Sunday, October 21, 2012

'பிராமணாள் காபி கிளப் '

ஸ்ரீரங்கத்தில் கோவை ராமகிருஷ்ணனின் தலைமையிலான திராவிடர் கழகத்தினர் உணவு விடுதி ஒன்றின்  பெயர்ப் பலகையில் 'பிராமணாள் காபி கிளப் ' என எழுதியிருந்ததை அழிக்க முற்பட்டுப் போலீசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் பல்வேறு வினாக்களை எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பிராமணர்கள் மட்டுமே நுழைந்து காபி குடிக்கக்கூடிய உணவகங்கள் இருந்தன. அவற்றில் பிற சாதியினரை அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத நிலை இருந்தது. அந்த இழி நிலையை எதிர்த்து நடைபெற்றப் போராட்டங்களின்  காரணமாகவே அந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன, எல்லோரும் அந்த உணவகங்களில் அனுமதிக்கப்படும் நிலை உருவானது. 

இப்போது பிராமணர்கள் நடத்தும் உணவகங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பி நடத்தப்படும் ' சரவண பவன் ' உணவகம் பிராமணர்களுக்குச் சொந்தமானதல்ல. தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் இருக்கும் உணவகங்களில் கல்லாவுக்குப் பின்னால் பார்க்கமுடிவதைவிடவும் பரிமாறும் இடங்களில்தான் பிராமணர்களை  இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் காபி கிளப் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருத்த உணவகத்தில் பிராமணர்களைத் தவிர பிறரை அனுமதிக்க மறுத்ததாகத் தெரியவில்லை. எனினும் இப்படியான முயற்சிகள் கசப்புணர்வை அதிகரிக்கவே வழிவகுக்கும். சென்ற நூற்றாண்டில் நிலவிய சமூக நிலைகளை வெறுப்பு என்னும் நீர் ஊற்றி மறுபடியும் துளிர்க்கச் செய்வது தேவையற்றது. 

ஸ்ரீரங்கத்தில் இருக்கும்  பெயர்ப்பலகையை அகற்றுவதற்குக் குரல் கொடுத்த திராவிடர் கழகத்தினர் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மேலும் இரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும். தமிழர்கள் தமது பெயருக்குப் பின்னால் சாதி பின்னொட்டைப் போட்டுக்கொள்வதை எதிர்த்து ஒரு போராட்டம் , வணிக நிறுவனங்களை நடத்துகிற தமிழர்கள் அவற்றின் பெயர்ப்பலகைகளில் ( உ-ம்  : ரெட்டியார் மெஸ் , நாடார் மெஸ் ) சாதிப் பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு போராட்டம். ஆக, இப்படி இரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவற்றை நடத்தாமல் , பிராமணர் அல்லாதாரிடம் இருக்கும் சாதிப் பற்றைக் களையாமல் பிராமணர்களை மட்டும் எதிர்த்துப் போராடுவதென்பது அரசியலுக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர சாதியை ஒழிக்க உதவாது. 

3 comments:

 1. நம் நாட்டில் பல்வேறு சாதிகளும் இனங்களும் தமக்கேயுரிய பிரத்யேக உணவு வகைகளை, சுவைகளை நெடுங்காலமாக உரிவாக்கியிருக்கின்றன. இன்று நமக்கு அவை எல்லாவற்றையும் (சாதி வேறுபாடற்று) சுவைக்கும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக எங்கும் கிடைக்கும் செட்டிநாட்டு உணவுகளை ருசிக்க நீங்கள் செட்டியாராக இருக்க வேண்டியதில்லை. அந்த வகையில் பிராமண பானி காபி, சாப்பாடு என்பதைக் குறிக்கவே அப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சாப்பிட வருபவர்களிடையே சாதிப் பாகுபாடு பார்க்காத வரை இதை எதிப்பது வெறும் மலிவான ஸ்டண்ட் மட்டுமே. இதுவே 'ராமையர் காபி கிளப்' என்பதுபோலப் பெயர் இருந்திருந்தால் எதிர்த்திருப்பார்களா? 'கோமள விலாஸ்' என்றிருந்திருந்தால்?

  சரவணன்

  ReplyDelete
 2. அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன இளைஞர்களில் பலர் ஐயர்களையும்,செட்டி களையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.

  ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு - ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

  அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?

  சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

  தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?


  நல்லையா தயாபரன்

  ReplyDelete
 3. வானம் எனக்கொரு போதி மரம்
  சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
  சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

  தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

  இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் , என்று பெயர்கள் பாவனையில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.

  பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

  இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

  நல்லையா தயாபரன்

  ReplyDelete