Thursday, October 21, 2010

சுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்   தமிழ்நாட்டில் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதியினருக்கு 1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தா. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி என்பதாகும். அவர் தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியை பயின்றார். அதன் பிறகு உயர்நிலைக் கல்விக்காக திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகாமணி என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்களை கிறித்தவ மதத்துக்கு மாற்ற அங்கிருந்த பாதிரிமார்கள் முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பினார். இதுபற்றி அவர் பேசியுள்ளதை இங்கே சுட்டிக்காட்டுதல் பொருத்தமாயிருக்கும்: ’மிஷனரிகள் நன்றாக வேலை செய்திருக்கிறார்களென்றாலும் அவர்கள் செய்கிறதில் என்ன பிசகு இருக்கிறது என்றால் என்னுடைய கிராமத்திலிருந்து நானும் இன்னொரு பையனும் எலிமெண்டரி ஸ்கூல் படிப்புப் படித்துவிட்டு திண்டிவனம் மிஷனரி போர்டிங் ஹைஸ்கூலில் படித்தோம் எங்களை கிறிஸ்துவர்களாகச் சொன்னார்கள். நான் கிறிஸ்துவனாகச் சேரமாட்டேன் என்று சொன்னேன். அப்படியானல் சாப்பாட்டிற்குப் பணம் கொடு என்று சொன்னார்கள். அதன்பேரில் நான் சாப்பிட்டதற்கு பணம் வசூலித்துவிடார்கள். அதனால் நான் பணம் செலவு செய்ய வேண்டியதாகி விட்டது.’
    பிழைப்பு தேடி அவரது பெற்றோர்கள் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அவரும் அங்கே சென்றார். அங்கு ஏற்பட்ட தொடர்புகளின் காரணமாக அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டது. தனது 17வது வயதில் தான் ஒரு சன்னியாசி ஆகப்போவதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு, அவர்களை விட்டு வெளியேறினார். பல்வேறு ஊர்களிலும் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளைச் சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியைப் பெற்றார். யோகி நீலமேக சுவாமிகள், தட்சணா சுவாமிகள், கைலாச சுவாமிகள் முதலானோர் அதில் முக்கியமானவர்கள். சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளை அவர் சந்தித்தது தான் அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனவும், அவர்தான் சகஜாநந்தாவை சிதம்பரத்துக்குச் சென்று அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார் எனவும், அதுமட்டுமின்றி அவரது பெயரை சகஜாநந்தா என்று மாற்றியவரும் கரபாத்திர சுவாமிகள் தான் என்றும் கூறப்படுவதுண்டு.ஆனால்,தன்னை சிதம்பரத்துக்கு அழைத்துவந்து அங்கேயே தங்கியிருந்து சேவை செய்யுமாறு தன்னிடம் கூறியவர் அ.முருகேசம் பிள்ளை என்பவரே என சகஜாநந்தா குறிப்பிடுகிறார்.’ திரு.அ. முருகேசம் பிள்ளை அவர்கள் 1910 ஆம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் தரிசனத்திற்கு தம்மோடு அடியேனையும் அழைத்துக்கொண்டு சென்று சிதம்பரத்தில் எம் குல மணியாகிய திருநாளைப்போவார் தீயில் மூழ்கிய ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியவர்களும் பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறு கட்டிடமாகிய சத்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய்க் காண்பித்து ஈண்டிருந்து ஏழைப் பஞ்சமர்கட்கு நன்மை செய்வது நலமெனத் தெரிவித்தார்கள்’ என அதை சகஜாநந்தா விவரித்திருக்கிறார்.
