தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் கேள்வி
கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2012 ஆம் ஆண்டில் தலித் மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக மதுரையைச் சேர்ந்த 'எவிடன்ஸ்'என்ற அமைப்பு ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. விழுப்புரம், விருதுநகர்,தருமபுரி,தேனி ஆகிய மாவட்டங்கள் சாதி வெறியாட்டத்தில் முன்னணியில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் 2048 வழக்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் அந்த வழக்குகளில் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாடு முழுவதும் பெண்கள்மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற கடந்த 2012 ஆம் ஆண்டில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக தமிழ்நாட்டில் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆனால் அதில் ஒரு குற்றவாளிகூடத் தண்டிக்கப்படவில்லை. பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முந்திக்கொண்டு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் தலித் பெண்கள்மீதான வன்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தபோதிலும் நீதிமன்றம் தலையிட்டு ஆணைப் பிறப்பித்த தருமபுரி வழக்கில் மட்டும்தான் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகளில் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதைத் தமிழக அரசு ஆராய்ந்து பார்க்கவேண்டும். தலித் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் சாதிவெறியர்களை அரசு கட்டுப்படுத்தாததே இதற்கு முதன்மையான காரணம். அவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக தமிழக அரசு அவர்களின் வெறுப்புப் பிரச்சாரத்தை சுதந்திரமாக அனுமதித்து வருவது வேதனை அளிக்கிறது.இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டின் அமைதி கெடுவதோடு மாநிலத்தின் வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கும் என்பதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சாதிவெறியர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது. அத்தகைய குறுகிய நோக்கத்தில் செயல்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும் என்பதைத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஈழத் தமிழர் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவும், தமிழக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய சூழலில் அவர்களிடையே பகையை ஏற்படுத்திப் பிரிவினையைத் தூண்டும் சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும், நலிந்த பிரிவினரான தலித் மக்களைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment