Sunday, February 14, 2016

தோழர் அபராஜிதா : மாணவர் போராட்டங்களின் குறியீடு - ரவிக்குமார்



ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டிருக்கும் தோழர் அபராஜிதா அங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் ராஜாவின் மகளான அபராஜிதாவின் அரசியல் செயல்பாடுகள் அங்குள்ள ஏபிவிபியினருக்கு ஆத்திரமூட்ட்டியுள்ளன. 

ஆளும் பாஜகவினரால் இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலின் இலக்காக தோழர் அபராஜிதாவும் ஒருவராகஉள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அபராஜிதாவையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யவேண்டுமென துண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அவரைப் போலிஸ் தேடுகிறது என்று இன்றைய தினமலர் நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. தோழர் ராஜாவுக்கும் அபராஜிதாவுக்கும் கொலைமிரட்டல்களும் விடப்பட்டுள்ளன. 

இன்று தோழர் டி.ராஜாவிடம் பேசினேன். இயல்பான அரசியல் உறுதியையும் தாண்டி அவரது குரலில் ஒரு தந்தையின் கவலையை உணரமுடிந்தது. அபராஜிதாவுக்கு எதிராக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆனால் ஏபிவிபி யினர் அவரையும் கைதுசெய்யுமாறு வலியுறுத்துகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தோழர் ராஜா வந்திருந்தார். அவரோடு தோழர் ஆனி ராஜாவும் அபராஜிதாவும் வந்திருந்தனர். அந்த மாநாட்டுப் பணிகளில் ஒரு volunteer ஆக அபராஜிதா சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். 

கம்யூனிஸ்ட் தோழர்களின் முன்மாதிரியான குடும்பங்களில் தோழர் ராஜாவின் குடும்பமும் ஒன்று. ராஜா ஆனி தம்பதியினருக்கு ஒரே மகள் அபராஜிதா. அவர் அந்தக் குடும்பத்தில் முதல் தலைமுறையாக பிஎச்டி வரை சென்றிருப்பவர். நாடறிந்த தலைவர்களின் மகளாயிருப்பது மிகவும் சவால் நிறைந்தது. அவர்களது புகழ் வெளிச்சம் படாமல் தனது தனித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள அவருக்கிருக்கும் ஆர்வத்தை அபராஜிதாவின் பேச்சில் நான் உணர்ந்தேன். அந்தத் தற்சார்பு அவரைப்பற்றிய மரியாதையைத் தந்தது. தோழர் ராஜாவுக்கு அபராஜிதாவின்மீதிருக்கும் பிரியம் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படும். 'குழந்தை' என்றுதான் அவர் அன்போடு அபராஜிதாவைக் குறிப்பிடுவார். 

அபராஜிதாவைப் போலவே முதல் தலைமுறை மாணவர்களாக உயர்கல்வி பயில வருகிறவர்கள்தான் கல்வி வளாகங்களில் சமூகப் பொறுப்போடு மாணவர்களின் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடுகிறார்கள். அவர்களைக் குறிவைத்துதான் இப்போது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படைவாதத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை மறுக்கும் உயர்சாதி வெறுப்பும் இதில் கலந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 

தோழர் ராஜாவுக்கும் அபராஜிதாவுக்கும் தார்மீக ஆதரவைத் தெரிவிக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment