Thursday, July 30, 2015

கட்சிகளுக்குத் தேவை திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் - ரவிக்குமார்



திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்றாலே அது வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் தேவை என்ற தவறான புரிதல் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அதனால்தான் அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம். 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு நிறுவனம் தான். அவற்றில் பல லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு அரசியல் கட்சியில் பணியாற்றுவதற்கான குறைந்தபட்ச திறன்களைப் பெற்றிருக்கிறார்களா ? என்று நாம் பார்ப்பதில்லை. பல கட்சிகளில் இரண்டாம் நிலையிலிருக்கும் தலைவர்களுக்கே தொடர்புத் திறன்  ( communicative skill ) இருப்பதில்லை. உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம்,  பாராளுமன்றம் ஆகியவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற பலருக்கும் அந்த அவைகளில் பணியாற்றுவதற்கான குறைந்தபட்சத் திறன்கள்கூட இருப்பதில்லை. இதனால் அவர்கள் தற்சார்பு அற்றவர்களாக உள்ளனர். தற்சார்பற்றத் தொண்டர்களின் பெருக்கம் தனிநபர் வழிபாட்டுக்கும் , நெறியற்ற நடைமுறைகளுக்கும் இட்டுச் செல்கிறது. சுயநலம் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைமைகள் இந்தப் போக்கை ஊக்குவிக்கலாம். ஆனால் காலப்போக்கில் அதுவே அந்தக் கட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும். 

" மூலதனம் என்பது உயிரற்ற உழைப்பு. அதுவொரு ரத்தக் காட்டேரியைப்போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சித்தான் உயிர்வாழமுடியும்" என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டது அரசியல் கட்சி என்னும் நிறுவனத்துக்கும்கூடப் பொருந்தும். திறனற்றத் தொண்டர்கள் மற்றவர்களை உறிஞ்சித்தான் வாழமுடியும். 


தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகளின் முதன்மையான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த சிக்கலைக் களைந்து தொண்டர்களின் திறன்களை வளர்த்தால் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கிருக்கும் தலைமைப் பஞ்சம் தீரும். 

ஒவ்வொரு கட்சியும் தமது தொண்டர்களுக்குத் தேவையான அடிப்படைத் திறன்களைக் கண்டறிந்து பயிற்றுவிக்க திறன் மேம்பாட்டு மையங்களைத் துவக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். 

No comments:

Post a Comment