Sunday, July 28, 2013

அமிலவீச்சு என்னும் பயங்கரம்: சிறப்பு சட்டம் இயற்றப்படுமா?

அமிலவீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த வித்யா


டெல்லியில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்டபோது நாடே கொதித்தெழுந்தது. அரசியல் தலைவர்களும்,ஆட்சியாளர்களும் தமது மனிதநேயத்தை நிரூபித்துக்கொள்ளும்விதமாக பேசினார்கள். ஊடகங்களும் அந்தப் பிரச்சனையை முக்கியத்துவம் தந்து விவாதித்தன. ஆனால் இப்போது எல்லாமே மறைந்துபோய்விட்டது. ஊடகங்களுக்குப் போதும் போதும் என்னுமளவுக்கு நரேந்திர மோடி செய்திதானம் செய்துகொண்டிருக்கிறார். எனவே பெண்களின் பாதுகாப்பு இப்போது செய்தி மதிப்பை இழந்துவிட்டது.நாடே கொந்தளித்த நேரத்திலும்கூட தமிழ்நாட்டில் பெரிய அளவுக்குப் போராட்டங்கள் நடக்கவில்லை. இங்கு மகளிர் அமைப்புகள் இல்லையா அல்லது அவர்களுக்கு இது முக்கியமான பிரச்சனையாகத் தெரியவில்லையா என்பது புரியவில்லை. 

பாலின பாரபட்சம் துலக்கமாகத் தெரியும் அமைப்புகளில் ஒன்றான நமது உச்சநீதிமன்றம் அவ்வப்போது பெண்கள் குறித்து அக்கறை காட்டுவதுண்டு. அப்படியான அபூர்வமானதொரு சந்தர்ப்பம் இப்போது அதற்குக் கிடைத்திருக்கிறது. அமிலவீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாநில அரசு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும், சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் ஒரு லட்ச ரூபாயைக் கொடுக்கவேண்டும் மீதமுள்ள இரண்டு லட்ச ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் கொடுக்கவேண்டும் என அணமையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் 2005 ஆம் ஆண்டு அமிலவீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

அமிலவீச்சு என்பது பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது. காதலை நிராகரித்தவர்கள், திருமணம் செய்ய மறுத்தவர்கள், வரதட்சணைக் கொண்டுவர இயலாதவர்கள் - எனப் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவருகிறார்கள். உலகின் பல நாடுகளிலும் அமிலவீச்சு என்னும் வன்முறை நிகழ்ந்துகொண்டிருந்தாலும் பாகிஸ்தான்,பங்களாதேஷ்,கம்போடியா,உகாண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்தான் இது அதிக எண்ணிக்கையில் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

இந்திய சட்டக் கமிஷன் 2008 ஆம் ஆண்டு சமர்ப்பித்த தனது 226 ஆவது அறிக்கையில் அமிலவீச்சு என்னும் வன்முறை குறித்து விரிவாகக் குறிப்பிட்டு அதைத் தடுப்பதற்கென சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் என வலியுறுத்தியிருந்தது.அமிலவீச்
சால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு மர்றும் அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள்; அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த சட்டம் இருக்கவேண்டும் என்றும் அது கூறியிருந்தது. ஆனால் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. டெல்லி பாலியல் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும் தனது அறிக்கையில் சட்டக் கமிஷனின் கருத்துகளை எடுத்துக்காட்டி தனியே இதற்கென சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தியிருந்தது.அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கென சட்டம் இயற்றிய மத்திய அரசு அமிலவீச்சு வன்முறையைத் தடுப்பதற்கென தனியே சட்டம் இயற்றாமல் அலட்சியம் செய்து வருகிறது.  

அபாயகரமான முறையில் கொடுங்காயம் ஏற்படுத்துவது என்ற வகையில் இந்திய தணடனை சட்டத்தின் பிரிவு 326 தான் இந்தக் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் அமில வீச்சு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் காரணத்தால் இதச பிரிவு 307ஐப் பயன்படுத்தவேண்டும் என 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியபிறகே காவல்துறை அதைப் பயன்படுத்துகிறது. 

தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவில் அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கும் சில நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நச்சுப் பொருட்கள் குறித்த 1919 ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் அமில விற்பனையை வகைப்படுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. இதற்காக மாநில அரசுகள் தனியே விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது. 

தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு ஒரு தற்காலிக ஏற்பாடுதானே தவிர நிரந்தர தீர்வு அல்ல. சட்டக் கமிஷனும், வர்மா கமிட்டியும் அளித்த பரிந்துரைக்கேற்ப தனியே இதற்கென சட்டம் இயற்றுவதே இதில் மத்திய அரசு உடனடியாகச் செய்யவேண்டிய காரியமாகும். சிறப்பு சட்டம் இயற்றிவிட்டாலே இத்தகைய குர்றங்கள் குறைந்துவிடுமா எனக் கேட்கப்படலாம். பங்களாதேஷில் 2002 ஆம் ஆண்டு அப்படி கடுமையானதொரு சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகு அமிலவீச்சு வன்முறை குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி பாராளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் இதனை வலியுறுத்தி மகளிர் அமைப்புகள் குரலெழுப்பவேண்டும். அமைப்பாகத் திரட்டப்பட்ட இடதுசாரிக் கட்சிகளின் மகளிர் அமைப்புகளும்,தன்னார்வக் குழுக்களும்,மனித உரிமை அமைப்புகளும் இதற்காகக் களம் இறங்கினால் நிச்சயம் இதை சாதிக்க முடியும்.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு



வாழ்க்கை வரலாறு (Biography) எழுதும் வழக்கம் தமிழில் அவ்வளவாகக் கிடையாது. ஒருவரைப் புகழ்ந்து எழுதப்படும் நூல்களைத்தான் ( Hagiography) இங்கே வாழ்க்கை வரலாறு என்று அழைக்கிறோம். வாழ்க்கை வரலாறு உண்மை விவரங்களை ஆய்வுசெய்து நிறை குறைகளை மதிப்பிட்டு எழுதப்படுகிறது. அத்தகைய கலாச்சாரமே தமிழில் இல்லை என்பதால்தான் நம் சமகாலத்தில் வாழ்ந்த தலைவர்களான அண்ணா, காமராஜர், பெரியார், எம்ஜிஆர் என எவருக்குமே உருப்படியான வாழ்க்கை வரலாறு தமிழில் எழுதப்படவில்லை. இத்தகைய சூழலில் தலைவர் ஒருவருக்கு 12 வால்யூம்கள் கொண்ட வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது என்ற செய்தியே நமக்கு வியப்பளிப்பதாகத்தான் இருக்கும். அம்பேத்கருக்கு மராத்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறுதான் அது. சி.பி. கயர்மோடே என்பவரால் எழுதப்பட்ட அந்த வாழ்க்கை வரலாறு அம்பேத்கரின் பல்வேறு பரிமாணங்களைப் புலப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள். அதன் முதல் பதிப்பு அம்பேத்கர் உயிரோடு இருந்தபோதே 1952 இல் வெளியாகியுள்ளது. 
 
தனஞ்சய் கீர் எழுதிய வாழ்க்கை வரலாறுதான் நமக்குத் தெரியும். அதன் தமிழாக்கம் தோழர் ஆனைமுத்து அவர்களின் முன்முயற்சியால் வெளியானது. கயர்மோடே எழுதிய வாழ்க்கை வரலாறு இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. 
அம்பேத்கர் நூற்றாண்டின்போது மகாராஷ்ட்ர அரசால் அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் ஆங்கிலத்தில் தொகுப்புகளாக வெளியிடும் திட்டம் துவக்கப்பட்டது. அது ஏறக்குறைய முற்றுப்பெற்றுவிட்டது.  அம்பேத்கர் மராத்தியில் எழுதியவையும் பேசியவையும் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. மகாராஷ்ட்ர மாநில அரசே அதைச் செய்தால் நல்லது. அப்படிச் செய்யும்போது கயர்மோடே எழுதிய வாழ்க்கை வரலாறும் மொழிபெயர்க்கப்பட்டுவிடும். அதற்கான அழுத்தத்தை தலித் இயக்கங்கள் ஏற்படுத்தவேண்டும். 
 
