Wednesday, February 24, 2016

கிங்கா ? கிங் மேக்கரா? -மக்களாட்சிக் காலத்தில் தொடரும் மன்னராட்சிக்கால எச்சங்கள் - ரவிக்குமார்



தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் கிங்கா ? கிங் மேக்கரா?. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் தொண்டர்களை நோக்கி திருமதி பிரேமலதா அவர்களால் எழுப்பப்பட்ட இந்தக் கேள்வியையும், அதற்குத் தொண்டர்கள் அளித்த பதிலையும் கேட்டவர்கள் ' தேமுதிக தலைவர் திரு விஜயகாந்த் இந்தத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்கிறவர்களோடுதான் கூட்டணி அமைப்பார்' என்ற முடிவுக்குத்தான் வந்திருப்பார்கள். 

இதைத் தாண்டி இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. நவீன காலத்தின் மக்களாட்சி அரசியலை ஏற்றுக்கொண்டு அறுபது ஆண்டுகளுக்குமேல் ஆனபோதிலும் ஏன் நமது அரசியல்வாதிகள் மன்னராட்சிக்கால சொற்களையும், மதிப்பீடுகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதே அது. 

'அரியணை', 'ஆட்சிக்கட்டில்' 'வீரவாள்' ' செங்கோல்' 'கோட்டை' - என தமிழ்நாட்டின் அரசியல் வெளியில் புழங்கும் சொற்கள் ஏராளம். இந்த சொற்கள் இவற்றைப் பயன்படுத்துவோரது மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இதன் ஒரு அங்கமாகவே ' கிங்கா கிங் மேக்கரா' என்ற கேள்வியும் இருக்கிறது. கிங் என்று சொன்னால் அது முதலமைச்சரைத்தானே குறிக்கும் என்று இதற்கு விளக்கம் அளிக்கப்படலாம். இதை இங்கு புழக்கத்திலிருக்கும் வேறுபல எதிர் நவீனத்துவ ( anti modern ) செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்த்தால்தான் இதன் ஆபத்து புரியும். 

அரசியல் நவீனத்துவத்தின் ( political modernity) வெளிப்பாடாக முகிழ்த்த திமுக பண்பாட்டுத் தளத்தைத் திறம்படப் பயன்படுத்தியதை அனைவரும் அறிவோம். நவீனகால தொழில்நுட்பங்களான சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அது தனது அரசியலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டது. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் நவீனத்துக்கு முந்தைய மதிப்பீடுகளிலிருந்து அது முற்றாக  விடுபட்டுவிடவில்லை. அதன் விளைவைத்தான் இத்தகைய சொற்களின் நீடித்த பயன்பாட்டிலும் மன்னர்களாகத் தம்மை உருவகித்துக்கொண்ட நடவடிக்கைகளிலும் பார்க்கிறோம். 

மக்களாட்சியைப் பலப்படுத்துவதென்பது பிரக்ஞைபூர்வமானதொரு செயல்பாடு. பழமைவாதம் கொள்ளைநோயாகப் பரவிக்கொண்டிருக்கும் காலம் இது. நாம் பயன்படுத்தும் சொற்கள் முதல் பின்பற்றும் நடைமுறைகள் வரை எல்லாவற்றையும் குறித்து விழிப்போடு இல்லாவிட்டால் அந்தக் கொள்ளை நோயின் தாங்கிகளாக நாம் மாறிவிடுவோம்! 


No comments:

Post a Comment