‘‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’’ என்பது ஒளவையின் வாக்கு. ‘தந்தை தாய் பேண்’ என்று ஆத்திச்சூடியில் சொல்லி வைத்தவரும் அவர்தான். ஒளவையின் காலத்திலேயே பெற்றோரைப் புறக்கணிப்பதும், மூத்தோர் சொல்லை மதிக்காத தன்மையும் இருந்திருக்கிறது. அதனால்தான் இப்படியான அறநெறிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். பல நூறாண்டுகளுக்கு முன்பு ஒளவை சென்னதை இப்போது அரசாங்கம் சொல்கிறது. பெற்றோர் மற்றும் முதியோரின் பாதுகாப்புக்காக சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் இப்போது சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தாக்கல் செய்திருக்கிறார்.
குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமையை நமது அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்திருப்பதை நாம் அறிவோம். அந்த சட்டத்தின் பிரிவு 41ல் முதியோர், இயலாதோர் முதலானவர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. சமூக நலம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளதால் மத்திய அரசு மாநில அரசு இரண்டுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு.
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் ஏழு கோடி பேர் அறுபது வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது நமது மக்கள் தொகையில் ஏழு சதவீதமாகும். மருத்துவ வசதிகள் சற்றே கூடியிருக்கும் காரணத்தால் நம்முடைய ஆயுட்காலம் அதிகரித்திருப்பது முதியோரின் எண்ணிக்கை கூடுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது.
இன்றைய நாகரீக சமூகம் முதியோர்களை சுமையாகவே கருதுகிறது. அவர்களுக்குரிய மரியாதையை மட்டுமல்ல சமுகப்பாதுகாப்பையும் தருவதற்கு இளைய சமூகத்தினர் முன்வருவதில்லை. ‘‘இளமை நில்லாது, யாக்கை நிலையாது’’ என்று எத்தனை பேர் பாடினாலும் நமது மண்டையில் அது உறைப்பதில்லை. நமது திரைப்படங்களில் குழந்தைகளை விடவும் முதியோர்களே அதிகம் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாக்களின் நகைச்சுவைக் காட்கிளகளைக் கூறவேண்டும். வயதானவர்களைக் கேவலப்படுத்தும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் சிரிப்பு நமது அழுகல் புத்தியின் அடையாம்தான் என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.
நகர மயமாதலின் உபவிளைவுகள் பல. வாடகைக்கு வீடு கிடைப்பது நகரங்களில் மிகவும் அரிதாகி விட்ட நிலையில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலை தேடி வருபவர்கள் தமது பெற்றோர்களை கிராமத்திலேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். அப்படி கைவிடப்படுபவர்களுக்கு உழைத்துப் பிழைக்கத்தெம்பில்லாமல் போகும்போது அவர்களது நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. வயதானவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றைவிட மருத்துவ தேவைகளே முக்கியம். அத்தகைய சூழலில் அவர்கள் அனாதையாக்கப்படுவது போல குரூரம் வேறு எதுவும் இருக்க முடியாது. வயதான பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் பராமரிக்க வகை செய்யும் சட்ட ஏற்பாடு நமது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அதன்மூலம் ஒருவர் தீர்வு காண்பது சுலபமான காரியமல்ல. இதை உணர்ந்துதான் இப்போது இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.
வயதானவர்கள் என்று அழைப்பது இப்போது நாகரீகமாகக் கருதப்படுவதில்லை. அவர்களை ‘சீனியர் சிட்டிஸன்’ ‘மூத்த குடிமக்கள்’ என்று அழைப்பதே கௌரவம் என்று இப்போது கருதப்படுவதால் இந்த மசோதாவும் அந்தப் பெயரிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களது பிரச்சனை என்பது சாதி, மதம், இனம் அனைத்தையும் கடந்தது என்பதால் இந்த மசோதா எல்லா மதங்களையும் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும். அறுபது வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய எல்லோரையும் மூத்த குடிமக்கள் என்று இந்த மசோதாவில் வரையறுத்திருக்கிறார்கள். அனாதையான விதவைகள், மற்றும் வருவாய் எதுவுமற்ற பெற்றோர்கள் ஆகியோர் அறுபது வயதுக்குக்கீழ் இருந்தாலும் இந்த சட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள்.
முதியயோர்களை வாரிசுகள் உள்ள மூத்த குடிமக்கள், வாரிசே இல்லாத மூத்த குடிமக்கள் என இரண்டு வகையாக இந்த சட்டம் பிரித்துள்ளது. வாரிசு உள்ளவர்களுக்கான ஜீவனாம்சத் தொகையையும், பிற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீர்மானிக்க நடுவர் மன்றம் (டிரிப்யூனல்) ஒன்றை அமைப்பதற்கு இந்த சட்டம் வகை செய்கிறது. அது வருமான வரிக்கான மேல்முறையீட்டு நடுவர் மன்றத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என்றும் வரையறுத்திருக்கிறார்கள்.
நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒரு விண்ணப்பத்தின் மூலமாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். இதற்கென மேலாண்மை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். பதிவு செய்து கொள்வதற்கு அவர் உதவுவார். இதுதவிர மூத்த குடிமக்களுக்கு எழும் பிரச்சனைகளில் உதவவும், சிக்கல்களில் சமரசம் காணவும் தனியே ஒரு அதிகாரி (Conciliation Officer)நியமிக்கப்படுவார்.
முதியவர் ஒருவருக்கான ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது அவரது அந்தஸ்து, அவரது தேவைகள், அவரது சொத்துக்களின் மதிப்பு, அதிலிருந்து வரும் வருமானம், அவரது வாரிசுகளின் வருமானம் முதலியவற்றை நடுவர் மன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால் ஜீவனாம்சத் தொகையை அவர்கள் பகிர்ந்து வழங்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கு நடுவர்மன்றம் அடையாள அட்டை ஒன்றை வழங்கும். ஜீவனாம்சம் குறித்து நடுவர் மன்றம் வழங்குகிற தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அத்தியாயம் ஒன்பதின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புக்கு இணையானதாகும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் பிரச்சனை ஏற்பட்டால் அதை விரைவு நீதிமன்றங்களுக்கு அனுப்பி விசாரித்து அதை ஒரு மாதத்துக்குள் தீர்க்க வேண்டுமென இந்த சட்டம் கூறுகிறது.
வாரிசு இல்லாதவர்களுக்கு ஜீவனாம்சம், மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதற்கென்று ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டுமென அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, தாராள மனம் கொண்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் இந்த நிதிக்காக பணம் திட்டலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.
ஜீவனாம்சம் மட்டுமல்லாத முதியோருக்கான பாதுகாப்பு இல்லங்களை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும். அங்கே தங்க வைக்கப்படுகிற மூத்த குடிமக்களின் உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வசதி அந்த இல்லங்களில் செய்யப்படவேண்டும். தனியே வசிக்கும் முதியோர்களைப் பாதுகாக்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் இந்த சட்டம் வகை செய்கிறது.
முதியோர் பென்ஷன் திட்டம் என்பது தமிழ்நாட்டில் 1962 முதல் அமுலில் இருக்கிறது. அப்போது மாதம் இருபது ரூபாய் என வைத்திருந்தனர். அது கொஞ்சம் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டு இப்போது மாதம் நானூறு ரூபாய் வழங்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் இருநூறு ரூபாயாக இருந்ததை இப்போது நானூறு ருபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். இப்போது மத்திய அரசு கொண்டுவரும் சட்டம் இந்த உதவித்தொகையை குறைந்தது ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என்று கூறுகிறது. மூத்த குடிமக்களுக்கு வீடுகட்டவும், சுயதொழில் தொடங்கவும் வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மூத்த குடிமக்கள் வீடுகட்ட வங்கிகளில் வட்டியோடுகூட கடன் பெற முடியாது. இது மிகப்பெரும் அநீதியாகும்.
மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த சட்டமும் இதற்கான விதிகளும் நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் மூத்த குடிமக்களின் வாழ்வில் அது பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு மனம் வைத்தால் இதற்காக மாநில அளவில் சட்டமொன்றை உருவாக்க முடியும். மத்தியில் கொண்டு வரப்படும் சட்டத்தைவிட மேலும் கூடுதலான வசதிகளைக் கூட அதில் வழங்க முடியும்.
மாநில அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தை இப்படியான விஷயங்களில் நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். அதன் மூலம் இந்தியாவில் ஒரு முன்னுதாரணத்தை நமது மாநிலம் ஏற்படுத்த முடியும். வெகுவேகமாக நகரமயமாகி வரும் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை விடவும் கூடுதலாக முதியோர் பிரச்சனை உள்ளது. முதியோர் இல்லங்கள் நகரப்பகுதிகளில் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆதரவற்ற முதியோர் கிராமப்பகுதிகளில் தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படியான புகலிடங்கள் எதுவும் இல்லை. ஆங்காங்கே உள்ள கோயில்களே அவர்களுக்கு அடைக்கலம் தேடும் இடங்களாக உள்ளன. பிச்சையெடுக்கும் முதியோர் இல்லாத ஒரு கோயிலையும் தமிழ்நாட்டில் பார்க்க முடியாத நிலை இதனால் ஏற்பட்டதுதான்.
மூத்தோரின் இன்றியமையாமை பற்றி நமது இலக்கியங்கள் ஏராளமாகப் பேசியுள்ளன. ‘‘பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்’’ எனவும், ‘‘அறமுணர்ந்த மூத்தவர்களின் நட்பைப் பெறும் வகையறிந்து அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றும் வள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறார்.
குறள் என்றால் என்னவென்று அறியாத நமது ‘‘குத்துப்பாட்டு’’ தலைமுறை தமக்கான சமூக மதிப்பீடுகளை சினிமாவிலிருந்துதான் பெற்றுக்கொள்கிறது. எனவே, சினிமாக்களில் மூத்த குடிமக்களை இழிவுபடுத்துகிற காட்சிகளை அனுமதிப்பது பற்றி நமது அரசுகள் பரிசீலித்து இந்த சட்டத்தில் அதற்கும் ஒரு ஏற்பாட்டை செய்வது அவசியம்.
( 21.03.2007 ல் ஜூனியர் விகடனில் வெளியான எனது பத்தி )