Thursday, October 17, 2013

வானொலியைக் காப்பாற்ற.....,


முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்திக்காக நாம் அதிகம் சார்ந்திருந்த ஊடகம் வானொலிதான். செய்தி மட்டுமல்ல தொலைக்காட்சி அதிகம் பரவாத அந்தக் காலத்தில் கிரிக்கெட் போட்டியின் நேர்முக வர்ணனை, திரைப்படங்களின் வசனங்களை ஒலிபரப்பும் ஒலிச்சித்திரம் என அது நம்மைப் பலவிதமாக வசீகரித்து வைத்திருந்தது. ஆனால் அது தனது பழைய ஈர்ப்பை இப்போது இழந்து நிற்கிறது. 

தந்திக்கு மூடுவிழா நடத்தியதுபோல வானொலிக்கும் நடத்தியிருப்பார்கள். நல்லவேளை ஃஎப் எம் ரேடியோ வந்து அதைக் காப்பாற்றியது. இப்போது ரேடியோ என்றாலே ஃஎப் எம் தான் என ஆகிவிட்டது. ஆனால் அதில் செய்திகளை ஒலிபரப்ப அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. 

அரசாங்கம் நடத்தும் ஆகாஷ வாணியில் மட்டும்தான் செய்தி ஒலிபரப்பு, தனியார் வானொலியில் அதற்கு அனுமதியில்லை. தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்புக்குத் தடையில்லை. ஊருக்கு ஊர் இருக்கும் உள்ளூர் கேபிள் சேனல்களுக்கும் தடையில்லை. ஆனால் தனியார் வானொலிக்கு மட்டும் தடை என்பது வேடிக்கையாக இருக்கிறது. ( ஆனால் இந்தத் தடை பிபிசி தமிழோசை நிகழ்ச்சிக்குப் பொருந்தாதது ஏன்? ) 

குறைந்த முதலீட்டில் ஒரு கம்யூனிட்டி ரேடியோவை நாம் ஆரம்பிக்க முடியும். 25 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதன் ஒலிபரப்பைக் கேட்க முடியும். அதில் செய்தி ஒலிபரப்ப அனுமதி கிடைத்தால் நிச்சயம் வானொலி மீண்டும் முன்புபோல முக்கியத்துவம் பெறும். 

இதற்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களது அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கும் இந்த வழக்கில் அவர் நல்ல தீர்ப்பை வழங்குவார் என நம்புவோம்! 

1 comment:

  1. இன்று தினமணியில் இதைப்பற்றிய ஒரு கட்டுரை வந்திருக்கின்றது அண்ணா ...!

    ReplyDelete