவர்கள், கடவுளின் கருணையைச் சுமந்து வருபவர்கள் என நம்புவதற்கான ஒரு சூழலை இந்தப் பேரழிவு ஏற்படுத்திவிட்டது.  மீட்புப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுவருவது கடவுளின் அதிகாரத்தை, மதத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிட்டது.  இத்தகைய சக்திகளால் நிரப்பப்படக் கூடிய மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று சிவில் சமூகத்தில் இருந்துவருவதையே இது காட்டுகிறது.  மதச்சார்பற்ற நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட வெற்றிடம் அது.  ஆழமான நீண்டகாலப் பின்விளைவுகளை இது ஏற்படுத்தப்போகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியிருப்போர் மன அழுத்தம் முதலிய மனநோய்களால் அவதிப்படுவதாகவும் அவர்களுக்குத் தேறுதல் (Counselling) கூற ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சில நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  இந்த ஆலோசனையின் பின்னால் அவர்களை மன நோயாளிகளாக மாற்றும் குரூர உணர்ச்சியே ஒளிந்திருக்கிறது.  தினமும் கடலுக்குச் சென்று வந்த அந்த மக்கள் இப்போது கடலைக் கண்டு அஞ்சுகிற நிலை ஏற்பட்டுள்ளது.  “சுனாமித் தாக்குதல்” என்பது இதுநாள் வரை அவர்கள் அறிந்திராத ஒரு விஷயமாகும்.  அவர்களது அச்சம், அதிர்ச்சியால் ஏற்பட்டிருப்பது.  தன்னால் பெயரிடப்படாத ஒன்றைத் தனது புரிதலின் வட்டத்துக்குள் தன்வயப்படுத்த நேர்கையில் எந்த ஒரு மனிதனும் எதிர்கொள்கிற நெருக்கடிதான் இது.   சுனாமி என்னும் சொல் இப்போது சகஜமாகப் புழங்கத் தொடங்கிவிட்டது அவர்கள் இந்த விஷயத்துக்குப் பெயரிட்டுவிட்டனர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.  அவர்களை மனநோயாளிகளாகச் சித்தரிப்பதுதான் நோய்க்கூறின் வெளிப்பாடு ஆகும்.
சில தன்னார்வத் “தொண்டர்கள்” தங்களைக் கதாநாயகர்களாக/ கதாநாயகிகளாக மாற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் இந்தப் பேரழிவு வழங்கிவிட்டது.  அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான வித்தியாசமான பின்னணியாக அந்த ஊர்கள் மாற, அரங்கப் பொருட்களாக ((Props) ) அந்தச் சிதைவுகள் மாற்றப்பட்டன.  தங்களது தியாக உணர்வுக்கான அங்கீகாரத்தை அவர்களே தேடிப் பெற்றுக்கொண்டு விட்டனர்.

ரிஷிகேஷில் ஆசிரமம் நடத்திவரும் ஓர் இந்து சாமியாரும் (அவரது வெளிநாட்டுப் பக்தை சகிதமாக) விவேக் ஓபராய் என்னும் நடிகரும் கடலூர் தேவனாம்பட்டினத்தை அறிவிக்கப்படாத படப்பிடிப்புத்தளமாக மாற்றிவிட்டது இதில் சொல்ல வேண்டிய ஓர் உபகதையாகும்.

இந்தப் பேரழிவைத் தொடர்ந்து சுனாமி முன்னெச்சரிக்கைக் கருவிகளைக் கடலில் நிறுவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.  அதற்கு இப்போது மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது.  இனி சுனாமி வந்தால் முன்கூட்டியே நமக்குத் தெரியவரலாம்.  இதனை விடவும் தீவிரமான இன்னொரு விஷயம் இருக்கிறது.  நமக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கிற, நமக்குத் தெரியாமல் நம்மை அரித்துக்கொண்டிருக்கிற அதிகாரம் பற்றிய வேட்கைதான் அது.  அது ஏற்படுத்துகிற அழிவு இந்தப் பேரழிவைவிட அதிகம்.  அதை வெளிப்படச் செய்திருக்கிறது இந்தச் சுனாமித் தாக்குதல்.  இதனை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?


No comments:

Post a Comment