Sunday, November 25, 2012

பூலாங்குறிச்சி: அழிந்துகொண்டிருக்கும் வரலாறு - ரவிக்குமார்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பூலாங்குறிச்சி என்ற சிற்றூர் அங்கிருக்கும் கல்வெட்டுகளால் பெருமைபெற்று விளங்குகிறது. அண்மையில் அங்கு நான் நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.  மிக முக்கியமான வரலாற்று ஆதாரம் என்று சொல்லப்படுகிற அந்தக் கல்வெட்டுகளைப்பற்றி அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை.  ஏழெட்டு பேரிடம் விசாரித்தபிறகு தான்  அந்தக் குன்று இருக்கும் திசையை எங்களால் தெரிந்துகொள்ளமுடிந்தது.  குன்றுப் பகுதியை அடைந்து கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தேடிக்கொண்டிருந்தோம்.  அப்போது அந்தப் பக்கமாக ஒரு மூதாட்டி நடந்து வந்துகொண்டிருந்தார்.  அனாயசமாக அந்தக் குன்றின் சரிவுப்பகுதியில் ஏறி  அவர் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்.  அவரிடம் கல்வெட்டுகளைப் பற்றி நான் கேட்டேன்.  இதோ இங்கேதான் இருக்கிறது என்று தனது காலின் கீழ் பக்கமாகக் காட்டிவிட்டுச் சரிவின் அந்தப் புறமாக இறங்கி அவர் மறைந்து போய்விட்டார். 

அது நடுப்பகல் நேரம் என்பதால் காய்ச்சிய இரும்புத் துண்டைப்போல கற்பாறை கொதித்துக்கொண்டிருந்தது.  அதில் பட்டு எதிரொளித்த சூரியக் கிரணங்கள் கண்களைக் கூசச் செய்தன.  சற்று நிதானித்துப் பார்த்தபோது கல்வெட்டுகள் புலப்பட்டன.  தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுகளிலேயே மிகவும் பெரியது பூலாங்குறிச்சி கல்வெட்டுதான் என்று கல்வெட்டியல் அறிஞர் ஒய். சுப்புராயலு கூறியிருப்பது முற்றிலும் உண்மைதான்.  45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்டு மூன்று பகுதிகளாக அக் கல்வெட்டுகள் உள்ளன.  மிகவும் ஒழுங்கான முறையில் அவை வெட்டப்பட்டுள்ளன.  அருகில் இருந்து பார்க்கும்போது அவற்றின் முழுப் பரிமாணம் எனக்குத் தெரியவில்லை. எனவே சரிவின் கீழே இருக்கும் வயலில் இறங்கி அங்கிருந்து அதைப்பார்த்தேன்.  மிகவும் பிரமிப்பாக இருந்தது.  தமிழக வரலாற்றின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதத்தில் வெயிலில் நனைந்தபடி நின்றேன். 

' வரலாறு என்பது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே நடக்கும் முடிவற்ற உரையாடல்என்றார் பிரபல வரலாற்றறிஞர் .எச்.கார். இது இந்திய வரலாற்றுக்கு அப்படியே பொருந்தாது. கடந்தகால கற்பனைகளை நிகழ்காலத்தின்மேல் திணிப்பதைத்தான் வரலாறு என்று இங்கே சொல்லிவருகிறார்கள்.நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் வரலாற்றின் இடத்தை இந்தியாவில் புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிறார்கள். வரலாறு கதையாக சொல்லப்படுவதற்கு மாறாக இங்கே கதைகள்தான் வரலாறுகளாக முன்வைக்கப்படுகின்றன. காலகாலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் போக்கின் காரணமாகக் கட்டுக் கதைகளுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான வேறுபாடு நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் நாம் வரலாற்று உணர்வு அற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பழம் பெருமை பேசி அதிலேயே சுகம் காண்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியதாக சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிற நாம், நமது தொன்மையை உலகுக்கு உணர்த்துவதற்கான அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவதில்லை.அதன் ஒரு சாட்சியாக இருக்கிறது பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள். 

