Friday, October 18, 2013

செம்மொழி நாள்

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்தேதியை செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்க கேரள அரசு முடிவுசெய்திருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையடுத்து இந்த முடிவை கேரள அரசு அறிவித்திருக்கிறது.

கேரள மாநில கலாச்சாரத் துறையும் கேரள சாகித்ய அகாதமியும் இணைந்து மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகளை இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றன. கேரள சாகித்ய அகாதமி மலையாளத்தில் இருக்கும் பழமையான ஆயிரம் நூல்களை எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் ( Digitisation)பிரதியெடுத்து நூலகங்களுக்கு இலவசமாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென தனியாக ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் தகவல்களை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்திருக்கிறார்.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டதுகுறித்துப் பெருமைபடப் பேசி மகிழும் நாம் அந்த அங்கீகாரம் கிடைத்த நாளை நினைவுகூரும் விதமாக எதையும் செய்யவில்லை என்பதை  நினைத்தால் வருத்தமே எஞ்சுகிறது.அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி  தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை  மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது( அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004.) அந்த நாளை நாம் ஏன் கேரள அரசு செய்வதுபோல செம்மொழி நாளாகக் கடைபிடிக்ககூடாது? இதை மாநில அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்பதுகூட இல்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அந்த நாளை செம்மொழி நாள் எனக் கடைபிடித்து ஒரு கருத்தரங்காவது நடத்தலாமே! அவர்களிடம் நிதி நல்கை பெற்று கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உருப்படியில்லாத கருத்தரங்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெறும் செலவுக் கணக்கு காட்டுவதற்கே பெரும்பாலும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என்று எல்லோருக்கும் தெரியும். அந்தக் கருத்தரங்குகளில் சிலவற்றை ஏன் அக்டோபர் 12 ஆம் தேதி நடத்தச் சொல்லக்கூடாது?

 இப்படி எதுவும் செய்யாமல் , சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்பது எவருக்கும் புரியாத மர்மம்.இந்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையைக்கூட செலவழிக்க வகை தெரியாமல் திருப்பி அனுப்புகிற அவலநிலையே அங்கு நிலவுகிறது என்கிறார்கள்.முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல அந்த நிறுவனம் அமைக்கப்பட்டபோது செய்யப்பட்ட தவறுகள் இப்போதும் அதை அரித்துத் தின்கின்றன.

 விருதுகள் வழங்குவது மட்டும்தான் செம்மொழி நிறுவனத்தின் மூலம் நடைபெறும் ஒரே வேலை எனத் தோன்றுகிறது. அதுவாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் அதிலும் ஏராளமான குளறுபடிகள். அந்த நிறுவனத்தின்மூலம் ஆண்டுதோறும் எட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள்பீடம் விருது இருவருக்கும் இளம் அறிஞர் விருது ஐந்துபேருக்கும் வழங்கப்படும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு குறள் பீடம் விருது அயல்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. முதல் மூன்று விருதுகளுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாயும் இளம் அறிஞர் விருதுகளுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படுகின்றன. முதல் மூன்று விருதுகளும் தமிழ் ஆய்வுகளுக்காக ஒருவரது ஆயுட்காலப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு வழங்கப்படுகின்றன. இளம் அறிஞர் விருது பெறுவதற்கு ஒருவர் முப்பது முதல் நாற்பது வயதுக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் தகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை விருது வாங்கிய மூத்த அறிஞர்களின் பட்டியலையும் இளம் அறிஞர்களின் பட்டியலையும் ஒப்பு நோக்கினால் இளம் அறிஞர்களைத் தேர்வு செய்வதில் பெரிய முறைகேடு நடந்துகொண்டிருப்பதை நாம் உணரலாம். அந்த விருதுகளுக்கானவர்களைத் தேர்வு செய்வதில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரது முடிவுதான் செல்லுபடியாகிறது என்கிறார்கள்.இந்த முறைகேட்டைச் சீர்செய்யவில்லையென்றால்  கலைமாமணி விருதுகளைப் போலத்தான் செம்மொழி  விருதுகளும் மதிப்பிழந்துபோகும். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகளைச் சீராய்வு செய்வதற்கு சமூகத் தணிக்கை( Social Audit) மேற்கொள்ளப்படவேண்டும் என நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.அரசாங்கத்தின் திட்டங்கள் பலவற்றையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களை மேம்படுத்த அவை உதவுகின்றன. அதுபோல செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்குத் தமிழ்மீது பற்றுகொண்ட அறிஞர்கள் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment