Wednesday, April 3, 2013

ஈழம் இனி' ஒருநாள் ஆய்வரங்கம்

நண்பர்களே வணக்கம்!

ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் அனைத்துத்தரப்பு மக்களையும் எட்டியிருக்கிறது. அரசியல் தளத்தின் ஒருபகுதியில் மட்டும் பேசப்பட்டுவந்த நிலை மாறி இப்போது சிவில் சமூகம் என சொல்லப்படும் பகுதியையும் அது ஆக்கிரமித்திருக்கிறது. இதில் ஊடகங்களின் பங்களிப்பு முதன்மையானது.

இப்போது உணர்வு நிலையில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை அறிவுத் தளத்துக்குக் கொண்டு செல்வதன்மூலமே அதைப் பயனுள்ள வகையில் வளர்த்தெடுக்க முடியும்.
தற்போதைய எழுச்சியை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளவே அரசியல் கட்சிகள் முனையும். அது ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நன்மை பயப்பதாக இருக்காது.

ஒருபுறம் வலதுசாரித் தன்மைகொண்டு அடிப்படைவாதமாக உருவெடுக்கும் தமிழ்த் தேசியவாத அமைப்புகள்; இன்னொருபுறம் சுயநிர்ணய உரிமையைக்கூட அங்கீகரிக்காமல் தேசிய சகதியில் சிக்குண்டு கிடக்கும் மைய நீரோட்ட இடதுசாரிக் கட்சிகள். இவற்றுக்கு அப்பால் இன்னும் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியத்துக்கும் தலித் அரசியலுக்குமிடையே ஊடாடும் தலித் இயக்கங்கள்- இப்படி தமிழக அரசியல் களம் கூறுபட்டுக் கிடக்கிறது. அதனால் கருத்தியல் தளத்திலும் குழப்பம் நிலவுகிறது.

இந்திய அரசியலில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலை மாறி இப்போது தனிமைப்படுத்தப்படும் சூழல் துலக்கமாகத் தெரிகிறது. டெல்லியை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் அதிகாரவர்க்கம் தமிழகத்தை ஒவ்வாமையோடும் வெறுப்போடும்தான் பார்க்கிறது. அதன் காரணமாகத் தமிழகத்தை ராணுவமயப் படுத்தவும்,வடகிழக்கு மாநிலங்களைப்போல பதற்றமான பகுதியாக அறிவிக்கவும் அவர்கள் முனையக்கூடும்.

மாநில உரிமைகளுக்கான நியாயமான போராட்டங்களே பிராந்தியக் கட்சிகள் உருவெடுக்கக் காரணம். அவை அதிகாரத்துக்கு வந்தபிறகு தேசியக் கட்சிகளின் பிரதி பிம்பங்களாகிவிட்டன. தற்போது எழுந்திருக்கும் குரல்களும் அவர்களால் தன்வயப்படுத்தப்படலாம் அல்லது அவை வலுவிழந்து காணாமல் போகலாம். ஜனநாயகத்தை விரும்புவோர் அதற்கு அனுமதிக்கக் கூடாது.

இந்நிலையில், தற்போதைய எழுச்சிக்கு அரசியல் தலைமை கொடுப்பது யார் என்பதைவிடவும் கருத்தியல் தலைமை கொடுப்பது எப்படி என ஆராய்வதே உடனடித் தேவை என மணற்கேணி கருதுகிறது. அதற்காகவே இந்த ஆய்வரங்கு. ஈழப் போராட்டத்தின் கடந்த காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்று எதிர்காலத்துக்கு ஒளியேற்றும் ஆய்வுகளை மணற்கேணி வரவேற்கிறது. வெற்று முழக்கங்களைத் தவிர்த்து விவாதங்களை முன்னெடுக்க விழைகிறது.
...........

'ஈழம் இனி' ஒருநாள் ஆய்வரங்கம்
மே மாதம் 4ஆம் தேதி, புதுச்சேரி

இருங்கிணைப்பு: மணற்கேணி

பதிவு செய்துகொள்ள : manarkeni@gmail.com

No comments:

Post a Comment