இதை மகாராஷ்ட்ர அரசுதான் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. மாயாவதி நினைத்திருந்தால் அம்பேத்கர் பூங்காக்கள் அமைத்த செலவில் ஒரு சிறு பகுதியைக்கொண்டு இதை செய்திருக்கலாம். ஆனால் அம்பேத்கரை வெற்றுக் குறியீடாக மட்டுமே பயன்படுத்த விரும்பும் மாயாவதி போன்ற அரசியல் தலைவர்களுக்கு இதில் ஆர்வம் இருக்காது. அவர் மட்டுமல்ல எந்தவொரு தலித் கட்சியாலும் செய்யக்கூடிய ஒன்றுதான் இது. ஒரு வால்யூமை மொழிபெயர்க்க ஒரு லட்சம் தருவதாகச் சொன்னால் ஒரே மாதத்தில் 12 வால்யூம்களையும் மொழிபெயர்த்துவிடலாம்.அந்தத் தொகையைத் திரட்டுவது தலித் இயக்கங்களால் முடியாத ஒண்ட்ரு அல்ல.  அதற்குத் தேவை அரசியல் உறுதி மட்டும் தான்!

Thursday, July 18, 2013

தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களின் கருத்துகளும் சமூக நீதி அரசியலின் எல்லையும்


-  ரவிக்குமார் 


இந்தியாவின் தலைமை நீதிபதியாக திரு. சதாசிவம் அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்.சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக வருவது இதுவே முதல் முறை. இந்தியக் குடியரசுத் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்தமுறை வர முடியவில்லை; பிரதமராக இதுவரை ஒருமுறைகூட வர முடியவில்லை இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தமிழர் ஒருவர் வந்திருப்பது முக்கியமானதாயிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டின் அடிப்படையான பல பிரச்சனைகள் குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. காவிரி நதிநீர் பிரச்சனை; முல்லைப் பெரியாறு பிரச்சனை; கச்சத்தீவு பிரச்சனை என்பவை அவற்றுள் சில.இவை எல்லாவற்றையும்விட 69% இடஒதுக்கீடு வழக்கும் பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில்  உள்ளது.இந்த வழக்குகளில் இவரது பதவிக்காலத்தில் தீர்ப்புகள் வந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் இவர் ஓய்வுபெற ஒன்பது மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் இந்த வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வருமா எனத் தெரியவில்லை. இவற்றுக்கு அப்பால் தலைமை நீதிபதி என்னும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நீண்டகாலத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை முடிவுகளை அவர் எடுக்க முடியும்.அதற்கான அறிகுறிகள் அவரது பேச்சில் தென்படுகின்றன. அது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்னர் அளித்த பேட்டிகளில் சில கருத்துகளை வெளிப்படையாகவும் உறுதியாகவும் பேசியிருக்கிறார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களும், பெண்களும் உரிய அளவில் பங்கேற்க வழிசெய்யப்பட வேண்டுமென அவர் சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப தற்போதிருக்கும் நீதிபதிகள் நியமனம் குறித்த விதிகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முன்முடிவோடு இருக்கும் ஆங்கில ஊடகங்கள் இதை நிச்சயம் வரவேற்கப் போவதில்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் அதிலும் குறிப்பாக சமூகநீதிக்காக குரல்கொடுக்கும் கட்சிகளால் நடத்தப்படும் ஊடகங்களாவது இதை முக்கியத்துவம் தந்து விவாதித்திருக்கவேண்டும். நேற்றிரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் இது அலசப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்றவர்கள் போதிய தயாரிப்போடு வந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் சிலவற்றைப் பற்றி கூறிய செய்திகள் நமது நீதி அமைப்பில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டின என்றாலும் அந்த விவாதம் இன்னும் சீரியஸான விதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

