நளினியின் பரோலை நீட்டிக்கவேண்டும்
======
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் தந்தை திரு சங்கரநாராயணன் காலமானதையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது தந்தை மறைவையொட்டி பரோலில் வந்துள்ள நளினியையும் அவரது தாய் மற்றும் தம்பியையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரோடு நானும் சென்றிருந்தேன்.
நான் புதுச்சேரி மாநில பியுசிஎல் தலைவராக இருந்தபோது மரணதண்டனை ஒழிப்புக்கென இரண்டுநாள் மாநாட்டை நடத்தியதையும் அதில் அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த மோகினி கிரி கலந்துகொண்டதையும் அவரிடம் நாங்கள் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவர் திருமதி சோனியா காந்தி அவர்களிடம் பேசியதன் பிறகுதான் நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது என்பதையும் நளினியிடம் நினைவுகூர்ந்து பேசினேன். மோகினி கிரி இப்போது எப்படி இருக்கிறார் என நன்றிப்பெருக்குடன் நளினி கேட்டார்.
நாங்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது எமது தலைவர் கூறிய கருத்துகள்:
1. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்ட அனைவரையும் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுவிக்கவேண்டும்.
2. இந்திய அளவில் 25 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் ஒரே பெண் நளினிதான். இதை தமிழக முதல்வர் பரிவோடு கவனத்தில்கொள்ளவேண்டும்.
3. தனது தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்வதற்கு நளினிக்கு 12 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு பரோலை நீட்டிக்கவேண்டும்.
4. நடிகர் சஞ்சய் தத்துக்கு மாதக் கணக்கில் பரோல் வழங்கும்போது நளினிக்கு இப்படி பாகுபாடு காட்டுவது கண்டனத்துக்குரியது.
No comments:
Post a Comment