Tuesday, December 31, 2013

பிரதமருக்கு ஒரு திறந்த மடல் .....



இந்தியப் பிரதமர் திரு மன்மோகன்சிங் அவர்களே வணக்கம்! 


ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நீங்கள் பிரதமர் பொறுப்பேற்ற கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நல்லதும் கெட்டதுமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்திய மக்களின் கல்வி, தனிநபர் வருமானம், சுகாதாரம்- உள்ளிட்ட பல தளங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்துக்காக உங்களைப் பாராட்டுகிறேன். கிராமப்புற வேலை உறுதித் திட்டம், உணவுப்பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் முதலான பல நல்ல காரியங்களை உங்கள் தலைமையிலான அரசு செய்திருக்கிறது. வாழ்த்துகள்! 

நீங்கள் செய்தவற்றுக்காக உங்களைப் பாராட்டும் அதே நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய சில பணிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: 


இந்த நாட்டின் மக்கள் தொகையில் கால் பங்கினராக இருக்கும் தலித் மக்கள் இன்னும் மோசமான வாழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அவர்களது முன்னேற்றம் பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் முதன்முறை பதவியேற்றபோது அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுவாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளும் பாதியில் நிற்கின்றன. அவற்றை நிறைவேற்றுங்கள். 


இரண்டுமுறை நீங்கள் பிரதமர் ஆனதில் தமிழகத்தின் ஆதரவு முக்கியமானது. ஆனால் தமிழர்கள் என ஒரு இனம் இருப்பதே உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகமும் குரல் கொடுத்தும்கூட நீங்கள் காவிரிப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு சிக்கலிலும் தமிழகத்தை வஞ்சித்தீர்கள். தொடர்ந்து எமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் மௌனம் காக்கிறீர்கள். நாங்கள் வேண்டவே வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தும் அணு உலைகளை திணிக்கிறீர்கள். ஈழத் தமிழரின் இனப்படுகொலைக்குப் பங்காளியாக இருந்தது மட்டுமின்றி இப்போதும் சர்வதேச அரங்குகளில் இலங்கையைக் காப்பாற்ற முய்ல்கிறீர்கள். 


திரு மன்மோகன் சிங் அவர்களே! நீங்கள் பிரதமராகப் பதவியேற்றபோது எனது மகன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உங்கள் கல்வித்தகுதிகளையும் பணி அனுபவங்களையும் பட்டியலிட்டு இவர் பிரதமராவதில் பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரைப்போன்ற லட்சக் கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த நீங்கள் உங்களுக்கு வரலாறு வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


 உங்களுக்கிருந்த நெருக்கடிகளை நான் அறியேன். அந்த நெருக்கடிகளை மீறி நீங்கள் கற்ற கல்வி உங்களை மனிதராக வைத்திருக்கும் என நம்பினேன். நீங்கள் சுயநலம் இல்லாதவர் எனவே அறிவு உங்களிடம் வெற்றிபெறும் என நினைத்தேன். 


இன்னும்கூட சில நாட்கள் மிச்சமிருக்கின்றன. நீங்கள் பேச விரும்பியதைப் பேசுவதற்கும் செய்ய விரும்பியதைச் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இனப் பகைவர் என்ற கறையோடும் தலித் மக்களின் துரோகி  என்ற அவப்பெயரோடும் நீங்கள் விடைபெறவேண்டுமா? சிந்தியுங்கள். 

Monday, December 30, 2013

திரு நம்மாழ்வார் அவர்களுக்கு அஞ்சலி



இயற்கை வேளாண்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், வேளாண்துறை  சார்ந்த பிரச்சனைகளைக் கவனப்படுத்துவதில் ஓய்வு ஒழிவின்றி செயல்பட்டவர்- நம்மாழ்வார் அவர்கள் காலமான செய்தி அறிந்து துயருற்றேன். 


காவிரி சிக்கல் தொடர்பாக தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் பங்கேற்றபோதுதான் இறுதியாக அவரை சந்தித்தேன். நாகை மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் முனைப்பாக அவர் ஈடுபட்டிருந்ததை செய்திகளில் பார்த்து வந்தேன். ஆரோக்கியமாகத்தான் தெரிந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த அவரைப் பார்த்தவர்கள் அவரது வயதைக் கவனித்திருக்க மாட்டார்கள். 


