Monday, May 14, 2012

Fwd: புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை 'அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை' என அறிவிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை 'அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை' எனச் சிறப்பித்து  நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
மக்களவை 60ஆம் ஆண்டு சிறப்பு அமர்வில் தொல்.திருமாவளவன் உரை!
 

இந்திய நாடாளுமன்றத்தின் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டி 13-5-2012 ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு நடைபெற்றது. 
இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் 13-5-1952 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.  அன்று தொடங்கிய நாடாளுமன்ற அமர்வுகள் 60 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
வழக்கமாக காலை 11 மணியளவில் தொடங்கும் கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டு நாட்டுப்பண்ணுடன் சிறப்பு அமர்வு தொடங்கியது.  மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமார் அவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தின் 60ஆம் ஆண்டு அமர்வைக் கொண்டாடுவதற்கான பின்னணிகளைப் பற்றிப் பேசினார்.  அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உரையாற்றினர்.  ஏறத்தாழ ஐந்தேகால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிறப்பு அமர்வில் 41 பேர் உரையாற்றினர்.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பிற்பகல் சுமார் 3 மணியளவில் உரையாற்றினார்.
அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:
"மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு தொடங்கி
60 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பேசுகிற வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் பெருமையோடு கூறுவதற்கு  நமது அரசியலமைப்புச் சட்டமே காரணமாகும்.  அத்தகைய பெருமைக்குரிய அரசியலமைப்புச் சட்டத்தை தனி ஒரு ஆளாக நின்று, அல்லும் பகலும் அரும்பாடுபட்டு, கண் துஞ்சாமல் உழைத்து, நமக்கு வகுத்துத் தந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களே ஆவார்.  அத்தகைய பெருமைக்குரிய தலைவரை இந்திய அரசு, இந்திய நாடு உரிய முறையில் மதிக்கத் தவறிவிட்டது.  நாடெங்கிலும் அவருடைய திருவுருவச் சிலைகள் மற்றும் அவருடைய திருவுருவப் படங்கள் அவமதிக்கப்படும் நிலை உள்ளது.  அவருடைய படத்தின் மீது சாதி வெறியர்கள் சாணியடிக்கும் கேவலம் உள்ளது.
இத்தகைய போக்குகளைத் தடுக்க வேண்டும் என்பதோடு இந்த அவையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை' என்று சிறப்பித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.  தேசத்தின் தந்தை காந்தி என்பதைப் போல 'அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர்' என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டுகிறேன்.
நமது ஜனநாயகம் 'பங்கேற்பு ஜனநாயகத்தை' அடிப்படையாகக் கொண்டது. இந்தியச் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் - குறிப்பாக தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற அனைவரையும் - நாம் அரவணைக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு முறையானது நமது ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் ஓர் அளவுகோலாகும்.  உலகமயமாதல் நடைபெற்றுவரும் இச்சூழலில் தலித்துகள் மேலும் மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகி வருகிற இவ்வேளையில், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது நமது ஜனநாயகத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளது. எனவே இந்திய அரசு அதற்கேற்ற வகையில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 
புரட்சியாளர் அம்பேத்கர், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைதிச் சூழலிலும் போர்ச் சூழலிலும் இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக வைத்திருக்கக்கூடிய அளவுக்கு நெகிழ்வுள்ளதாகவும், வலிமை பெற்றதாகவும் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவில் பல மொழி பேசுகிற பல்வேறு தேசிய இனங்கள் இருந்தாலும், இந்தியா இன்னும் ஒற்றுமையாய் இருப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டமே காரணமாகும். இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய மதிப்பையும் அதிகாரங்களையும் இந்திய அரசு வழங்க வேண்டும். 
உலகின் மூத்த மொழியான தமிழ்மொழி சமஸ்கிருதத்தைப் போலவே உயர்தனிச் செம்மொழியாகும்.  இந்தி மொழிக்குத் தருகிற முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்குத் தர அரசு தயங்குவது ஏன்?  தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கணேசமூர்த்தி மற்றும் திரு. தம்பிதுரை ஆகியோர் கூறியதைப் போல தமிழையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.   தமிழ் மட்டுமின்றி இந்தியாவில்  அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். 
அதிகாரங்களை ஓரிடத்தில் குவிப்பது தேசத்திற்குத் தீங்குகளை விளைவிக்கும். ஆகவே, மாநில அரசுகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும்.  குறிப்பாக, ஒவ்வொரு தேசிய இனத்திற்குமுள்ள சுயநிர்ணய உரிமையை அனுமதிக்க வேண்டும். 
மேலும், ஈழத்தில் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்களை இந்திய அரசு உண்மையிலேயே பாதுகாக்க வேண்டுமானால், அதற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வாகும்.  எனவே, ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசச் சமூகத்தின் ஆதரவோடு தமிழீழத்தை மீட்டுத் தரவேண்டுமெனக் கேட்டு நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசினார்.


 
 
--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

No comments:

Post a Comment