Thursday, December 15, 2016

பிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா? - ரவிக்குமார்



செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவராக இருந்தபோதிலும் தமிழக பிராமணர்கள் பெரும்பாலோர் அவரைத் தமது பிரதிநிதியாகவே பார்த்தனர். சட்டமன்றத்திலேயே தனது சாதியைப் பற்றிப்பேசி அவரும் அதற்கு அங்கீகாரம் தந்தார். அவரது மறைவு இனி பிராமணர் ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக வருவது சாத்தியமா என்ற வினாவை எழுப்பியுள்ளது. இது பிராமணர்களுக்கு மட்டுமல்ல பிராமண எதிர்ப்பு அரசியல் செய்தவர்களுக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. 


எதிரெதிராக இருந்தாலும் பிராமண/அல்லாதார் அரசியலுக்கிடையே ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே  பாதிக்கப்பட்டவர்களின் குரல்களாகத் ( voices of victims ) தம்மை முன்வைத்துக்கொண்டன. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இவர்களின் கூக்குரலுக்கிடையே இந்த இரு தரப்பினராலும் பாதிக்கப்பட்ட தலித்துகள், மத சிறுபான்மையினர்களின் குரல்கள் மூழ்கிப்போயின.  


சுதந்திரத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அதிகாரத்திலிருந்து ( நிர்வாக, நீதித்துறை அதிகாரங்களிலிருந்து அல்ல) ஒதுக்கப்பட்ட காரணத்தால் அதற்குக் காரணமான இட ஒதுக்கீடு, தமிழ்ப் பற்று முதலானவற்றை விரோதமாகப் பார்த்த தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமது வெறுப்பு அணுகுமுறையைக் கைவிட்டு ஜனநாயகவாதிகளாக மாறுவதற்கு இதுவே உகந்த தருணம். இதுவரை அதிமுகவை ஆதரித்தோம் இனி நேரடியாக பாஜகவை ஆதரித்துவிட்டுப் போவோம் என்ற முடிவுக்கு அவர்கள் வருவார்களேயானால் அது பெரும் பிழையாகவே முடியும். தமிழுக்காகப் பாடாற்றியதிலும், மார்க்சியம் உட்பட முற்போக்குக் கருத்துகளை இம்மண்ணில் விதைத்ததிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  பலரை நாம் குறிப்பிட முடியும். அந்த மரபை மீட்டெடுக்கவும் பின் தொடரவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த படிப்பாளிகள் முன்வரவேண்டும். 


கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் மேலாதிக்கம் செய்துவந்த பிராமண எதிர்ப்பு அரசியல் இனி யாரைத் தனது எதிரியாக சுட்டுவது என்று திகைத்து நிற்கிறது.இந்துத்துவ எதிர்ப்பை பிராமண எதிர்ப்பாக மட்டுமே சுருக்கி இந்துத்துவத்தின் பயனாளிகளாக இருக்கும் பிராமணரல்லாதாரைக் காப்பாற்றிவந்த அதன் யுக்தி இனி செல்லுபடியாகுமென்று சொல்ல முடியாது. எனவே அவர்களும் தமது அணுகுமுறையை மாற்றியாகவேண்டும். 


சுருக்கமாகச் சொன்னால்,  பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் சாதி என்ற கண்ணாடி மூலமாகவே சமூகத்தைப் பார்த்துவந்த நிலையிலிருந்து விடுபடவேண்டும். இதுகாறும் அதிகாரத்திலிருந்து புறமொதுக்கப்பட்ட சமூகப் பிரிவினரும் அதிகாரத்தில் பங்கேற்க வழிவிடவேண்டும். அப்போதுதான்  ' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ நிலை தமிழ்நாட்டில் உருவாகும். 


No comments:

Post a Comment