சிதம்பரத்துக்கு வந்த சுவாமி சகஜாநந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பினார்.அங்கிருந்த ஆன்மீகவாதிகளையும், வள்ளலாரின் வழியை ஏற்றுக்கொண்டிருந்த சில சன்னியாசிகளையும் அணுகித் தனது விருப்பத்தை தெரிவித்தார். தில்லை நடராசனை தரிசிப்பதற்காக வந்து சிதம்பரத்தில் அக்னியில் இறங்கி வேதியராகி சிவனோடு ஐக்கியமான நந்தனின் கதையை பெரிய புராணம் விளக்குகிறது. அந்தக் கதை அதன் பிறகு பல வடிவங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு கிராமப்பகுதிகளில் எல்லாம் பிரபலமாகி இருந்தது. கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திர கீர்த்தனை என்று அதை இசையோடுகூடிய பாடலாக எழுதி மேலும் பிரபலப்படுத்தி இருந்தார். அந்தத் தாக்கத்தினால் நந்தனைத் தனது முன்னோடியாக எடுத்துக்கொண்ட சகஜாநந்தா, நந்தனின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவெடுத்து 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி நந்தனார் கல்விக்கழகம் என்பதை நிறுவினார். இதனிடையே அவருக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் சைவ சமய பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் அவருக்கு உலகமெங்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச்சாலைக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.
சுவாமி சகஜாநந்தா துவக்கிய நந்தனார் கல்விச்சாலையில் முதலில் 25 மாணவர்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அது ஒரு கூரைக் கொட்டகையில் நடந்து வந்தது. அதன் பிறகு 1918ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அப்போது சென்னை மாகாண உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மடத்தையும், பள்ளியையும் நடத்துவதற்கு அரசாங்கத்தின் உதவியை சுவாமி சகஜாநந்தா நாடினார். பள்ளிக்காக நிலம் வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் சிதம்பரத்திலிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. சாதியுணர்வு கொண்ட அந்த அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். இதுபற்றி எம்.சி.ராஜா ’ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற தனது நூலில் எழுதியிருக்கிறார்: ’ சுவாமி சகஜாநந்தம் என்னும் ஆதிதிராவிட சன்னியாசி,மிகவும் சிறந்த பண்புகள் கொண்ட சாது. அவர் தான் நடத்திவருகின்ற நந்தனார் இலவசப் பள்ளிக்காக ஒரு துண்டு தரிசு நிலம் வேண்டுமெனக்கேட்டு விண்ணப்பித்தார்.அவரது விண்ணப்பம் வருவாய்த்துறையில் பணியாற்றிவந்த கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. சாதிவெறிபிடித்த அவர்களோ நிலம் தருவதற்குப் பரிந்துரைக்கவில்லை.ஆனால் சகஜாநந்தம் அத்துடன் விட்டுவிடவில்லை.மாவட்ட ஆட்சியரிடம் சென்றார்’. எனக்குறிப்பிட்டுள்ள எம்.சி.ராஜா, ஐ சி எஸ் அதிகாரியான அந்த பிரிட்டிஷ்காரர் நேரடியாக அந்த இடத்தைப்பார்வையிட்டு சுவாமி சகஜாநந்தம் அவர்களுக்கு நிலம் வழங்க உத்தரவிட்டார் எனத் தனது நூலில் பதிவு செய்திருப்பதோடு அந்த கலெக்டர் போட்ட உத்தரவையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்..’ அதன்பிறகு  ராஜகோபால ஆச்சாரியார் அந்தப் பள்ளிக்காக 52 ஏக்கர் நஞ்சை நிலத்தை அளித்தார் எனத் தெரியவருகிறது. 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள் நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்டது அந்தப் பள்ளியை காங்கிரஸ்காரர்களிடையே பிரபலப்படுத்தியது. அந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்குக் கல்வி தருவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. சுவாமி சகஜாநந்தா அவர்கள் 1926ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1932ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியை வகித்தார். அதன்பிறகு 1936 முதல் 1947 வரை மீண்டும் அவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947ல் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அது 1959ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அவர் காலமாகும்வரை தொடர்ந்தது.
சுவாமி சகஜாநந்தா அவர்களால் உருவாக்கப்பட்ட நந்தனார் பள்ளி இன்று தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்றென இரண்டு மேல்நிலைப்பள்ளிகளாக அது வளர்ந்துள்ளது. அந்தப் பள்ளிகளில் உள்ள விடுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் இப்போதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கி இருக்கிற கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்வி பயில்வதற்கு இந்தப் பள்ளிகளே இப்போதும் உதவியாக உள்ளன. தான் மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக இருந்தபோது சுவாமி சகஜானந்தா அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கிறார். கல்வியே செல்வம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த சுவாமி சகஜாநந்தா அந்தக் கல்வியின் பலன் தாழ்த்தப்பட்ட மக்களை சென்று சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் மேலவையிலும், பேரவையிலும் பேசியவற்றில் அதிகமாக கல்வியைப் பற்றியே வலியுறுத்தி வந்திருக்கிறார்.
