Saturday, July 4, 2015

கலைஞர் பேட்டி எழுப்பும் கேள்வி

நிலையான ஆட்சியா ? ஜனநாயக ஆட்சியா? 
============
இன்று (05.07.2015) தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கும் கலைஞரின் நேர்காணலில் ஒரு முக்கியமான பிரச்சனை ஓரிரு வரிகளில் கடந்துசெல்லப்பட்டிருக்கிறது. " இந்தியாவுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்ற அடிப்படையில்தான் ' நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியைத் தருக ! ' என்று கூறவேண்டிய நிலைக்கு திமுக வந்தது " என கலைஞர் பதிலளித்திருக்கிறார். 

இதிலிருந்து நமக்கு எழும் கேள்விகள்: 

1. மக்களுக்குத் தேவை ஜனநாயக ஆட்சியா? நிலையான ஆட்சியா? ஜனநாயக ஆட்சி வேண்டுமென்பதால்தானே பெரும்பான்மை பலம் கொண்ட இந்திராவின் அரசை அதன் அவசரநிலைப் பிரகடனத்தை திமுக எதிர்த்தது? 

2. நிலையான ஆட்சிதான் திமுகவின் நோக்கமென்றால் அது எப்படி வி.பி.சிங் ஆட்சி முதற்கொண்டு பல்வேறு கூட்டணி ஆட்சிகளை மத்தியில் ஆதரித்தது? அவற்றில் பங்கெடுத்தது? 

நிலையான ஆட்சி என்றால் அது ஒரு கட்சியின் தலைமையில் உருவாகும் பெரும்பான்மை ஆட்சிதான் என்ற தவறான கருத்து இந்திய அரசியலில் அண்மைக்காலமாக உடைத்தெறியப்பட்டுள்ளது. நிலையான ஆட்சி என்பதால் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஆதரிக்க முடியாது. தற்போதுகூட பெரும்பான்மை பலத்தோடு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது நிலையான ஆட்சிதான். அதற்காக பாஜக அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை திமுக ஆதரிக்கமுடியுமா? 

பெரும்பான்மை பலம் இருந்தாலும் சர்வாதிகார ஆட்சி நிலையானதாக இருக்கமுடியாது. அது மக்கள் சக்தியால் எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியப்படலாம். அதைத்தான் அவசரநிலைக் காலம் உணர்த்தியது. கொடுங்கோலர்கள் இங்கே நிலைத்து கோலோச்ச முடியாது என்பதே அது தந்த பாடம். மக்களுக்குத் தேவை ஜனநாயக ஆட்சிதான். ஜனநாயக ஆட்சியே நிலையான ஆட்சியாகவும் இருக்கும். 

No comments:

Post a Comment