Monday, June 25, 2012

'டெசோ' மட்டும் போதாது




ரவிக்குமார், எழுத்தாளர், முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை சிறுத்தைகள் கட்சி | ஜூன் 23, 2012 11:48
எதிர்வினை
'கடந்த காலத்தைத் திரும்பிப்பார்த்தல் என்பது, முன்னேறிச் செல்வதன் உண்மையான அறிகுறி’ என்று ஒரு சிந்தனையாளர் சொன்னார். அது, ஈழப் பிரச்னைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகளோடு முடிந்த ஈழப் போராட்டத்தைப் பற்றி நிதானத்தோடு ஆராயும் அளவுக்கு நமது மனம் இன்னும் அமைதி அடையவில்லை. இதைத்தான் கடந்த தசஇ இதழில் வெளியான டெசோ குறித்த கட்டுரைகள், கருத்துகள் சுட்டுவதாகக் கருதுகிறேன்.
  இன்று தமக்கு நேரும் அநீதியை எதிர்த்துக் குரலெழுப்பவோ போராடவோ இயலாத நிலையில், ராணுவத்தினரின் அச்சுறுத்தலின்கீழ் ஈழத் தமிழ் மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக வழிமுறைகள் யாவும் அடைக்கப்பட்டிருக்கின்றன. சாத்வீகமான முறையில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தக்கூட அங்கே சிங்கள அரசு அனுமதிப்பதில்லை. இந்தச் சூழலில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள்தான் தாயகத்திலிருக்கும் மக்களுக்காகப் போராடவேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற அவர்களது இடைவிடா முயற்சியும் ஒரு காரணமாகும்.
ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு இதுவரைப் பொருட்படுத்தவே இல்லை. ‘‘சட்டவிரோதமான கைதுகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. யுத்தத்தின் முடிவில் கைது செய்யப்பட்ட போராளிகளில் பெரும்பாலோர் ‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்’ புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு எவ்வித விசாரணையுமின்றிக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றும் அரசியல் உறுதிப்பாடு இலங்கை அரசிடம் இல்லை. எனவே போர்க்குற்றங்கள் குறித்து சுயேட்சையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு ஐ.நா அவையிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. தற் போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 20 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அரசின் பிரதிநிதி தமது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுவிட்டு, கடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் தேவையற்றது எனக் கூறியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தம்மால் இயன்ற அளவு போராடினாலும் கடந்த முறை ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இந்தியா மேற்கொண்ட நிலை ஒரு முக்கிய காரணமாகும். தமிழக அரசும் இங்கிருக்கும் அரசியல் கட்சிகளும் நெருக்குதல் தராமல் போயிருந்தால் இந்தியா அந்தத் தீர்மானத்தை ஆதரித்திருக்காது. ஈழத் தமிழர் சிக்கலுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் கருத்துருவாக்கம் செய்ய இந்த ஐ.நா தீர்மானம் பெரிய அளவில் உதவியிருக்கிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது.
ஈழப் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்கள் எவரும், ஈழப் போராளிகள் இந்திய அரசைப் பற்றியும், தமிழக அரசைப் பற்றியும் எத்தகைய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கலாம். அவர்கள் ஒரு காலத்தில் இந்திய அரசால் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் என்றாலும் வெகு விரைவிலேயே இந்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டுவிட்டார்கள். முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தம் எப்படித் துவங்கியது? இலங்கை அரசுக்கு இணையாக ஓர் அரசாங்கத்தை நடத்தியவர்கள், முப்படைகளை மட்டுமின்றி தற்கொலைப் படை என்ற நான்காவது ஒரு படையையும் வைத்திருந்தவர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற கேள்விகள் முக்கியமானவை. இதில், சர்வதேச அரசியல் சூழல், இந்திய தமிழக அரசுகளின் நிலை என்பன உள்ளிட்ட புறவயமான காரணங்கள் மட்டுமின்றி, அகவயமான காரணங்களும் ஆராயப்படவேண்டும். ஆனால், லத்தீன் அமெரிக்க நிலை குறித்து ஆய்வுசெய்து ‘புரட்சிக்குள் புரட்சி’ என்ற நூலை எழுதிய ரெஜி டெப்ரே போல ஈழப் போராட்டத்தை ஆராயக்கூடியவர்கள் நம்மிடையே இல்லை. அதற்கான சில கூறுகளைக் கொண்டிருந்த ‘தராகி’சிவராம் போன்றவர்களின் மரணம் இங்கே நினைவுகூரப்படவேண்டியதாகும்.
ஐ.நா சபை போன்ற அமைப்புகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச அபிப்ராயம் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனில், அது இந்திய அரசின் துணையின்றி நடக்காது. இந்திய அரசை நிர்ப்பந்திக்கும் வலிமை தமிழகக் கட்சிகளுக்கே இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஈழப் பிரச்சனையில் தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன. இந்த ஆதரவுச் சூழலை ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காணும்வகையில் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவேண்டியது நம் கடமை. அதற்கு ‘டெசோ’ மாநாடு மட்டும் போதாது. இங்கிருக்கும் ஒவ்வொரு கட்சியும் தம்மால் இயன்ற வகையில் அதற்காகப் பாடாற்ற முன்வரவேண்டும்.
http://www.thesundayindian.com/ta/story/டெசோ-மட்டும்-போதாது/31/2391/

No comments:

Post a Comment