வரலாற்றை எழுதுவதற்குப் பல்வேறு தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றுள் மிகவும் நம்பகமான ஆதாரம் கல்வெட்டு ஆகும். இலக்கியப் பிரதிகளைவிடவும், புராணக்கதைகளைவிடவும் கல்வெட்டுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இதுவரை சுமார் எண்பதாயிரம் கல்வெட்டுகளை இந்தியாவெங்கிலும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அதில் 28,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் சுமார் பாதியளவு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் தொன்மையானவை தமிழ் பிராமி கல்வெட்டுகளாகும். அவற்றை பிராமி கல்வெட்டுகள் என்று சொல்லக்கூடாது தமிழி என்றுதான் அழைக்கவேண்டும் என்பது சில தொல்லியல் அறிஞர்களின் வாதம். கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச் சேர்ந்த 93 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் பிராமி கல்வெட்டுகள் நீங்கலாக பிற கல்வெட்டுகளை ஒய். சுப்பராயலு காலவாரியாக அட்டவணைப்படுத்தியிருக்கிறார்.  கி.பி .3 ஆம் நூற்றாண்டிலிருந்து 5ஆம் நூற்றாண்டுவரையிலானவை  நூறு கல்வெட்டுகள்; கி.பி.5- கி.பி 9 காலத்தைச் சேர்ந்தவை 900 கல்வெட்டுகள்;  கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதல் முதல் கி.பி  13 ஆம் நூற்றாண்டு  வரையிலானவை பத்தொன்பதாயிரம் கல்வெட்டுகள்;  கி.பி.13 - கி.பி 16 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை 6000 கல்வெட்டுகள்; கி.பி.16-19 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை 2000 கல்வெட்டுகள்.

கல்வெட்டுகள் மட்டுமின்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள இலக்கியப் பிரதிகள் , நாணயங்கள், பானை ஓடுகள், செப்புப் பட்டயங்கள் எனப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தபோதிலும் தொல்தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள கல்வெட்டுகள்தான் நம்பகமான ஆதாரங்களாக உள்ளன.  அதிலும் குறிப்பாக கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டுவரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மிகவும் முக்கியமானவையாகும்.  ஏனென்றால் தமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்த முக்கியமான ஆதாரங்களாக அவையே விளங்குகின்றன. 

தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் கி.பி.4ஆம் நூற்றாண்டுவரையிலான கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களால் வடிக்கப்பட்டிருக்கின்றன.  அதன் பிறகு இருவிதமான எழுத்துமுறைகள் தமிழகத்தில் பயண்படுத்தப்பட்டுள்ளன.  வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்து என அவற்றைக் கல்வெட்டியல் அறிஞர்கள் வகைப்படுத்துகிறார்கள்.  கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் நமக்குக் கிடைக்கின்றன.  அதன்பிறகு அது கேரளப்பகுதியின் எழுத்தாக உள்வாங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழ் எழுத்துகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 

இந்திய வரலாற்று ஆதாரங்களுள் முக்கியமாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டுகளைக் கண்டறிந்து அவற்றைப் படித்துச் சொன்னது ஆங்கிலேயர்கள்தான்.  1784 ஆம் ஆண்டு கல்கத்தாவில் துவக்கப்பட்டஆசியாடிக் சொசைட்டிதான்  முதலில் கல்வெட்டுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.  சென்னை மாகாணத்துக்குப் பணி நிமித்தமாக வந்த ஆங்கிலேய அதிகாரி மெக்கன்சி என்பவர் 8000 கல்வெட்டுகளை படி எடுத்துத் தொகுத்ததார்.  அவற்றில் 1300 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும். 

1872ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்ஜஸ் என்பவர்இண்டியன் ஆன்டிகூரிஎன்ற பத்திரிக்கையை ஆரம்பித்து கல்வெட்டுகளை அதில் வெளியிட்டார்.  அதன்பிறகுஎப்பிகிராபிகா இண்டிகாஎன்ற பத்திரிக்கையும் கல்வெட்டுக்காகத் துவக்கப்பட்டது.  தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் படிஎடுத்துத் தொகுப்புகளாக வெளியிடும் முயற்சியும் அதன் பின்னர் துவங்கியது.  சுமார் 15000 கல்வெட்டுகள் அவ்வாறு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கல்வெட்டுகளை இப்போதும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.  சிதிலமாகிக் கைவிடப்பட்ட கோயில்கள், மலைக் குகைகள், குன்றுகளின் சரிவுகள், நடு கல்கள் எனக் கண்டறியப்படாத கல்வெட்டுகள் இன்னும் காத்துக்கிடக்கின்றன.   புதிதாகக் கண்டறியப்படும் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகளையும், கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடுவதற்காகஆவணம்என்ற இதழ் தமிழில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுகள் அதாவது கி.பி. 3 - 9ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மொத்தம் 1000 தான் நமக்கு இதுவரை கிடைத்துள்ளன.  அவை பல்வெறு செய்திகளை எடுத்துச் சொல்பவையாக உள்ளன.  பெரும்பாலான கல்வெட்டுகள் ஒரு சில வரிகளை மட்டுமே கொண்டவையாக இருக்கின்றன.  அந்த 1000 கல்வெட்டுகளில் மிக விரிவானதும் முக்கித்துவம் வாய்ந்ததுமான கல்வெட்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டாகும். 

திருச்சி மாவட்ட தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர் துளசிராமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு குறித்த செய்தி முதலில் 1979ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானது.  இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் குறித்து அப்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த முனைவர் ஆர். நாகசாமி 1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் விரிவான கட்டுரை ஒன்றை வாசித்தார்.  இந்தக் கல்வெட்டு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கல்வெட்டுகளிலேயே மிகவும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் நிலம் தொடர்பான செய்திகளைக்கொண்ட தொன்மையான கல்வெட்டும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுதான்.  நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும் அதன் உரிமை தொடர்பாகவும் இதில் பல்வேறு செய்திகள் இருக்கின்றன.  இதைப்பற்றி ஆராய்ந்திருக்கும் ஆர். நாகசாமி கல்வெட்டுகளின் காலம் குறித்து குறிப்பிட்டிருக்கும் செய்தி முக்கியமானதாகும்.  பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுவது போல மன்னரின் ஆட்சி ஆண்டைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இல்லை. ‘‘ கோச்சேந்தங் கூற்றற்கு யாண்டு நூற்றுத் தொண்ணூற்றிரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை ’’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை ஆராய்ந்த ஆர். நாகசாமி இக்கல்வெட்டு சக யுகத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று கூறுகிறார்.  சக யுகம் என்பது கி.பி.78 ஆம் ஆண்டில் துவங்குகிறது.  அதை வைத்துப் பார்த்தால் இக்கல்வெட்டு கி.பி.270 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.  ஆனால் ஒய். சுப்பராயலுவோ இக்கல்வெட்டு கி.பி. 5ஆம் நூற்றாண்டடைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார்.  இக்கல்வெட்டின் எழுத்தமைதி பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் காலத்தைச் சேர்ந்த நடுகல்லில் காணப்படும் எழுத்துக்கு முற்பட்டதாகத் தெரிகிறது.  எனவே இந்த எழுத்து முறையைப் பார்க்கும்போது கி.பி.5 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே பொருத்தமானதாக இருக்கும் என்பது சுப்பராயலுவின் கருத்து.  அதாவது நாகசாமி சொல்வதற்கும் சுப்பராயலு சொல்வதற்கும் இடையில் 200 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது.  இந்த இரண்டு கருத்துக்களுமே கூடத் தற்போது கிடைத்திருக்கும் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு செய்யப்பட்ட யூகங்களே தவிர இறுதி உண்மைகள் அல்ல.இவர்கள் சொல்வதைக் காட்டிலும் இன்னும் கூட காலத்தால் இக்கல்வெட்டு முற்பட்டதாகவும் இருக்கக்கூடும்.தமிழ் பிராமி எழுத்தின் காலம் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருந்தல் அகழ்வாய்விற்குப் பிறகு கி.மு.5 ஆம் நூற்றாண்டு என்று தெரியவந்திருப்பதைப்போல பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலமும் கூட இன்னும் தொன்மையானதாக இருக்கக்கூடும். 

சுப்பராயலு சொல்வதையே எடுத்துக்கொண்டாலும்கூட சுமார் 16 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டத் தொன்மை வாய்ந்ததாக பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன.  அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களின் பெயர்களான சேந்தன், கூற்றன் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் களப்பிரர் அரசர்களாக இருக்கக்கூடும் என நாகசாமியும், சுப்பராயலுவும் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறெனில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் களப்பிரர் காலத்தைப்பற்றித் தெளிவுபடுத்தக்கூடிய மிக முக்கியமான கல்வெட்டுகளாகவும் இவை இருக்கின்றன. பௌத்த சமணத்தை ஆதரித்த களப்பிரர் மன்னர்களின் ஆட்சியில் பிராமணர்கள் அதிகாரம் அற்றவர்களாக வைக்கப்பட்டிருந்தனர் என்றுதான் வரலாற்று ஆசிரியர்கள் இதுவரை கூறிவந்தனர். இந்தக் கல்வெட்டில்கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருக்குப் பிரம்மதாயக்கிஎனவும்பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரானஎன்றும் பிரம்மதாய நிலம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. பிரம்மதாயம் என்பது பிராமணர்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் ஆகும். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் செல்வாக்கிழந்து இருந்திருந்தால் எவ்வாறு அவர்களுக்கு பிரம்மதாய நிலம் இருந்திருக்கும் ? 

இந்தக் கல்வெட்டில் இரண்டு தேவகுலங்கள் மற்றும் வசிதேவனார் கோட்டம் ஆகியவை குறித்த செய்திகளும் உள்ளன.  தேவகுலம் என்றால் பொதுவாக இந்துக் கோயில்கள் என்றே இதுவரை வரலாற்று ஆசிரியர்கள் கூறிவந்தனர்.  ஆனால் அதைக் கல்வெட்டியல் அறிஞர் கோ. விஜயவேணுகோபால் இப்போது மறுத்திருக்கிறார்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் உள்ள பாடல் ஒன்றை எடுத்துகாட்டித் தேவகுலம் என்பது நோன்பு நோற்று உயிர் துறந்த சமண முனிவர்களுக்காகக் கட்டப்பட்ட இடமாக இருந்திருக்கலாம் என அவர் கூறுகிறார்.ஆசாரக்கோவையின் பாடல் நோயின்றி வாழ விரும்புகிறவர்கள் தனியே போகக்கூடாத இடங்கள் என்று நான்கு இடங்களைப் பட்டியலிடுகிறது:‘‘ பாழ்மனையுந்  தேவகுலனுஞ் சுடுகாடும்,ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனும்அவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. தேவகுலம் என்பது கோயிலாக இருந்தால் அதை சுடுகாட்டோடு சேர்த்துப் பட்டியலிட்டிருக்கமாட்டார்கள்.  தேவகுலம் என்பது வடஇந்தியாவில் நீத்தோர் படிமைகளை வைத்து வணங்கும் கூடமாக  இருந்தது எனவும் இந்த வழக்கம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறது எனவும் பி.ஆர். பந்தர்கர் கூறியிருப்பதை விஜயவேணுகோபால் சுட்டிக்காட்டுகிறார்.  அதனடிப்படையில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ‘‘ இரு தேவகுலங்கள், வசிதேவனார் கோட்டம் ஆகிய மூன்றுமே சமண சமயஞ் சார்ந்தன எனக்கொள்வதோடு இவற்றைக் கட்டிய அதிகாரிக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசனும் சமண சமயஞ் சார்ந்தவன் எனக் கொள்ளலாம்’’ என்று அவர் குறிப்பிடுகிறார். முதலில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்ட தேவகுலம் என்ற சொல் பின்னர் கோயில்களைக் குறிப்பதாக மாறிவிட்டது என்றும் அவர் விளக்குகிறார்.

பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்கூடத்  தமிழ் ஆய்வுலகம் இன்னும் அதை ஆழமான விவாதத்திற்கு உட்படுத்தவில்லை. அதில் சொல்லப்பட்டிருக்கும் காலக் கணக்கு இன்னும் முழுமையாக விளக்கப்படவில்லை. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்து முறை என்பது தமிழ் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்துக்கு மாறி வந்த நிலையைக் காட்டுகிறது என்று கல்வெட்டியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அத்தகைய எழுத்துமுறையைக் கொண்ட மிகப்பெரிய கல்வெட்டுகளும் இவைதான்.

