Sunday, April 21, 2013

இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா?

 
                           இந்திய அரசுக்கு தொல். திருமாவளவன் கண்டனம்

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சுஜாதா, தரங்கிணி,வருணா ஆகிய மூன்று கப்பல்கள் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன. பயிற்சி பெற்ற சிங்களப் படையினருக்கு இந்திய தூதரகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பகே என்பவர் இலங்கைக் கடற்படையினரில் 80% பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 இது தமிழக மக்களைப் புண்படுத்துவதாக இருக்கிறது தமிழக மீனவர்கள்மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவோடுதான் நடத்தப்படுகிறதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. 

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதும் அவர்கள் இந்திய மீனவர்களையே தாக்குவதும் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய கேவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை. இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதென்பது அதற்கு தேசிய ஒருமைப்பாட்டின்மீது நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது. இது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று சுட்டிக்காட்டுகிறோம்.


No comments:

Post a Comment