சுவாமி சகஜாநந்தா அவர்கள் ஒரு ஆன்மீக வாதி மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை கொண்டு இருந்தவரும்கூட. சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் அவர் சமஸ்கிருதத்தை பயின்றதாகத் தெரிகிறது. வ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜாநந்தா சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையையும், அதற்கு இருந்த அங்கீகாரத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வ.உ.சி. மறைந்தபோது அவரது குடும்பத்துக்காக சுவாமி சகஜாநந்தா அவர்களே முன்னின்று நிதி திரட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆன்மீகவாதியாக இருந்தாலும் அரசியலிலும், சுவாமி சகஜாநந்தாவுக்கு தெளிவான பார்வை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும், காந்தியடிகளின் பிடிவாதத்தால் பூனா ஒப்பந்தத்தின் மூலமாக பறிக்கப்பட்டபோது அம்பேத்கருக்கு ஆதரவாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் சுவாமி சகஜாநந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா நிலைகளிலும் தமக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்று விடாமல் வலியுறுத்தியவர் அவர். கோயில்களில், தேவஸ்தான கமிட்டிகளில் ஆதிதிராவிடர்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். திருப்பதி தேவஸ்தானத்தில் அப்படி ஒருவரையாவது நியமியுங்கள் என்று வலியுறுத்தினார். அப்போது இருந்த ஜில்லா போர்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தென்னாற்காடு மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நான்கில் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ஜில்லா போர்டில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் தொகை கணக்குப்படி தாழ்த்தப்பட்டவர்கள் குறைந்த பட்சம் பத்து பேராவது ஜில்லா போர்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருவர் தான் இருக்கிறார். இது நியாயம் அல்ல. எல்லா இடங்களிலும் நான்கில் ஒரு பங்கைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சுவாமி சகஜாநந்தா வலியுறுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் 1930ஆம் ஆண்டில் அங்கிருந்த கள்ளர் வகுப்பினர் ஒரு மாநாடு கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பல்வேறு கட்டளைகளைப் போட்டார்கள். அதனால் அந்தப் பகுதி எங்கும் பதட்டம் உண்டானது. அந்தப் பிரச்சனை குறித்து சட்ட மேலவையின் கவனத்தை ஈர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு ஆதரவாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை சகஜாநந்தா வலியுறுத்தினார்.
அன்றைக்கு இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தபோது சென்னை மாகாண அரசு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பள்ளிகள் பலவற்றை மூடியது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் வேண்டுமானால், மற்ற சாதி இந்துக்கள் படிக்கின்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்கட்டும் என்று அரசு கூறியது. அதை எதிர்த்த சுவாமி சகஜாநந்தா தாழ்த்தப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகளில் வேண்டுமானால் பிற வகுப்பு மாணவர்களைக் கொண்டு வந்து சேருங்கள். இந்தப் பள்ளிகளை மூடாதீர்கள் என்று வாதிட்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்ற சாதியினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் உள்ளது என்பதை அரசாங்கத்திடம் எடுத்துச் சொன்னார். பம்பாய் மாகாணத்தில் இருப்பதுபோல தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனி போர்டு சென்னை மாகாணத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வட்டமேஜை மாநாட்டில் சென்னை மாகாணத்தின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 40 இடங்கள் தரவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. சென்னை