Friday, June 29, 2012

பிரான்மலைக் கல்வெட்டுகள்



அண்மையில் பிரான்மலைக்குச் சென்றிருந்தேன். பாண்டியர் காலக் குடைவரைக் கோயில் அமைந்திருக்கும் அங்கு ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவை படிஎடுக்கப்பட்டதாக அங்கிருந்த சிவாச்சாரியார் சொன்னார்.
அவற்றைப் பற்றி http://www.thevaaram.org தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி இது:


இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால் கி.பி. 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார்.

இத்தலத்தில் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால் மண்டபம் (-144 of 1903), லக்ஷ்மி மண்டபம்(-142 of 1903), முதலிய மண்டபங்களும் , விசுவநாதர் கோயில்(-146 of 1903), சுப்பிரமணிய சுவாமி கோயில் (-152 of 1903) முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஷ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 of 1903). இறைவன் மங்கைநாதர்(-138 of 1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 of1903) எனவும், நல்லமங்கைபாகர் எனவும், (-154 of 1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 of 1924) குறிப்பிடப்பெறுகின்றார்.

பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். கி.பி. 1251 - 1264க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 of 1903).

1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூ ரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்(-208 of 1934). குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 of 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித் தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 of 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 of 1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 of 1924), உற்சவத்திற்காகவும் (-196 of 1924), கானூர் முதலிய இடங்களை அளித்தனர்.



இரா . நாகசாமி அவர்களின்  'கல்வெட்டுத் துணைவன் ' நூலை ஆராய்ந்தபோது அங்கிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை 80 க்கும்  அதிகமாக இருப்பதும்  அந்தக் கல்வெட்டுகள் பல இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதும்  தெரிந்தது.

பல நூற்றாண்டுகாலத் தொன்மை வாய்ந்த அக் கல்வெட்டுகளின் மதிப்பு தெரியாத தமிழர்கள் அந்தக் கல்வெட்டுகளின் மீது எப்படியெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறார்கள் எனப் பாருங்கள். இதை சரிசெய்ய தமிழகத் தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்காதா ? 




4 comments:

  1. என்ன கொடுமை! என்ன அறியாமை, பாதுக்காக்கத் தெரியாமை!
    மக்களின் அறியாமை ஒரு புறம் எனில், அரசின் பொறுப்பின்மை நெஞ்சைக்
    கொதிக்கச் செய்கின்றன! இன்னும் சில இடங்களில் கல்வெட்டுநர்கள் அழித்து
    வீடுகட்டும் கல்லாக்குகின்றனர்!!

    பகிர்வுக்கு நன்றி!

    இதே போல குற்றாலத்திலும் குற்றாலநாதர் கோயிலின் சித்திர சபையில்
    உள்ள மிக அழகான ஓவியங்கள் மிகப்பாழான
    நிலையில் உள்ளன!! நூற்றுக்கணக்கான இடங்களில் இப்படி இருக்கும் என்றே நினைக்கின்றேன்!
    நாம் தமிழர்கள் என்று சொல்லவே வெட்கப்பட வேண்டும். எந்தவகையான அரசியல் சாய்வுகளும்
    இன்றி இவை தமிழர்களின் வரலாற்றுத் தடங்கள் என்று காக்க வேண்டாமா? கோடி கோடியாக
    செலவழிக்கின்றார்களே!! (கொள்ளை அடிப்பதைக் கூறவில்லை, மக்கள் வரிப்பணத்தைக் கூறுகின்றேன்!)

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்!
    ஏதும் மீட்கும் திட்டங்கள் உள்ளனவா?? உருவாக்க இயலுமா??

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete
  2. Dear Ravi, Here is a mail I received a few months ago from Dr.T.Trautmann on the status of Tamil inscriptions. This might interest you.
    Regards
    Theodore Baskaran

    Dear Baskaran,

    Well, no, not all Tamil inscriptions have been translated. They are very abundant--on the order of 20,000--and of course they are hard to read. Each year new inscriptions are found and copied and taken to the Office of the Chief Epigrapher in Mysore, and a short notice of each inscription is published in the Annual Report. This includes a short summary of the contents of the inscription, but not a full translation. The next stage is for large numbers of inscriptions to be published in the series called "South Indian Inscriptions", but generally it is the Tamil text only, generally without translation, because they are too numerous to translate. Early issues of South Indian Inscriptions included translations as I recall, but I believe it takes so much time to produce a careful translation, and the numbers of inscriptions collected grew so great with annual collecting trips, that a large backlog built up, and in order to get at least the Tamil texts to the scholarly world they started to not working out full translations. I believe that is the story. Finally, there would be very few inscriptions for which we have more than one translation. For most we have only the English summary in the Annual Reports.

    Does that give you the information you need?

    The main issue is that Tamil inscriptions are very abundant. The total corpus of inscriptions in India collected and published in some form is over a lakh, but Tamil inscriptions alone make up about one fifth of the all-India total, because there are so very many Tamil temples from Chola times, and earlier.

    Best,
    Tom

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம்
      நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு நன்றி . அந்தக் கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளின் நிலை கண்ணீர் வரவழைக்கிறது. மிகவும் தொன்மையான கல்வெட்டுகள். வட்டெழுத்துகள் முதல் அண்மைக்காலக் கல்வெட்டுகள் வரை அங்கு இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அந்தக் கோயில் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. அங்கு செல்லும் பொதுமக்கள் அதுகுறித்து அக்கறை காட்டவில்லைஎன்றால் என்ன செய்தாலும் அவற்றைப் பாதுகாக்க முடியாது. அததகைய விழிப்புணர்வை உருவாக்கவேண்டியது எல்லோரதும் கடமை. குறிப்பாக ஊடகங்களுக்கு அதில் பங்கிருக்கிறது. நம்மால் ஆன வழிகளில் அதைச் செய்வோம்.
      ரவிக்குமார்

      Delete
  3. பல கோயில்களிலும் இந்த கீழ்மை இருக்கிறது. தொன்மம் தொலைகிறதே
    என்றில்லாவிடிலும், தூய்மை கெடுகிறதே என்ற எண்ணம் வருகுதில்லை.
    80% கல்வி அறிவு இதனைக் குமுகத்திற்கு இன்னும் கொடுக்கவில்லை.

    கோயில்கள் மட்டுமில்லை, இதர பொதுஇடங்களிலும் கீழான நிலைதான்.

    சென்னை இரிச்சி தெருவில் உள்ள மின்னணு பொருட்கள்
    விற்பனை செய்யும் வளாகத்தில், மாடிக்குப் போகும் படிக்கட்டுகளின் இரண்டு
    பக்கச் சுவர்களிலும் தெய்வப் படங்களாக ஒட்டி இருந்தார்கள்.
    என்னடா, பக்தி இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் முற்றி விட்டதா என்று
    எண்ணி மேலே ஏறிவிட்டேன். திரும்பி வரும்போதுதான் புரிந்தது,
    யாரும் படிக்கட்டுகளில் வெற்றிலை எச்சிலைத் துப்பாமல் இருப்பதற்காக
    அப்படிச் செய்திருக்கிறார்கள் என்று. எண்ணிப் பார்க்கவே வெட்கமாகத்தான்
    இருக்கிறது.

    பாதுகாக்கப் படவேண்டிய எழுத்துகள் கோயில் சுவற்றில் இருக்குமானால்,
    அந்தச் சுவற்றை ஒட்டி தெரிசன வரிசை அமைக்காமல் கோயில் நிருவாகம்
    செய்யுமானால் ஓரளவு சுவற்றைக் காப்பாற்றலாம். தெரிசன வரிசையை ஒரு நாலடி தள்ளி அமைத்துக் கொள்வதால் ஏதும் குறை வராது. அறநிலையத்துறைக்கு
    இதுகுறித்து எழுதி, அவர்கள் முயற்சி எடுத்தால் கட்டாயம் பயன் கிடைக்கக்கூடும்.
    மற்றபடி, பொதுமக்களின் விழிப்புணர்வு, பொறுப்புணர்வுகளை நம்பி இருக்க முடியாது.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete