Friday, April 5, 2013

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும்




தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள் 

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப்  பலகோடி ரூபாய்  செலவு செய்யப்பட பிறகு இந்தத் திட்டத்தை என்.எல்.சி நிறுவனம் கைவிட்டிருப்பதால் அந்தத் தொகை முழுவதும் வீணாகியிருக்கிறது. தற்போது சீர்காழியில் துவக்கப்பட இருக்கும் திட்டத்துக்கும் இதேபோல மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே அந்தத் திட்டமும் செயல்படுத்தப்படமுடியாத நிலை உருவாகலாம். இப்படி ஒவ்வொரு திட்டமும் கைவிடப்பட்டால் அது மாநில வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. எனவே தமிழக அரசு ஜெயங்கொண்டம் திட்டத்தை என்.எல்.சி துணையின்றி மாநில அரசின் திட்டமாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  

நிலம் கையகப்படுத்துவதில் உள்ள முதன்மையான பிரச்சனை நிலத்துக்கு மிகவும் குறைவான விலை நிர்ணயிக்கப்படுவதுதான். அதனால் தான் விவசாயிகள் நிலத்தைக் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலத்தின் விலை குறைவாக நிர்ணயிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் மத்திய அரசின் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தக் கொள்கையை ( National Rehabilitation and Resettlement Policy  2007 ) அப்படியே மாநில அரசு பின்பற்றுவதுதான். மாநில அரசு தனக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கினால் நிலத்துக்கான விலையை நிர்ணயிப்பதிலும், மறு குடியமர்த்தம் தொடர்பான அணுகுமுறையிலும் மாநிலத்தின் சூழலை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும். அதன்மூலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையை வெகுவாகத் தீர்த்துவிட முடியும். 

ஜெயங்கொண்டத்தில்  நிலத்தைக் கையகப்படுத்துவது வெறுமனே கட்டிடங்கள் கட்டுவதற்கு அல்ல. நிலத்துக்குக் கீழே இருக்கும் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குத்தான். எனவே இப்படி கனிமவளத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது அந்த நிலத்தின் விலையை அந்த நிலத்தின்கீழே இருக்கும் கனிம வளத்தின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கவேண்டும்.  அத்துடன் மறு குடியமர்த்தம் செய்யும்போது இடம்பெயரும் மக்களுக்குத்  தரமான வீடுகளைக் கட்டித் தருவதற்கும், அவர்களுக்கு வாழ்க்கை உத்தரவாதங்களை ஏற்படுத்தித் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய திட்டத்துக்கான பணியாளர்களை இடம்பெயரும் குடும்பங்களிலிருந்தே தேர்வு செய்யவேண்டும். அதற்கு ஏற்ப அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வேண்டும். 

தற்போது நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்கள் பிரச்சனையே இதுவரை தீர்க்கப்படாமல் தொடரும் நிலையில் புதிய திட்டங்களுக்கு எவரும் நிலம் கொடுக்க முன்வர மாட்டார்கள். இதைத்  தமிழக அரசு புரிந்துகொண்டு மாநில அளவிலான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தக் கொள்கையை உருவாக்க முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். 

இதுமட்டுமின்றி,  தான் வழங்கும் மின்சாரத்துக்கான விலையை இனிமேல் ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்போவதாகவும் நெய்வேலி நிர்வாகம் கூறியிருக்கிறது.  அதனால் எதிர்காலத்தில் தமிழக அரசு கூடுதல் விலையை செலுத்த நேரிடும். அந்த சுமை  மக்கள் தலையிலேயே வந்து முடியும். எனவே என்.எல்.சி நிர்வாகம் தற்போது இருக்கும் விலைக் கொள்கையையே தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். 


No comments:

Post a Comment