களப்பிரர் காலம், தமிழகத்தில் நிலவிவந்த நில நிர்வாக அமைப்பு பற்றிய வரலாறு, தமிழ் எழுத்துமுறையின் வரலாறு எனப் பலவகையிலும் அரிய செய்திகளைக்கொண்டதாகப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் எந்தவிதப் பாதுகாப்போ பராமரிப்போ இன்றிக் கிடக்கின்றன. தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளை அடையாளம்காட்டக்கூட அங்கே ஆளில்லை. அந்தக் குன்றின் கீழே விவசாயம் செய்யப்படுவதால் கொஞ்சம் பாதுகாப்பு இருக்கிறது. வெயிலில் காய்வதால் பாறையின் மேல்பகுதி உரிந்து வருகிறது. ஏற்கனவே இந்தக் கல்வெட்டுகளின் ஒரு பகுதி படிக்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இப்படியே கிடந்தால் இன்னும் சிலகாலத்தில் இந்தக் கல்லெழுத்துகளும் நீரெழுத்துகள் ஆகிவிடும்.
குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்தியத் தொல்லியல் துறை அங்கே மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டியிருக்கிறது. அதுபோலப் பூலாங்குறிச்சியிலும் செய்யவேண்டும்.அங்கே ஒரு பாதுகாவலரையும் வழிகாட்டியையும் நியமிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே இயற்கையின் தாக்கத்தால் அழிந்துகொண்டிருக்கும் அந்தக் கல்வெட்டுகள் இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக அழிந்துபோய்விடும். இதை மத்திய மாநில அரசுகள்தான் செய்யவேண்டும் என்பதில்லை. செம்மொழி நிறுவனமேகூட செய்யலாம். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இதைச் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

நன்றி : தீராநதி , மே 2012

12 comments:

 1. என்னோட சொந்த ஊர் பூலாங்குறிச்சி தான் அண்ணா . ஆனால் சிறு வயதில் இருந்தே வெளியூரில் இருந்து வந்ததினால் எனக்கு அதன் அருமை தெரியவில்லை . மிகச்சிறப்பான ஊர் என்பதில் என்றுமே எனக்கு பெருமைதான். நீங்கள் கூறிய விஷயம் எம் மக்கள் நிறையபேருக்கு தெரியாது . நன்றி அண்ணா .!

  உங்களது இந்த பதிவை என்னுடைய தளத்தில் மீள பதிவிட அனுமதிப்பீர்களா ?

  என்னுடைய தளம் :

  http://poolankurichi.blogspot.in/

  ReplyDelete
 2. பாதுகாக்கப்படவேண்டிய அதிமுக்கிய இடங்களில் மிக முக்கியமான இடமாகும்.செம்மொழி நிறுவனம் இதை கவனிக்குமா?

  ReplyDelete
 3. பாதுகாக்கப்படவேண்டிய அதிமுக்கிய இடங்களில் மிக முக்கியமான இடமாகும்.செம்மொழி நிறுவனம் இதை கவனிக்குமா?

  ReplyDelete
 4. thanks for sharing.I am from this native. Sundaram

  ReplyDelete
 5. முப்பது ஆண்டுகள் பின் ஒரு தெளிந்த விளக்கம்  ://www.sankathi24.com/news/paulaanakauraicacai-kalavaetatau-vailakakama

  ReplyDelete

 6. பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

  ://www.vallamai.com/?p=97243

  ReplyDelete
 7. களப்பிரர்கள் பறையர்களே வைதீகத்தை பிரமணீயத்தை எதிர்த்தவர்கள் வர்ணசாதிமுறைக்கு எதிரான அவர்ணர்கள் இந்துக்கள் அல்லஅல்ல.

  ReplyDelete
 8. நான் இந்த ஊரைச் சேர்ந்தவன். இதைப் பார்த்தவன். எப்படியாவது மேலும் அழிவிழிலிருந்து காப்பாற்றப் படவேண்டும்.

  ReplyDelete
 9. என்னோட சொந்த ஊர் பூலாங்குறிச்சி தான் பாதுகாக்கப்படவேண்டிய அதிமுக்கிய இடங்களில் மிக முக்கியமான இடமாகும்.

  ReplyDelete
 10. என்னுடைய சொந்த ஊர் பூலாங்குறிச்சி(சிவகங்கை மாவட்டம்)

  ReplyDelete
 11. இந்த கல்வெட்டை கண்டுபிடித்தவர் கல்வெட்டு ஆய்வாளர்.மேலப்பனையூர் கரு.ராசேந்திரன் என்பதை எஸ்.சுப்பராயலு தனது கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
  திரு.துளசிராமன் அய்யாவை கள் ஆய்வுக்கு அழைத்து காண்பித்து அறிமுகம் செய்த நிலையில் அதை தமது கண்டுபிடிப்பாக பிரசுரித்தார் என்பதே வரலாறு...இதனை வசதியாக மறைந்தவர் மறைந்த அறிஞர் நாகசாமி அய்யா...அன்பு கட்டுரையாளரே சுப்பராயலு கட்டுரையில் கண்டுபிடிப்பு சார்ந்த தகவல் உள்ளது அதையும் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete