Saturday, July 25, 2015

பிரியச் சுமை



அப்பாவின் நினைவு ஏனோ இன்று என்னை மிகவும் அலைகழிக்கிறது. இரவு உட்கார்ந்து எழுந்தபோது என் முதுகுத் தண்டில் திடீரென ஏற்பட்ட வலியினால் நிமிர்ந்து நடக்க சற்று சிரமப்பட்டபோதுதான் அப்பாவின் நினைவு வந்தது. அவரும் இப்படித்தான் முதுகுத் தண்டு வலியால் கஷ்டப்பட்டார். 

ஆஸ்துமாவில் அவர் பட்ட துன்பம் இப்போது நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது. அந்த சமயங்களில் அவரோடு இரவெல்லாம் மருத்துவமனைகளில் கிடந்தேன். மூச்சு இளைக்கும்போது என் தோளை ஒரு கையால் இறுகப் பிடித்துக்கொள்வார். டாக்டரில்லாத நள்ளிரவுகளில் நர்ஸிடம் மன்றாடி அவருக்கு ஊசியோ மருந்தோ கொடுக்கச் செய்வேன். எப்போது அவருக்கு இயல்புநிலை திரும்பும் எனத் தெரியாது. வீட்டில் இருப்பதைவிட மருத்துவமனையில் இருப்பதே நல்லது எனத் தோன்றும். கிராமத்தில் எங்கள் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இரண்டு கிலோ மீட்டருக்குமேல் தொலைவு. இரவில் மூச்சுத் திணறல் வந்தால் அப்பாவை சைக்கிள் கேரியரில் வைத்து தள்ளிக்கொண்டே போவேன். வழிநெடுக அழுதுகொண்டே வந்தேன் என்பது மருத்துவமனையை நெருங்கும்போதுதான் எனக்கே உறைக்கும். ' பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது' என பாப் மார்லி சொன்னதாகப் படித்திருக்கிறேன். ஆனால் பணத்தால் மருந்து மாத்திரைகளை வாங்கலாம். அப்பா நோயில் மிகவும் துடித்த காலங்களில் நான் மாணவன். அவருக்கு நல்ல மருத்துவ வசதிகளைச் செய்திருந்தால் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். 

நான் வங்கியில் வேலையில் சேர்ந்து சற்றே நல்ல நிலைக்கு வந்தபோது அப்பா போய்ச் சேர்ந்துவிட்டார். என் அம்மாவிடமும், அப்பாவிடமும் காட்டாத பிரியத்தைத்தான் யாரிடம் காட்டுவதென்று தெரியாமல் இப்போது சுமந்துகொண்டு அலைகிறேனா தெரியவில்லை. 

No comments:

Post a Comment