Sunday, February 7, 2016

மதுவின் பிடியிலிருந்து புதுச்சேரியை மீட்போம்! - ரவிக்குமார்



( 06.02.2016 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் நல கூட்டணி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் ) 

தோழர்களே!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டிய மண் இந்த புதுச்சேரி மண். மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா அவர்கள் களமாடிய மண் இது. இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்புக்கென தனி இயக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். 1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி வ.சுப்பையாவும் வேறு சில தலைவர்களும் இதே புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்புக்கென அரிசன சேவா சங்கத்தை உருவாக்கினார்கள். இன்று கிறித்தவ மதத்தில் இருக்கும் தலித்துகளின் உரிமைகளுக்காக நாம் பேசுகிறோம், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். ஆனால் 1930 களிலேயே கிறித்தவத்தில் இருக்கும் தீண்டாமையைக் கண்டித்துக் குரல் கொடுத்தவர் நோயல். தேவாலயத்திலிருந்த தீண்டாமை சுவரை இடிக்கச் செய்தவர். தான் நடத்திவந்த புதுவை முரசு பத்திரிகையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவர் வாழ்ந்த சிறப்புமிக்க மண் இந்தப் புதுவை மண். 

இத்தனை பெருமைகள் கொண்ட புதுச்சேரி இன்று எதற்காகப் புகழ்பெற்றிருக்கிறது? இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழும் மாநிலம் என்ற பெயரைத்தான் இப்போது ஆளும் முதல்வர் ரங்கசாமி ஏற்படுத்தியிருக்கிறார். தற்கொலைகளின் தலைநகரமாக இதை மாற்றியதுதான் அவரது சாதனை. நாட்டின் சராசரியைவிட நான்குமடங்கு அதிகமாக புதுச்சேரியில் தற்கொலைகள் நிகழ்கின்றன. இந்த அளவுக்கு தற்கொலைகள் நிகழக் காரணம் என்ன? மதுக்கடைகள்தான் இதற்குக் காரணம். மக்கள் தொகைக்கும் மதுக்கடைகளுக்கும் இடையிலான விகிதம் இங்கே அதிகம். இங்கே சுமார் 500 அயல்நாட்டு மதுபானக் கடைகள் உள்ளன. சுமார் 150 கள்ளுக் கடைகளும் சுமார் 120 சாராயக் கடைகளும் இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அரசாங்கமே நடத்துகிறது. எத்தனைபேர் தாலி அறுத்தாலும் பரவாயில்லை பணம் வந்தால்போதும் என்ற எண்ணத்தில் இலக்கு நிர்ணயித்து மதுவை விற்பனை செய்கிறது. இங்கோ மதுபானக் கடைகளை அரசாங்கமே நடத்துகிறது. ஆனால் கள் சாராயக் கடைகளை தனியாருக்கு ஏலம் விட்டுவிடுகிறார்கள். அந்த சாராய வியாபாரிகள்தான் இங்கே அரசியல் கட்சிகளை ஆதிக்கம் செய்கிறார்கள். 

மது ஒழிப்பு என்பது தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் பிரச்சனையாகிவிட்டது. " நாங்கள் ஆட்சி அமைத்தால் மது ஒழிப்புக்குத்தான் முதல் கையெழுத்து" என தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் கூறுகின்றன. அதே கட்சிகள் புதுச்சேரியில் அதைப்பற்றிப் பேசுவதில்லை. மது ஒழிப்பைப்பற்றிப் பேச இந்த மேடையில் உள்ள தலைவர்களுக்குத்தான் தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்போம் எனக் கூறும் திமுக இங்கே அதை அறிவிக்குமா? அந்தத் துணிச்சல் புதுச்சேரி திமுகவுக்கு இருக்கிறதா? அங்கே மது ஒழிப்புக்காகப் போராடுகிறாரே ஈவிகேஎஸ் இளங்கோவன், நடை பயணம் போகிறாரே அய்யா குமரி அனந்தன் - அவர்களெல்லாம் அங்கம் வகிக்கும் கட்சி காங்கிரஸ். புதுச்சேரியை நீண்ட காலமாக ஆண்ட கட்சி அது. இப்போதும் ஆட்சியைப் பிடிக்க முனைப்போடு இருக்கும் கட்சி. அந்த காங்கிரஸ் கட்சி மதுவிலக்கை கொண்டுவருவோம் எனக் கூறுமா? அந்தத் துணிச்சல் அதற்கு இருக்கிறதா? பாரதிய ஜனதாவுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறதா? மதுவிலக்குக்கு நாங்கள்தான் உரிமைகொண்டவர்கள் அதற்காகவே அவதரித்திருக்கிறோம் என்று பேசுகிற கட்சி ஒன்று இருக்கிறது. அந்தக் கட்சிக்காரர்கள் புதுச்சேரி எல்லையைத் தொட்டதும் அந்தக் கொள்கையை சுருட்டி பைக்குள் வைத்துக்கொள்வார்கள். மதுக்கடைகளை மூடுவோம் என அவர்களால் இங்கே அறிவிக்க முடியுமா? மக்கள்நலக் கூட்டணிக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது. இங்கே வெளியிடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் 36 ஆவது திட்டமாக அதைத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். 

