ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் 14 ஆவது பேரவையின் சர்வதேச காலமுறை மீளாய்வில் இலங்கை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்ததோடு இலங்கை எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகள் சிலவற்றையும் பட்டியலிட்டது.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே, “ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சிறிலங்கா அரசு ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத் தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய யோசனைகளையோ திட்டங்களையோ முன்வைக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
’’18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கை அரசின் கையில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டது குறித்தும், அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்த இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாதது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். முன்பு போர் நடந்த இடங்கள் ராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் அன்றாட வாழ்விலும், பொருளாதார விவகாரங்களிலும் ராணுவத் தலையீடுகள் உள்ளன. 2010 முதல் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளன. காணாமற்போதல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் இலங்கையில் இப்போதும் தொடர்கின்றன”
’’கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. எதிர்கட்சிப் பிரமுகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், தடுத்து வைக்கப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த நம்பகமான விசாரணைகளோ, சட்டநடவடிக்கைகளோ இல்லை. கடந்த 30 நாட்களுக்குள் நீதித்துறைச் சுதந்திரத்தில் அரசியல் தலையீட்டுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் சட்டமூலத்துக்கு சவால் விடுத்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் கொழும்பில் தாக்கப்பட்டுள்ளார். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை”
இந்தக் கவலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்கா சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.
1.பொதுமக்களின் நிகழ்வுகளில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றுதல், காணாமற்போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் குறித்து பதிலளிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல், மரணச்சான்றிதழ் வழங்கல், காணி சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்குதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.
3.மனிதஉரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, வெளிப்படைத்தன்மையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும்.
4. தலைமை நீதியரசரை பதவிநீக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாக இன்று செய்திகள் வந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு நீதித்துறையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்." என்று தெரிவித்தார்.
அமெரிக்காவைப் போலவே இந்தியாவும், இலங்கை நிறைவேற்றிட வேண்டிய பொறுப்புகளைப் பட்டியலிட்டது. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி நவனிதா சக்ரவர்த்தி:
“வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை, முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் உள்ளிட்ட சில விடயங்களில் சிறிலங்கா எட்டியுள்ள முன்னேற்றங்களை இந்தியா வரவேற்கிறது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.விரைவான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்”.
’’2013ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி, அங்குள்ள மக்கள் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், தனியார் நிலங்களில் இருந்து படையினரை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்குதல், பொதுமக்களின் வழமையான செயற்பாடுகளில் நிலவும் இராணுவத் தலையீட்டை அகற்றுதல், உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, பெருமளவு பொதுமக்களின் இறப்புகளுக்குக் காரணமான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும்”.
’’நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு விரைவான நடவடிக்கையை எடுக்கும் என இந்தியா எதிர்பார்க்கிறது” என்று நவனிதா சக்ரவர்த்தி தெரிவித்தார்.
எதிர்பார்த்ததுபோலவே சீனப் பிரதிநிதி இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்தார். இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர் அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டென்மார்க்கின் பிரதிநிதி மிகவும் கடுமையாக இலங்கை அரசை விமர்சித்தார். சட்டவிரோதமான கொலைகளைப் புரிந்த ராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும். கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் நீதி அமைப்பின் முன்னால் நிறுத்தப்படவேண்டும்.சட்டவிரோதமான சிறைச்சாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்படவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் பிரதிநிதி நான்குமுறை தனது கருத்துகளையும் விளக்கங்களையும் அளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். அவரைத் தவிர 99 நாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த விவாதத்தின் முடிவில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்படப் போகிறது என்பதில்தான் விவாதத்தின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளின் மதிப்பு அடங்கியிருக்கிறது.
விவாதத்தில் கலந்துகொண்டு பேசியவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என்றே தோன்றுகிறது. இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போதாது எனவே சுயேச்சையான விசாரணை வேண்டும் என்ற கருத்து எவராலும் முன்வைக்கப்படவில்லை. எனவே அத்தகைய நெருக்கடி எதுவும் இப்போதைக்கு இலங்கை அரசுக்கு உருவாகவில்லையென்றே சொல்லலாம்.
சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துருவாக்கும் பணியில் ஈழத் தமிழர்கள் இன்னும் அதிகமாகத் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் துரோகிகளாக்க முற்படுவதானது சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையைக் கைவிட்டு வேறுபக்கம் தமது கவனத்தைத் திருப்பவே வழிவகுக்கும்.
( சில தகவல்கள் புதினப்பலகை இணைய தளத்திலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளன )
No comments:
Post a Comment