Wednesday, July 15, 2015

தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கக்கூடாது



ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கக்கூடாது என மத்திய அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையால் அனைத்து மாநிலங்களிலும் இருபது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள்கூட விடுதலைபெறாமல் அல்லலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மாநில அரசுகளின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பற்றியும் வேறு சில சட்ட சிக்கல்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று விசாரணையைத் துவக்கியது. இருபது ஆண்டுகளைக் கழித்த சிறைவாசிகளை விடுவிக்க அனுமதிக்கவேண்டும் என மாநில அரசுகளின் சார்பில் கோரப்பட்சது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற அமர்வு இசைவளிக்கவில்லை. " நாங்கள் இந்த வழக்கை விரிவாக விசாரிக்கப்போகிறோம். இறுதியில் நாங்கள் தீர்ப்பளித்த பின்பே அவர்களை வெளியில் விடுவதா சிறையிலேயே வைத்திருப்பதா என்பது தெரியும்" என தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். 

இது ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை பற்றிய மனித உரிமைப் பிரச்சனை மட்டும் அல்ல; இது மாநில உரிமை குஇத்த பிரச்சனை. மாநில உரிமைகளை விரிவுபடுத்தவேண்டும் எனக் கேட்ட காலம் போய் இப்போது இருக்கிற உரிமைகளையாவது காப்பாற்றினால் போதும் என நினைக்கிற நிலை. இந்தப் பிரச்சனையில் பாஜக ஆளாத மாநிலங்கள் அனைத்தையும் ஓரணியில் திரட்டவேண்டும். அதை யார் செய்வது? இந்த விஷயத்தை ராஜிவ் கொலையோடு மட்டும் சுருக்கிப் பார்க்கிற காங்கிரஸ் செய்யாது, மாநில உரிமை என்ற விஷயத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியது தமிழ்நாடுதான். இங்கிருந்துதான் இப்போதும் அதற்கான முன்முயற்சி செய்யப்படவேண்டும். 

No comments:

Post a Comment