மதுவை ஒழித்துவிட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் என்னாவது? என்று கேட்கிறார்கள். அதில் அப்படியென்ன வருமானம் வருகிறது? ஆண்டுக்கு 500 கோடிதான் அதன்மூலம் கிடைக்கிறது. இலவசங்கள், கவர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை ஒழித்துவிட்டாலே போதும் 500 கோடியை மிச்சப்படுத்திவிடலாம். மத்திய அரசாங்கத்திடம் கையேந்துவதற்கும் மக்களை குடிகாரர்களாக்கி வருமானம் பார்ப்பதற்கும் அரசாங்கம் எதற்கு?  இதை  இப்போதிருக்கும் முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.      

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக புதுச்சேரி மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அதில் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற செய்திகளைப் பார்க்கிறோம். இதுவும் மது வியாபாரத்தால் வருகிற கேடுதான். சாராய வியாபாரிகளாக இருப்பவர்கள் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும்போது எப்படி ஒழுக்கமான அரசியலை அவர்களால் நடத்தமுடியும்? 

மது அருந்துவதால் உண்டாகும் சுகாதாரக் கேடு அதற்காக அரசாங்கம் செலவிடும் தொகை இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மது விற்பனையால் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருவாயைவிட செலவுதான் அதிகம் என்பது தெரியவரும். இதனால்தான் இங்கே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என நாங்கள் கூறுகிறோம். 

ஒரு காலத்தில் கட்சித் தாவலுக்கு பெயர்போன மாநிலம் என்ற பெயரெடுத்த மாநிலம் இது. கட்சித்தாவல் தடைசட்டம் வந்தபிறகு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்போதிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். பண மூட்டையோடு வந்த ஒருவர் இங்கே இருக்கும் எம்எல்ஏக்கள் பெரும்பாலானவர்களுக்கு விலைபேசி அட்வான்ஸும் கொடுத்து தனது பெயரை ஆதரித்து நாமினேஷன் பேப்பரில் எப்படி கையெழுத்து வாங்கினார். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் இங்கிருக்கும் முதலமைச்சர் எப்படி அதிமுகவிடம் சரணடைந்தார் என்ற செய்திகளையெல்லாம் இந்த ஊர் மக்கள் அறிவார்கள். ஒரே நாளில் ஒரு கட்சியில் சேர்ந்து அதே நாளில் எம்பி ஆன வரலாறு இங்குதான் அரங்கேறியிருக்கிறது. 

முதலமைச்சர் ரங்கசாமியின் அரசியல் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அதிமுக தலைமை இந்தமுறை இங்கே ஆட்சியைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஆளுங் கட்சியிலே இருக்கும் சில எம்எல்ஏக்கள் இப்போதே அதிமுகவில் துண்டுபோட்டு இடத்தை ரிசர்வ் செய்துவிட்டார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இத்தனை காலமாக காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் என அல்லல்பட்ட புதுச்சேரி மக்கள் இப்போது அதிமுக என்ற ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஒருவேளை அதிமுக இங்கே ஆட்சியைப் பிடித்துவிட்டால் அது புதுச்சேரி மக்களுக்கு வாணலியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடும். எனவே புதுச்சேரி மக்களைக் காப்பாற்றவேண்டிய மிகப்பெரிய கடமை மக்கள் நல கூட்டணிக்கு இருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற விடுதலைச் சிறுத்தைகளும் மக்கள் நல கூட்டணி தோழர்களும் இப்போதே தேர்தல் பணியைத் துவக்கவேண்டும் எனக் கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன் நன்றி, வணக்கம்!

No comments:

Post a Comment