வாக்குரிமை கமிட்டியார் அதை 25 இடங்களாக குறைத்தார்கள். காபினட் கூட்டத்திலோ அதை 18 என்று இன்னும் குறைத்து விட்டனர். இது அநீதி மக்கள் தொகைப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களைக் குறைக்காமல், கொடுக்க வேண்டும் என்று சுவாமி சகஜாநந்தா சட்ட மேலவையில் குரல் எழுப்பினார். அன்றைய காலத்தில் பஞ்சாயத்து கோர்ட்டுகள் இருந்தன. நீதி நிர்வாகம் அங்கேயே செய்யப்பட்டது. மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் பஞ்சாயத்து கோர்ட்டுகளை உருவாக்கியதாக சொன்னது. ஆனால் அப்படி உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட்டுகள் ஏழை மக்களுக்குக் கேடாக முடிந்து விட்டது என்று சுவாமி சகஜாநந்தா எடுத்துக்கூறினார். பஞ்சாயத்து கோர்ட்டுகள் அமைக்கப்படுவதற்கு முன்பு வசதி உள்ளவர்கள் வழக்குப் போட வேண்டுமென்றால் தொலைதூரம் போகவேண்டும் என்று அஞ்சி எளிதில் வழக்கு தொடுக்க முன்வருவதில்லை. ஆனால் பஞ்சாயத்துக் கோர்ட்டுகள் அமைத்த பிறகு தன்னிடம் கூலி வேலை செய்பவன் இரண்டு மூன்று நாள் வேலைக்கு வரவில்லை என்றால் கூட உடனே கோர்ட்டில் புகார் கொடுத்து ஏழை மக்களை நீதிமன்றத்திற்கு இழுக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே இது மக்களுக்கு நன்மை தரவில்லை என்பதை சுவாமி சகஜாநந்தா எடுத்துக்கூறினார்.
இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் மட்டுமல்லாது வன்கொடுமைகள் குறித்தும் அவர் பல்வேறு பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். சிதம்பரத்தை அடுத்த நஞ்சைமகத்துவாழ்க்கை என்ற கிராமத்தில் மாசி மகத்திருவிழாவை கொண்டாடுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அந்த ஊரைச்சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை அவர் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். ‘‘இக்காலத்தில் எங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுப்பாதையில் நடக்கக்கூடாதென ஜாதி இந்துக்கள் தடுப்பார்களானால் நாங்கள் எப்படி பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியும்? வட்ட மேஜை மாநாட்டில் மகாத்மா போன்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே அவர்களை வேறு பிரிக்கக் கூடாதெனச் சொல்லியது அனுபவ சாத்தியமாகுமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
மின்சார உற்பத்தி அரசாங்கத்தின் பொறுப்பில் தான் இருக்க வேண்டும். தனியாரிடம் அதை கொடுக்கக்கூடாது என்று சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வாதிட்டது இப்போதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ‘‘சர்க்காரே இந்த மின்சார சக்தியை நேரே தங்களிடம் வைத்து ஏழைகளுக்குச் சப்ளை செய்தால் ஏழைகளுக்குக் குறைந்த சார்ஜில் கொடுக்கலாம். சர்க்காருக்கும் லாபம் உண்டாகும். இப்பொழுது அந்நிய கம்பெனிகளுக்குக் கொடுத்துவிட்டதினால் ஏராளமான பணத்தை இடையிலுள்ள கம்பெனிக்காரர்கள் லாபமாக அடித்துக்கொண்டு போகிறார்கள்’’ என்று அவர் பேசியது இன்று பேசியது போல் இருக்கிறது.
தமிழகம் இந்தி எதிர்ப்புக்கு பெயர் போனது. ஆனால் சுவாமி சகஜானந்தா இந்தி அவசியம் என்று பேசி உள்ளார். ‘‘எங்கள் பிள்ளைகளைப் பொறுத்த வரையில் எத்தனை பாஷையானாலும் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் புஸ்தகம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறேன். எங்கள் ஜாதி முன்னேற்றமடைய வேண்டுமானால் எத்தனை பாஷை வேண்டுமானாலும் கற்றால்தான் முன்னேற்றமடைய முடியும். படிப்பில் ஹிந்தியை கட்டாயம் என்று வைத்திருக்கிறதை உத்தியோகத்திற்கும் கட்டாயம் என்று வைக்க வேண்டுமென்று யோசனை கூறுகிறேன். ஆனால் நான் வற்புறுத்தவில்லை. ஹரிஜனங்களில் ஒவ்வொரு பிள்ளைகளும் ஹிந்தி முதலான பல பாஷைகளைப் படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும்’’ என்பது அவரது வாதம்.
