Tuesday, November 6, 2018

96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்


சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்ட 96 திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தேன். காதல்
நிறைவேறாமல் போவதற்கு சாதி, மதம், வர்க்கம் என்பவைதான் காரணம் என்பதாக ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த தர்க்கமும் இல்லாமல்கூட அது நடக்கலாம் எனச் சொல்கிறது இந்தப் படம்.

எந்தக் காரணமும் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்கிற காதலர்கள்
22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், போராட்டங்களும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. விரும்பியிருந்தால் கடந்திருக்கக்கூடிய எல்லைகள், நினைத்திருந்தால் விலக்கியிருக்கக்கூடிய மனத்திரைகள்- ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கதாநாயகனின் உறுதி கதாநாயகிக்கு மீள முடியா குற்ற உணர்வை உண்டாக்குகிறது. அவள் அதை கற்பனையில் கடக்க முயற்சிக்கிறாள். யதார்த்தத்தில் தவறிய நிகழ்வை கற்பனைக்குள் நேர்செய்து தன்னை அவனது காதல் மனைவியாக சொல்லிக்கொள்கிறாள். ஆனால் எல்லாம் ஒரு கணம்தான். அவனுக்கு கடந்தகால நினைவுகள் ஒரு பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவளோ எஞ்சிய காலத்தை கிளறப்பட்ட புண் போன்ற நினைவுகளோடு வாழ சபிக்கப்படுகிறாள். இது தோற்றுப்போன காதலில் மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. மனித மனம் அளக்கவே முடியாத ஆழங்களைக்கொண்டது. அதற்குள் எத்தனையோ நிலவறைகள், ஒவ்வொன்றிலும் இந்தக் கதாநாயகன் வைத்திருப்பதைப்போல எத்தனையோ பெட்டிகள்.

கதைக்கு நடுவில் தனது கணவர் இறந்துவிட்டதாகவோ, விவாகரத்து ஆகிவிட்டதாகவோ நாயகி சொல்லிவிடமாட்டாரா என எதிர்பார்க்கிறோம். அந்த அளவுக்கு களங்கமற்றதாக தீவிரமானதாக நாயகனின் காதல் இருக்கிறது.
படத்தின் இறுதியில் த்ரிஷா ஊருக்குப் போகாமல் தங்கிவிடுவாரோ என்று பார்வையாளர்களை அலைபாயச் செய்திருக்கிறார் இயக்குனர். எதிர்பார்க்கும் இத்தகைய நிகழ்வு எதுவும் இல்லாமல் முடித்திருப்பது மனதை கனக்கச் செய்கிறது.

நாயகி சாப்பிட்டு எஞ்சிய உணவை நாயகன் உண்பது; அவனது சட்டையின் வாசனையை நாயகி
ஆழ முகர்ந்து தேக்கிகொள்வது போன்றவை அவர்களுக்குள் ததும்பிக்கொண்டிருக்கும் பாலியல் விழைவுகளை சுட்டுவதாக இருந்தாலும் ஒரு இடத்திலும் ‘பிசகாமல்’ கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். பள்ளிப் பருவக் காதலைக்கூட பாலியல் மீறல்கள் இல்லாமல் காட்டமுடியாது என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் அதையும்கூட நெருடல் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

த்ரிஷா மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிந்த திறமையான நடிகை என்பதை இந்தப் படத்திலும் மெய்ப்பித்திருக்கிறார். அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் நினைவில் வந்துபோவதைத் தவிர்க்க முடியவில்லை.

விஜய் சேதுபதியின் பாத்திரம் பார்வையாளர்களின் இரக்கத்தைக் கோருவதாக அமைக்கப்பட்டிருப்பதால் அவர் சிரமப்படாமலே நன்றாக நடித்திருக்கிறார் என்ற பாராட்டு கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர் இதில் அவ்வளவு திறமையாக நடிக்கவில்லை என்பது என் கருத்து. இதே மாதிரி சிச்சுவேஷனில்  ஜானி திரைப்படத்தில் ரஜினி பின்னி எடுத்திருப்பார். அவரது உருவமும் முகத்தோற்றமும் அதற்கு பிரமாதமாக ஒத்துழைத்திருக்கும்.

இம்மாதிரி படங்களுக்கு இசை ஒரு பலம். அது ஜானி, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு படங்களுக்கும் வாய்த்திருந்தது.

அவதாரம் படத்தின் பாடல் வரிகள் பொருத்தமான முறையில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இளையராஜா  இசையின் மயக்கத்திலிருந்து தமிழ் இளைஞர்கள் விடுபடாதிருந்த காலம்தான் அது. இன்னும்கூட அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

கதாநாயகியைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கும் நாயகன் அவளது காதலை அறிந்துகொள்ளவில்லை என்பதும், கல்லூரிக்குப் போய் கேட்டதோடு  அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையென முடிவெடுத்து விலகிக்கொண்டு தூர இருந்தே ஆராதித்துக்கொண்டிருந்தான் என்பதும் கதையின் பலவீனமான அம்சங்கள். ஆனால் அதைக் கவனிக்கமுடியாதபடி காட்சிகள் நகர்கின்றன. ஒரே இரவில் நடக்கும் கதை என்பது படத்தின் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.

யதார்த்தம் என்கிற பெயரில் பாதி நேரம் மதுக் கடைகளிலேயே எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் , தமிழ்நாட்டில் ரௌடிகள் மட்டும்தான் வாழ்கிறார்களோ என்று எண்ணதோன்றுகிற படங்களுக்கு நடுவில்
நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்தப் படம். அதற்காக இந்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .