Wednesday, April 24, 2013

ரவிக்குமார் கவிதை



தர்மபுரி 1

வீடுகளை எரிப்பவர்களுக்கு இப்போது
இரவின் ஆதரவு தேவைப்படுவதில்லை
பகலில்
பெருமிதம் சுடர்விடும் முகத்தோடு
அவர்கள் கொளுத்துகிறார்கள்

அவிழ்த்துவிடப்பட்ட
பட்டி மாட்டைப்போல
தென்படுகிற அனைத்தையும் மேய்கிறது
அவர்கள் வைத்த நெருப்பு
சிறார்களின் பாடப் புத்தகங்களும்
சேலைத் தலைப்பில்
முடித்து வைக்கப்பட்ட பணமும்
ரேஷன் கார்டும் வீட்டுப் பத்திரமும்
நெருப்புக்குக் காகிதம்தான்

அறை அறையாகத் தேடி
மரச் சாமான்களைத் தின்று
உலோகப் பொருட்களை உருக்கி
'குகைக்குள் சென்ற
அலிபாபாவின் அண்ணனைப் போல'
ஆசைகொண்டு அலைகிறது நெருப்பு

நெருப்புக்குத் தெரிவதில்லை
தூளித் துணியின் அருமை
கூரைப் புடவையின் முக்கியத்துவம்

எரிக்கபட்ட வீட்டைப் பார்க்கிறவர்
சாம்பலைக் கிளறிக் கிளறி
தன் நினைவுகளின் மிச்சங்களைப்
பொறுக்குகிறார்
சமையலறையின் வாசம்
குழந்தைகளின் மழலை
அப்பா உயிர்நீத்த இடம்
படங்கள் மாட்டப்பட்டிருந்த சுவர்

இழப்பும் ஆற்றாமையும்
உந்தித்தள்ள
இடம்பெயரும் அவர்மனதில்
எரியத் தொடங்குகிறது
அணைக்கவே முடியாத பெருந்தீ







1 comment:

  1. அன்புள்ள ரவிகுமார்
    வணக்கம்.உங்கள் கவிதை சமுகப் பொறுப்புள்ள கவிக்குரல்.அருமையாக வந்துள்ளது.காட்டு நெருப்புத்தான் எழுவாயாகித்(தொடர்நிலையிலும் பொருள்நிலையிலும்)தன்னைச் சார்ந்தவர்களைச்சுட்டெரிக்கும் என்பார்கள்.இவர்கள் வைத்தது செயப்படுபொருள் தீ என்றாலும் அது எழுவாய்த் தீ என்பதை உங்கள் கவிதை இயல்பான வாக்கிய அமைப்பால் சொல்லிச் செல்லுகிற நயத்தை உணர்ந்தேன்.எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியார்ப் பிழைத்தொழுகுவார் என்ற குறள்(896)இதைத்தான் கூறுகிறது.அதற்குச் சேர்ந்தாரைக் கொல்லி என்ற பெயரும் உண்டு.பிறருக்கு வைத்த தீ தன்னையும் சுடும்.ஊரையும் சுடும்.இவையெல்லாம் எப்போது உணரப்போகிறார்கள் இந்தப் பே(ர்)தைப் பெருமக்கள்.
    அன்புடன்கி.நாச்சிமுத்து

    ReplyDelete