விவசாயிகள் பிரச்சனையை அணுகியதிலும் சுவாமி சகஜானந்தா வித்தியாசமான நிலையையே எடுத்திருக்கிறார். உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களைப் பற்றிப் பேசும்போதும் நிலமில்லாதவர்களாயிருந்த ஏழைகள்மீதே அவரது கவனம் சென்றிருக்கிறது. விவசாயிகளை ஏவுதல் விவசாயி, ஏற்றுதல் விவசாயி என அவர் இரண்டாகப் பிரிக்கிறார். உழுது பயிரிடும் வேலையைச் செய்பவர்களை ஏற்றுதல் விவசாயி என அவர் குறிப்பிடுகிறார். நிலவரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் நிலவுடமையாளர்களான ஏவுதல் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஏற்றுதல் விவசாயிகளை கவனத்தில் கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார். ‘‘ஏர் உழுகிறவர்கள் விஷயத்தில் அனுதாபங் காட்டவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியிருக்கும் நிலைமையில் சிலர் என்ன செய்கிறார்கள். பாலுக்குச் சக்கரை வேண்டுமென்று அழுகிறார்கள். கூழுக்கு உப்பில்லை என்று சொல்லவில்லை. நிலவரியைக் குறைக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். நாட்டில் உழுகிறவனுக்குக் கஞ்சி கிடைக்கிறதா, துணி கிடைக்கிறதா, சுகாதாரம் கிடைக்கிறதா, மருந்து கிடைக்கிறதா என்று பார்க்கிறதில்லை. வாஸ்தவத்தில் நாட்டில் ஏழை விவசாயிகள் எப்படி இருக்கிறார்கள். நெருப்பில் விழுந்த புழுக்கள்போல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முதலாளியும் அவர்களைத் தங்களுடைய நிலங்களில் பயிர் செய்யும்படி செய்கிறார்கள். அறுப்புக்காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியத்தை கொடுப்பதில்லை. ஆடி மாதம் வரையில் கொடுக்காமல் இழுத்துக்கொண்டுபோய் ஆடி மாதத்தில் கணக்குப் பார்க்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் புதிய குறுவை நெல்லைக் கொடுக்கப் பார்க்கிறார்கள்’’ என்று அவர் பேசியிருப்பது அரசியல் கட்சிகளெல்லாம் விவசாய தொழிலாளர்களைத் தொடர்ந்து புறக்கணிக்கும் இன்றைய நிலையிலும் பொருத்தமானதாக இருக்கிறது.
கோயில்களை அனைவருக்கும் திறந்து விடுவதாக அரசாங்கம் செய்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை என்பதை அவர் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறார். ‘‘ஆலயப் பிரவேச சட்டம் பெரிய ஆலயங்களில் அமுலுக்கு வந்துள்ளது. சிறிய கோயில்கள் மூடியே கிடக்கிறது. சீர்காழி தாலுகாவில் திருநகரி, திருவாலி முதலான இடங்களில் திறந்த ஒரு நாள் தவிர மறுநாள் முதல் ஹரிஜனங்களை வரவேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். சட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால் கனம் ஸ்பீக்கர் அவர்கள் தான் பல கோவில்களைத் திறந்து விட்டிருக்கிறார். அவைகளிலும் இப்பொது ஹரிஜனங்களை அனுமதிக்கவில்லை. திறந்துவிட்ட திருநகரி, திருவாலி கோவில்களில் இவ்வாண்டு தை அமாவாசையில் நடக்க வேண்டிய 12 கருடசேவையை நிறுத்தி விட்டார்கள். சட்டத்தை இயற்றியும் பலனை அனுபவிக்க முடியாமலிருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.திருவிதாங்கூர் கோயில் நுழைவுபற்றி அம்பேத்கர் சொன்னதும் சகஜாநந்தா சொல்வதும் ஒன்றுபோலவே இருக்கிறது.’ கோயில் நுழைவு மட்டும் போதுமா? அதற்குமேல் எதுவும் வேண்டாமா? என்று கேட்ட அம்பேத்கர் தேவஸ்தானத்துறை தீண்டாத மக்கள் கையில் ஒப்படைக்கப்படுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இன்று அலோபதி மருத்துவமுறை எல்லா இடங்களிலும் கோலோச்சி வருகிறது. அதில் எவ்வளவோ வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், இப்போதும் கூட பல நோய்களுக்கு அதில் சரியான மருந்து கிடையாது. அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவ முறையில் பக்க விளைவுகள் அதிகம். இதை உணர்ந்து இந்திய மருத்துவத்தை, தமிழ் மருத்துவத்தை இங்கே அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என சுவாமி சகஜானந்தா வலியுறுத்தி இருக்கிறார். ‘‘டாக்டர்கள் வெளிநாட்டு மருந்துகளுக்கு ஏஜென்டுகளாகத்தான் இருக்கின்றார்கள். என்னென்ன மருந்துகள் எந்தந்த வியாதிக்குக் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் மருந்துகளை வாங்கிக் கொடுக்கச்சொல்லி விடுகிறார்கள். ஆகையால் வெளிநாடுகளிலிருந்து தமிழ் முறையிலுள்ள மருந்துகளை அவர்கள் தெரிந்துகொண்டு அவைகளைக் கொடுத்து சிறந்த தமிழ் முறையில் அவர்கள் வைத்யம் செய்யவேண்டும். இப்பொழுது இந்திய வைத்திய முறையில் அநேகம் பேர்கள் பயிற்சியடைந்து அவர்கள் சிகிச்சை செய்து அதனால் அநேகம் பேர்கள் கூட குணமடைந்திருக்கிறார்கள். அதே மாதிரி ஒவ்வொரு ஜில்லாவிலும் இந்திய வைத்திய கல்லூரியை ஏற்படுத்திப் பிள்ளைகளுக்குப் பயிற்சியளித்து தமிழ் முறையில் சிகிச்சை செய்யும்படியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இப்பொழுது ஒரு அணா£ ஒன்றரை அணாவில் சிகிச்சை செய்யும்படியான இந்திய மருந்துகளிலிருக்கின்றன. அவ்விதம் இருக்கும்பொழுது இன்ஜெக்ஷன் பண்ணுவதற்கு ரூ.3, 4 என்று கொடுத்து வெளிநாட்டு மருந்துகளை வாங்கி வருகின்றார்கள். ஆகவே குறைந்த சிலவில் நல்ல சிகிச்சையடையும்படியாக இந்திய வைத்திய கல்லூரியை அமைத்து பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுத்து இந்திய முறையில் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அவர் வலியுறுத்தியது இன்றும் பொருந்தக்கூடியவையே ஆகும்.
      இந்தியாவிலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட்டில் அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்கிற ‘சிறப்பு உட்கூறுத் திட்டம்‘ பற்றி இப்போதுதான் நாம் பேசுகிறோம்.ஆனால் அதை சுவாமி சகஜாநந்தா அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளார்.’ நம் மாகாணத்தில் ஹரிஜனங்கள் ஐந்தில் ஒரு பங்கு இருக்கிறார்கள். ஆகையால் மாகாண வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஏழைகளுக்கு செய்ய வேண்டியது அவசியம். 55 கோடி வருமானம் வந்தால் 11 கோடி ஒதுக்க வேண்டும். இதில் லேபர் டிபார்ட்மெண்டுக்கு ஒரு கோடி ஒதுக்கிவிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஏழைகளுக்கு நிலங்கள் வாங்கிக்
கொடுக்க வேண்டும். இப்படி 30 வருஷம் செய்தால் ஏழைகள் நில சுவாந்தார்களாவார்கள்’என்று அவர் வற்புறுத்தியிருப்பது இதற்கொரு சான்றாகும்.
      அயோத்திதாசப் பண்டிதர் தமிழ் பௌத்தத்தை தாழ்த்தப்பட்ட மக்களின்  மீட்சிக்கான பாதையாக முன்வைத்தார்.ரெட்டமலை சீனிவாசன்,எம்.சி.ராஜா போன்ற தலைவர்களோ அரசியல் அதிகாரம் பெறுவதன்மூலமே இந்த மக்கள் விடிவுபெற முடியும் என்றனர்.சுவாமி சகஜாநந்தா ஆன்மீகமும்,கல்வியும்தான் இந்த மக்களை ஈடேற்றும் என நம்பினார்.இந்தத் தலைவர்களின் பாதைகள் வேறாக இருந்தாலும் அவர்களது நோக்கமெல்லாம் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் இந்த மக்கள் விடுதலைபெற வேண்டும் என்பதாகவே இருந்தது.இன்றும்கூட அவர்களது சிந்தனைகள் நமக்குக் கைவிளக்காக இருக்கின்றன.
      சுவாமி சகஜாநந்தா பல்வேறு நூல்களை எழுதியதாகவும், பரஞ்சோதி என்ற பத்திரிகையை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் அவை இப்போது கிடைக்கவில்லை.நம்மிடையே அண்மைக்காலம்வரை வாழ்ந்த அவரது பதிவுகளைத் தேடியெடுப்பதுவும்கூட கடினமான பணியாகவே இருக்கிறது.நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவையில் ஆற்றிய முதல் உரையில் சுவாமி சகஜாநந்தாவை நினைவுகூர்ந்தேன்.அவர் உருவாக்கிய நந்தனார் பள்ளியைத் தமிழ்நாட்டிலேயே தலை சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றவேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன். ப்ளஸ் டூ தேர்வில் 2006 ஆம் ஆண்டில் வெறும் ஏழரை சதவீதமாக இருந்த தேர்ச்சி, 2008 ஆம் ஆண்டில் எழுபது சதவீதமாக உயர்ந்ததற்கு நான் எடுத்த நடவடிக்கைகளும் ஒரு காரணமாகும்.இப்போது கல்வியில் ஆர்வம்கொண்ட நண்பர்கள் துணையோடு அந்தப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கும்கூட நாடகம் முதலான பிற துறைகளிலும் வல்லுனர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளியின் சூழல் வெகுவாக இப்போது மாற்றப்பட்டுள்ளது.
     இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோதுதான் சுவாமி சகஜாநந்தாவின் உரைகளைத் தொகுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.தமிழக சட்டப் பேரவை நூலகம் போதுமான பணியாளர்கள் இல்லாததால் சரியான பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.அங்கு எந்தவொரு நூலையும் எளிதில் தேடிக் கண்டுபிடித்துவிட முடியாது.பேரவை உரைகளும் ஆண்டுவாரியாக அடுக்கிவைக்கப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியாகப் படித்துப் பார்த்துதான் அதில் உள்ளவற்றைத் தெரிந்துகொள்ளமுடியும்.படிக்கும்போது தூசு நாசியை அடைக்கும்.ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்குள் பத்து தும்மலாவது போடவேண்டியிருக்கும். அந்தச் சூழலில் தொகுக்கப்பட்டவைதான் இந்த நூலில் உள்ள உரைகள்.இன்னும் தொகுக்கப்படாதவை ஏராளமாய் இருக்கக்கூடும்.அவற்றையும் கண்டெடுத்து நூலாக்கவேண்டும். கிடைத்தவரைக்கும் முதலில் நூலாக்கிவிடுவோம் என்ற எண்ணத்தில்தான் இந்நூல் உருவாக்கப்பட்டு உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக சுவாமி சகஜாநந்தா ஆற்றியுள்ள அரும்பணிகள் நம்மையும் அந்தத் திசை நோக்கிச் செலுத்துமென்று நம்புகிறேன். சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் அவர் செய்த பணிகளை நாம் தொடரவேண்டும்.அப்படிச் செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.

(சுவாமி சகஜாநந்தா அவர்கள் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளைத் தேடித் தொகுத்து  பதிப்பித்திருக்கிறேன் ( கல்வியே செல்வம், கரிசல் பதிப்பகம், 2008) அதற்கு எழுதப்பட்ட முன்னுரை இது ) 

No comments:

Post a Comment