நீதி அமைப்பில் நியாயமான பிரதிநிதித்துவம் ( Fair Representation)  என்பதற்கு அர்த்தம் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பது மட்டும் அல்ல. இட ஒதுக்கீடு என்பது நியாயமான பிரதிநிதித்துவத்துக்கு நாம் கண்டறிந்திருக்கும் ஒரு வழிமுறை.இட ஒதுக்கீடு என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேகூட நாம் நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்கமுடியும். நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை ஐந்து பெண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வர முடிந்திருக்கிறது.நமது மக்கள் தொகையில் பாதி அளவினராக இருக்கும் பெண்களின் நிலையே இதுவென்றால் தலித்துகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம். தலித் சமூகத்திலிருந்து ஒருவர் தலைமை நீதிபதியாகவே இருந்தாரே என்று கேட்கப்படலாம். குடியரசுத் தலைவராக ஒரு தலித் இருந்ததைப் போலத்தான் அது.அத்தகைய பொறுப்புகளுக்கு யார் வரமுடியும் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு அவர்கள் இருவருமே சான்றுகள்.தங்களை ஒருசார்பு கொண்டவர்கள் எனச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் தாம் நியாயமாகச் செய்யவேண்டியவற்றைக்கூட அவர்கள் செய்யாமல் போய்விடுகின்றனர். குடியரசுத் தலைவராக இருந்த திரு கே.ஆர்.நாராயணன் சற்றே துணிச்சலாக சில நடவடிக்கைகளை எடுத்தார். 1996 - 2001 தி.மு.க ஆட்சியின்போது பொடா சட்டத்துக்கு முன்னோடியாக தயாரித்து அனுப்பப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவர் செய்த நல்ல காரியங்களில் ஒன்று. ( தமது கூட்டாளியாக இருந்த திமுக ஆட்சி உருவாக்கிய அந்த சட்டத்தைப் பார்த்துதான் அப்போது மத்தியில் ஆண்டுகொண்டிருந்த பா.ஜ.க தலைமையிலான அரசு பொடா சட்டத்தையே வடிவமைத்தது)  அதைப்போலவே அரசியலமைப்புச் சட்டத்தை மதவாத நோக்கில் திருத்துவதற்காக பாஜக செய்த முயற்சிகளை முறியடித்தது அவரது மிகப்பெரும் சாதனை! ஆனால் தலித்துகளுக்காக ஒரு குடியரசுத் தலைவராக அவரால் என்ன செய்ய முடிந்தது எனப் பார்த்தால் ஒரே ஒரு விஷயத்தைத்தான் குறிப்பிட முடியும்.  தலித் மக்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாநில ஆளுநர்கள் சிலரைக் கொண்டு ஒரு கமிட்டியை அவர் ஏற்படுத்தினார். ஆனால் அன்றிருந்த பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவு சற்றும் இல்லாத நிலையில் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை.அது பிறந்தபோதே இறந்துவிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் திரு கே.ஆர்.நாராயணன் அளவுக்குக்கூட எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. அவர்மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டபோதுதான் அவர் ஒரு தலித் என்பதே அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும்! இப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலையில்கூட அவர் தலித் மக்கள்மீதான வன்கொடுமைகள் குறித்து வாய்திறப்பதில்லை. அந்த அளவுக்கு அவர் நடுநிலையானவர்!

தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் திரு சதாசிவம் அவர்கள் நீதித்துறையில் சமூகநீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக இருந்தாலும் நம்முடைய அரசியல்,சமூக அமைப்பு அதை எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்பது தெரியவில்லை. அதை நிறைவேற்றுவதற்கான சூழலை அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் தாம் உருவாக்கித் தரவேண்டும். திரு.சதாசிவம் அவர்கள் நீதிபதிகளின் நியமனம் குறித்து சொன்ன கருத்தைப் போலவே முக்கியமானது கௌரவக் கொலைகள் குறித்து அவர் சொல்லியிருக்கும் கருத்தாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் திரு.மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் அளித்த தீர்ப்பில்( Arumugam Servai VS State of Tamilnadu , 2011 ) கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். சட்டக் கமிஷனும் அதற்கான மசோதாவைத் தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்து விட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கென அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி தனது அறிக்கையில் இதற்காக ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கி பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு இதற்காக இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தலித் மக்களின் குடிசைக்குள் நுழைந்து பார்த்து அவர்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பதுபோல போஸ் கொடுத்தாலே அவர்களது வாக்குகளை வாங்கிவிடலாம் என காங்கிரஸ் நம்புகிறது போலும். ’இளம் தலைவர்’ ராகுல் காந்தி ஆரம்ப காலத்தில் அடித்த ‘ஸ்டண்ட்டுகளைக்’கூட இப்போது மறந்துவிட்டார். அவர் பாராளுமன்றத்தில் தனது அலங்காரமான உரை ஒன்றில் குறிப்பிட்ட கலாவதி என்ற கற்பனைப் பாத்திரம் இப்போது காற்றில் கரைந்துவிட்டது. பா.ஜ.கவைப் பற்றிப் பேசவே தேவையில்லை. அவர்களது அரசியல் திட்டத்தில் தலித்துகளுக்கு எந்த இடமும் இருந்ததில்லை. அவர்கள் மீட்டெடுக்க முனையும் வர்ணாஸ்ரம அரசியல் தலித்துகளை மீண்டும் முழு அடிமைகளாக்கும் உள்ளடக்கத்தைக்கொண்டது.

இந்திய அரசியல் இப்படி வெளிப்படையான அடிப்படைவாதிகளுக்கும் , போலி ஜனநாயகவாதிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு சீரழிகிறது.இந்த இரண்டு ’தேசிய தீமைகளுக்கு’ மாற்றாக முன்மொழியப்படும் மாநிலக் கட்சிகளோ எவ்வித தொலைநோக்குமின்றி அதிகாரவெறியால் மட்டுமே உந்தப்படுபவையாக இருக்கின்றன. அவை ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையே அதற்கு சாட்சி! இந்நிலையில்தான் சற்றே ஆறுதல் அளிப்பதுபோல் நமது தலைமை நீதிபதி பேசியிருக்கிறார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.

ஆனால், நீதித் துறையில் நியாயமான பங்கேற்பு குறித்த அவரது கருத்துகளை விவாதிப்பவர்கள்கூட,  கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் குறித்து அவர் பேசியுள்ளவற்றை ஒதுக்கித் தள்ளுவது வேதனை அளிக்கிறது.இடதுசாரிக் கட்சிகளும் இதில் வாயளவில் ஆதரவு தெரிவிப்பது என்பதோடு முடித்துக்கொள்வது ஏனென்று புரியவில்லை. பா.ஜ.கவுக்குப் போட்டியாக பாராளுமன்றத்தை முடக்குவதில் முன்னணியில் நிற்கும் தமிழக எம்.பி க்கள் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி துவங்க இருக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரிலும் அவரவர் கட்சியின் நலனுக்கு ஏற்ப போராட்டங்களை நடத்துவார்கள். தி.மு.கவுக்கு சேது சமுத்திரத் திட்டம், அதி.மு.க வுக்கு காவிரிப் பிரச்சனை என அவர்களுக்குக் கைகொடுக்க பிரச்சனைகளும் ‘ஸ்டாக்கில்’ இருக்கின்றன. ஒன்றுமட்டும் நிச்சயம்! அவர்கள் எவரும் கௌரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த சட்டம் இயற்றுங்கள் எனக் கேட்கப்போவதில்லை. இதுதான் நமது சமூக நீதி அரசியலின் எல்லை! 

Wednesday, July 10, 2013

நீதிமன்றத் தண்டனையே பதவியைப் பறிக்க போதுமானதா?



நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் அப்பீல் செய்தாலும் எம்பி, எம் எல் ஏ பதவி இழப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் களத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது  பாராளுமன்ற,  சட்டமன்ற அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதாகவே இருக்கும். 

பழிவாங்கும் அரசியல் கோலோச்சும் இந்த நாட்டில் , நீதி அமைப்பும் அதன் தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் இந்த நேரத்தில் வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு பதிலாக அதிகாரத்தில் இருப்பவர்கள் தமக்குப் பிடிக்காத எவரொருவரையும் பதவி இழக்கச் செய்வதற்கான குறுக்கு வழியாக மாறிவிடும். உதாரணத்துக்கு விஜயகாந்த் மீது போடப்படும் அவதூறு வழக்கு ஒன்றில்  அவர் தண்டிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் உடனே அவரது பதவி பறிபோய்விடும். அப்பீல் செய்து அவர் நிரபராதி எனத் தீர்ப்பு பெறுவதற்குள் பல தேர்தல்கள் வந்துபோய்விடும். அப்புறம் அவரது அரசியல் வாழ்வு என்ன ஆகும் என எண்ணிப்பாருங்கள். 

நமது நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் கீழ் கோர்ட்டுகளில் விரைந்து வழக்கை முடித்து எவருக்கும் தண்டனை பெற்றுத் தந்துவிடமுடியும். அப்பீல் வாய்ப்பு என்பது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடு அல்ல. அது நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு. இதனைக் கருத்தில்கொண்டுதான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் அதற்கான பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மட்டுமின்றி இந்திய தண்டனை சட்டத்தையும் கேள்விக்குறி ஆக்கி உள்ளது. இதை மகத்தான தீர்ப்பு என ஊடகங்கள் கொண்டாடுவது வியப்பளிக்கிறது. 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு ஒன்றை ரத்து செய்திருக்கும் இந்தத் தீர்ப்பு அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கென சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவை அளித்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.  

legislature மற்றும் judiciary ஆகிய அமைப்புகள் ஒன்றன் அதிகார வரம்பில் மற்றது குறுக்கிடாமல் இருப்பதே நல்லது. அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவது கவலைக்குரியதுதான். அதைத் தடுக்கவேண்டியதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால் அரசியலைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பையும் அதிகாரத்தையும் நீதித்துறையின் கையில் முழுமையாக ஒப்படைப்பது ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தாகவே முடியும். அது அதிகாரத்துவம் வலுப்பெறவே வழிவகுக்கும். 

சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தீர்ப்பு நன்மையைவிடக் குழப்பத்தையே அதிகரிக்கச் செய்திருக்கிறது. மத்திய அரசுதான் இந்தக் குழப்பத்தைக் களையவேண்டும். 

Wednesday, July 3, 2013

தலித்துகள் ஒன்றுபடமாட்டார்களா?



தமிழக தலித் தலைவர்கள் ஒன்று சேரமாட்டார்களா? என்ற ஆதங்கம் ஒவ்வொரு தலித்தின் நெஞ்சிலும் துடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைத் தீர்த்துவைக்க எந்தவொரு மீட்பரும் விண்ணிலிருந்து குதித்து வரப்போவதில்லை. தலித்துகளின் ஒற்றுமை மட்டுமே அதை சாதிக்கும். தலித்துகள் ஒன்றுபடவேண்டுமெனச் சொல்வது தலித் கட்சிகளின் பேர சக்தியை அதிகரிப்பதற்காக அல்ல. தலித்துகள் சுயச்சார்பு பெறுவதற்காக! 

1997 ஆம் ஆண்டு மும்பையில் தற்கொலை செய்துகொண்ட தலித் கவிஞர் விலாஸ் கோக்ரே வின் வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன். ராமாபாய் காலனியில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் தலித் இயக்கங்கள் ஒன்றுபடவேண்டும் என வலியுறுத்தியும் அவர் தூக்கிட்டு இறந்தார். ஆனாலும்கூட அங்கே அந்த ஒற்றுமை உருவாகவில்லை. இந்திய அளவில் தலித் அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் இப்போது தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது.  இதை தலித் அரசியல் தலைவர்கள் உணரவேண்டும். 

மனித வளம் பெருமளவில் இருந்தாலும் இன்னும் தலித் மக்கள் கையேந்திகளாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை திறன் கொண்டவர்களாக மாற்றினால் போதும். அதன்பிறகு அவர்களது முன்னேற்றத்தை அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்! தலித்துகளின் பொருளாதாரத் தற்சார்பை உருவாக்குவதே தலித் தலைவர்களின் முன்னிருக்கும் முதன்மையான பணி! 

ராமாபாய் காலனி துப்பாக்கி சூடு நடந்த ஜூலை 11 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்க முன்வருபவர்கள் மறுமொழியிடுங்கள்!