சென்னை- மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோவளத்துக்கு அருகில் உள்ளது திருவிடந்தை. இன்று அங்கு போயிருந்தேன். கோயில் திருப்பணி நடந்துகொண்டிருப்பதால் வலது புறம் இருக்கும் சிறிய கோயிலில் தான் பூசை நடக்கிறது. இந்த கோயிலில் உள்ள நித்திய கல்யாண பெருமாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சோழர் கால கோயிலான இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இடதுபுற சுவர் நெடுக கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வலது புற சுவரிலும் கல்வெட்டுகளைப் பார்த்தேன். பின்ப்றமாக சென்று பார்க்க முடியாதபடி அடைக்கப்பட்டு வேலை நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் கல்வெட்டுகள் இருக்கக்கூடும். தொல்லியல் துறையால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவை பதிப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
திருவிடந்தை கோயிலில் எழிலார்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. கண்ணனின் லீலைகளைக் காட்சிப்படுத்தும் சிற்பங்கள் மண்டபத் தூண்களை அலங்கரிக்கின்றன. கோபியரோடு விளையாடும் கண்ணன், காளிங்க நர்த்தனம், பாற்கடலில் துயிலும் கண்ணன் என விதவிதமான காட்சிகள். கோயில் திருச்சுவருக்கு வெளியே அமைந்திருக்கும் மண்டபத்தின் தூண்களிலும் அழகிய சிற்பங்கள் உள்ளன. நித்திய கல்யாணபெருமாள் கோயில் என்பதாலோ என்னவோ ரதி மன்மதன் சிற்பங்கள் இந்தத் தூண்களில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் கோயில் குறித்த தலபுராணம் இருக்கிறதா என விசாரித்தேன். இல்லை என கைவிரித்தனர். திருப்பணியின்போது இந்த கலை பொக்கிஷங்களுக்கோ கல்வெட்டுகளுக்கோ கேடு நேர்ந்துவிடக்கூடாதே எனக் கவலையாக இருந்தது.
திருப்பணி முடிந்தபின் மீண்டும் சென்று முழுமையாக இந்தக் கோயிலை சுற்றிப்பார்க்கவேண்டும். சிற்பங்களை நிதானமாகப் பார்த்து மகிழவேண்டும்.
No comments:
Post a Comment