எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப்போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல் என்
தலைவன் வழியிலே நடப்பான் "
என்று எம்ஜிஆர் பாடுவதாக வரும் பாடலை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இன்று கேட்டேன். 1965 ஆம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தின் பாடல் அது. மொழிப்போராட்ட களத்தில் தமிழ் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருந்த காலம். திமுக ஆட்சி அதிகாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த நேரம். அப்போது எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் திமுகவின் பிரச்சார சாதனங்களாகத் திகழ்ந்தன. அவர் பாடுவதாக இடம்பெற்ற பாடல்கள் அக்கட்சியின் கொள்கை விளக்கங்களாகக் கொண்டாடப்பட்டன. இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இப்பாடலில் வெளிப்படும் கருத்து வாலியின் கருத்து என்பதைவிட எம்ஜிஆரின் மூலம் சொல்லப்பட்ட அன்றைய திமுகவின் கருத்து என்றே சொல்லவேண்டும்.
இந்தப் பாடலில் வெளிப்படும் 'மகன் பிறப்பான்' என்ற நம்பிக்கை ஆணாதிக்கம் எந்த அளவுக்கு அப்போது வலுவாக இருந்தது என்பதன் அடையாளம்.
'தனக்கொரு பாதை வகுக்காமல் தலைவன் வழியில் நடப்பது' தொண்டரின் லட்சணம் மட்டுமல்ல அவர் தனது வாரிசின் கடமையாகவும் அதை மாற்றவேண்டும். மகன் பிறக்காமல் மகள் பிறந்துவிட்டால் அவள் தனது கணவனின் வழியிலே நடக்கவேண்டும் என்பது இதன் உள்ளே புதைந்திருக்கும் இன்னொரு அர்த்தம்.
இதே பாடல் ஒரு தலைவர் பாடுவதாக இருந்திருந்தால் அதன் வரிகள் இப்படி இருந்திருக்காது என்பதில் சந்தேகமில்லை.
தலைவரின் வாரிசு தலைவராக இருக்கவேண்டும், ஆனால் தொண்டரின் வாரிசும் தொண்டராகத்தான் இருக்கவேண்டும். அதை அந்தத் தொண்டரின் வாயாலேயே சொல்லவைக்கவேண்டும். அடடா என்னவொரு தொலைநோக்கு! என்னவொரு அரசியல் தத்துவம்!
No comments:
Post a Comment