Wednesday, September 25, 2013

நவநீதம் பிள்ளை அவர்களின் வாய்மொழி அறிக்கை




ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர்  நவநீதம் பிள்ளை அவர்களின் வாய்மொழி அறிக்கை மிகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் உள்ளது. கறாராகத் தனது கருத்துகளை அவர் கூறியுள்ளார்.

இலங்கை மீது ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் தொடர்ந்த கண்காணிப்பு தேவை என வலியுறுத்தியிருக்கும் அவர், தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட சுயேச்சையான அமைப்புகளை நியமிக்கும் அரசையலமைப்புச் சட்ட கவுன்சிலைக் கலைத்து அண்மையில் ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த 18 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கைவிட்டு  மீண்டும் 17 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை உயிர்ப்பிக்கவேண்டும் எனவும்;எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனவும்  வலியுறுத்தியிருக்கிறார்.

அண்மையில் இலங்கைக்குச் சென்றபோது முஸ்லிம்,கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகிய சிறுபான்மை மதத்தவர் தாக்கப்படுவது தொடர்பாக பல புகார்கள் தன்னிடம் கூறப்பட்டதாகவும் 2013 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட  227 தாக்குதல்கள் குறித்த தொகுப்பு தன்னிடம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த விவரங்களை அரசாங்கத்துடன் தாம் பகிர்ந்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதை சகித்துக்கொள்ள முடியாது, சிறுபானமை இனத்தவர்மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் வடக்கு மாகாணத்தில் ராணுவம் அதிக அளவில் நிலை கொண்டிருப்பதை ஏற்கமுடியாது எனவும் ராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் பாலியல்ரீதியான சுரண்டலுக்கும்,  வன்கொடுமைகளுக்கும் ஆளாகிவருவதாகவும் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார்.
வடக்கு மாகாணத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒரு சோதனையாக அமைந்திருக்கிறது. ஐ நா மன்றத்தில் ராஜபக்ச பேசியதை அது மௌனமாக ஏற்றுக்கொள்ளப்போகிறதா அல்லது நவநீதம் பிள்ளையின் குரலை வழிமொழியப்போகிறதா என்பதை அறிய உலகம் ஆவலோடு காத்திருக்கிறது.

No comments:

Post a Comment