Wednesday, February 24, 2016

இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம் - ரவிக்குமார்

 

இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University of Jaffna ) நிர்வாகம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.

1. மாணவர்கள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது

2. வெள்ளிக்கிழமைதோறும் மாணவிகள் சேலை அணிந்துவரவேண்டும்

3. மாணவர்கள் தாடியுடன் வகுப்புக்கு வரக்கூடாது

17.02.2016 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஒருபோதும் இத்தகைய நடைமுறைகள் அங்கு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. 

தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவர் ஜீன்ஸ் அணிவதையும் டி ஷர்ட் போடுவதையும் தலித் இளைஞர்களின் அடையாளமாகக் குறிப்பிட்டுப் பேசியதை நாம் மறந்திருக்க முடியாது. ஒருவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகமும் அதே கருத்தைக்கொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமைகளில் மாணவிகள் அனைவரும் சேலை அணியவேண்டும், மாணவர்கள் தாடி வளர்க்கக்கூடாது என்ற விதிகள் அது பல்கலைக்கழகம்தானா என்ற ஐயத்தை நமக்கு எழுப்புகின்றன. 

இந்த விதிமுறைகள் நிச்சயம் பேரினவாத ஆட்சியாளர்களால் திணிக்கப்படுபவை அல்ல. 'தமிழ்ச் சான்றோர்கள்'தான் இதைச் செய்கிறார்கள். 

யாழ்ப்பாண சமூகம் 19 ஆம் நூற்றாண்டை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற ஐயம் அங்கு மீண்டும் முழுவீச்சுடன் சாதிய பாகுபாடுகள் உயிர்ப்பிக்கப்பட்டபோதே எனக்கு எழுந்தது. பஞ்சம மக்களுக்கு சிறிதளவு உரிமையும் கொடுக்காத சாதித் தமிழர்கள் இப்போது தமது சாதி உணர்வுகளுக்கு முட்டுக்கொடுக்க மதத்தை இழுத்து வருகிறார்கள். இதை ஜனநாயக உணர்வுள்ளோர் ஏற்க மாட்டார்கள் என நம்புகிறேன். 

பதுங்கு குழிகளிலிருந்து எழுந்துவரும் இந்தமாதிரியான பிற்போக்குத்தனங்களை ஒழித்துக்கட்டாமல் சமத்துவத்துக்கான குரலை இனி எழுப்பமுடியாது என்பதை ஈழத் தமிழர்கள் உரத்து முழங்கவேண்டும். 

( இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் உத்தரவின் நகல் கவிஞர் சேரனின் Cheran Rudhramoorthy முகநூல் பதிவிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது )

No comments:

Post a Comment