Thursday, May 12, 2011






1.

நான் நரமாமிசபட்சணியாக மாறிவிட்டேன்

எனது வசிப்பிடத்தில் உணவுக்குப் பஞ்சம் இல்லை என்றபோதிலும்

மனிதர்களைத் தின்னப் பழகிக்கொண்டுவிட்டேன்

 

முதலில் பிணங்களைத் தின்னுவதிலிருந்துதான்

இது ஆரம்பித்தது

அசைவமாயிருந்ததால்

செத்துப்போன பறவைகளை, கால்நடைகளை

உண்ணும்போது மனிதர்களைமட்டும் ஏன் விலக்கவேண்டும்?என்று

எனக்கு நானே

சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்

பொறுமை போயிற்று

மனிதர்கள்

சாகும்வரைக்கும் காத்திருப்பது

கஷ்டமாகிவிட்டது

எனவே

உயிருள்ளவர்களை உட்கொள்ள ஆரம்பித்தேன்

அதிலொரு சிக்கல்

நமது இரை நம்மைவிடப் பலவீனமானதாய் இருக்கவேண்டும்

அல்லது அதைப் பலவீனப்படுத்தும் உபாயம்

நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்

 

சொற்களைக்கொண்டு

பலத்தைப் பறிக்கும்

சூட்சுமங்கள் வசப்படலாயிற்று

அதைப் பழகிக்கொண்டபோது

'மதியூகி' என்று ஆர்ப்பரித்தனர் மக்கள்

 

இப்போதோ

'என்னைச் சாப்பிடு' 'என்னைச் சாப்பிடு'

என்கிறது கூட்டம்

அஜீரணத்தை எண்ணி

அச்சம் கொள்கிறேன் நான்

 

2.

 

தரையை ரத்தத்தால்

மெழுகும்போது

வீடு மிளிர்கிறது

அதுவும்

குழந்தைகளின் ரத்தமாயிருந்தால்

ரொம்பவும் நல்லது

நிச்சயம் அவை உங்கள் குழந்தைகளாக இருக்கப்போவதில்லை

உங்கள் உறவினர்களின்

அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களின்

குழந்தைகளாகவும் இருக்காது

அப்புறம் ஏன் தயங்கவேண்டும்?

 

வீடுகளை மட்டுமல்ல வீதிகளையும்

நகரங்களையும் ரத்தத்தால்

மெழுகுங்கள்

தசைகளைப் பிய்த்துத் தெருக்களை

ஜோடியுங்கள்

தலைமுடியைப் பொசுக்கி வாசனையூட்டுங்கள்

கவனமாயிருங்கள்

குழந்தைகளின் ரத்தத்தைப் பிடிக்கும்போது

அவை அலறுவதைக் கேட்காதீர்கள்

அந்த ஒலி உங்கள் காதுகளில் விழாமலிருக்க

தெய்வங்களின் பெயர்களை முழங்குங்கள்

சாகும்வேளையில் கடவுளின் பெயரைக்கேட்டால்

அவற்றுக்கும் புண்ணியம்தானே.

 

 

 

 




No comments:

Post a Comment