Friday, August 25, 2017

ஹரியானா வன்முறையும் சீக்கிய மதத்தின் சாதிய பாகுபாடும் - ரவிக்குமார்



ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வன்முறை வெடித்து முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமாகியுள்ளன. கடவுளின் தூதுவர் எனத் தன்னை கூறிக்கொள்ளும் குர்மீத் ராம் ரஹீம் என்ற சாமியாரை கற்பழிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்ததே இதற்குக் காரணம். 

குர்மீத் ராம் ரஹீமுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகள் பெருமளவில் இவரது ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் சீக்கிய மதம் அவர்களை சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டி புறக்கணிப்பதும் ராம் ரஹீமின் அமைப்பான தேரா சச்சா சவுதா அவர்களுக்கு ஒரு சமூக மதிப்பைத் தருவதும்தான் என ஆய்வாளர் கார்த்திக் வெங்கடேஷ் என்பவர் கூறுகிறார் ( The Various Strands of Dalit Assertion in Punjab- Karthik Venkatesh, 25.1.2017, The Hindu Centre for Politics and Public Policy ) 

2007 ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் போல உடையணிந்து காட்சி தந்தார் என்பதற்காக குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது ராம் ரஹீமின் ஆதரவாளர்களான தலித்துகளின் பிரார்த்தனைக் கூடங்கள் தாக்கப்பட்டன.  அவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளானார்கள். இதன் பின்னணியில் இருந்த அரசியல்  காரணம் அவர் 2007 பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்ததுதான். அவரது ஆதரவால் அதுவரையில் அகாலிகளின் பிடியிலிருந்த மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது பாஜக - அகாலி கூட்டணிக்கு ஆத்திரத்தை தந்தது. அதனால் இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அவர்மீதும் அவரது ஆதரவாளர்கள்மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டன என்கிறார் கார்த்திக் வெங்கடேஷ். 

பஞ்சாப்பில் ராம் ரஹீமை எதிர்த்த பாஜக ஹரியானாவில் 2014 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது அவரது ஆதரவை நாடியது. அந்தத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ராம் ரஹீம் சாமியாரின் ஆதரவே காரணம். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து ராம் ரஹீம் சாமியாருக்கு ஹரியானா அரசு பலவிதமான சலுகைகளைக் காட்டிவந்தது. இப்போது ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுப்பதற்கு அந்த மாநில பாஜக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கும்கூட அந்த ஆதரவு நிலையே காரணம் என கூறப்படுகிறது. 

இப்போது வெடித்துள்ள கலவரத்தையும் வன்முறையையும் கண்டிப்பது மட்டும் போதாது. இதன் பின்னிருக்கும் காரணிகளையும் நாம் இனங்காண வேண்டும். 

* சீர்திருத்தங்களை முன்வைத்து உருவான சீக்கிய மதம் சாதிய அமைப்பை உள்வாங்கித் தோல்வி அடைந்திருப்பது. 

* சமூக நல அரசு என்ற நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. அதுதான் இத்தகைய சாமியார்களை நோக்கி மக்களைத் தள்ளுகிறது. 

* வாக்குவங்கி அரசியலுக்காக இதுபோன்ற சாமியார்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வது. அது சாமியார்களுக்கு ஒரு அங்கீகாரத்தைத் தருகிறது.

No comments:

Post a Comment