இயற்கை வேளாண்மைமூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றபோதிலும் நாடுமுழுவதும் முழுமையாக அந்த முறைக்கு மாறிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி மாறினால் மீண்டும் பஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கானோர் மடியக்கூடும் என்ற அச்சமும் எனக்கு உண்டு. இயற்கை வேளாண்மை என்பது வெறும் தனிமனித விருப்பம் அல்ல. நிலவுடைமை, நிலங்களின் பயன்பாடு, அரசாங்கக் கொள்கை முதலானவற்றோடு தொடர்புகொண்டது. இந்திய வேளாண்மையைத் தீர்மானிப்பதில் பருவநிலைகளைவிட அரசாங்கமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று கார்ல் மார்க்ஸ் கூறிய கருத்தை ஏற்பவன் நான். இருப்பினும் திரு . நம்மாழ்வார் அவர்களின் கொள்கைப் பிடிப்பை நான் மதிக்கிறேன். 


இயற்கை வேளாண்மையைப் பிரபலப்படுத்தியதைவிடவும்  காலியாகிக்கொண்டிருக்கும் கிராமங்கள் குறித்தும், வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும் நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் என்ற அம்சமே எனக்கு முக்கியமாகப் படுகிறது. அவரது பணி நீண்டகாலத்துக்கு நினைக்கப்படும். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 

சி எஃப் எல் பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கவேண்டும்



தமிழக அரசு சார்பில் குடிசை மின் நுகர்வோர்களுக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (C.F.L) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று துவக்கி வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  
சி எஃப் எல் பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கவேண்டும் என வலியுறுத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 13.11.2008 அன்று நான் சட்டப்பேரவையில் பேசியதை இங்கே தருகிறேன்:

திரு. து. ரவிக்குமார்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
  நம்முடைய மின் பற்றாக்குறை நிலவரத்தைச் சமாளிப்பதற்காக, இடைக்காலத்திலே கொண்டுவரப்பட்ட அந்த மின் கட்டண உயர்வை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொது மக்களும் இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, அந்தக் கட்டண உயர்வை இரத்து செய்த, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும் முதலிலே என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இன்றைக்கு மின் கட்டண உயர்வு இரத்தானதற்குப் பிறகு, இப்போது மின் பற்றாக்குறையைப்பற்றி தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.  இந்த மின் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் பல ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நாம் இன்றைக்குக் கொண்டுவந்த புதிய மின் திட்டங்கள், உடனடியாக நிறைவேற்றப்படாமல் இடையூறு ஏற்பட்டதற்கு, அங்கே நிலங்களைக் கையகப்படுத்துவதில் நேர்ந்த பிரச்சினைகளும், எதிர்ப்புகளும்தான் காரணம். இத்தகைய பிரச்சினைகள், குறிப்பாக கடலூர் மாவட்டத்திலே, கடலூர் பவர் புராஜக்ட், அதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டபோது அங்கே பொது மக்களின் பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட நிருவாகத்தின் சார்பாகக் கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.  இப்படியான நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினை வரும்போது மக்கள் அதிக விலை கோருகின்ற நேரத்திலே, இப்போது இந்தியாவிலே மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கின்ற 2007 ஆம் ஆண்டுக்கான R&R Policy  என்று சொல்லப்படுகிற Resettlement and Rehabilitation Policy- நம்முடைய அரசாங்கம்  நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதை அறிவித்திருக்கிறது.  ஆனால், அது மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவதற்குப் போதுமானது அல்ல.  இன்றைக்கு ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற சிறு சிறு மாநிலங்கள் எல்லாம், மாநிலங்களுக்கென்று  தனியே R&R Policy  -  உருவாக்கி இருக்கின்றன. அப்படி அந்தப் பாலிசியை உருவாக்குகின்றபோது,  இத்தகைய நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினை வருகின்றபோது, கூடுதலாகத் தொகையை வழங்கி அந்த நிலங்களைக் கையகப்படுத்துகின்ற வாய்ப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது.  

பிற்பகல் 1-25

அதுபோல, தமிழகத்திலும் நம்முடைய மாநிலத்திற்கென்று  மத்திய அரசுக்கு அப்பாற்பட்டு Resettlement and Rehabilitation Policy உருவாக்கப்படவேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால்தான் இத்தகைய நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அடுத்ததாக, நம்முடைய மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்குப் புதிதாக மின் உற்பத்தியை எப்படியெல்லாம் செய்யலாம் என்று யோசிக்கின்ற அதே நேரத்திலே, ஏற்கெனவே நம்முடைய பயன்பாட்டை எந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்;  வீணாகச் செலவழிகிற மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என்று யோசிப்பதும் மிக முக்கியமானது.  சில மாதங்களுக்கு முன்னாலே உத்தரப்பிரதேச மாநிலத்திலே எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கையை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.  கடந்த ஜூலை மாதத்திலே உத்தரப்பிரதேச மாநிலம் ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது. அரசாங்க அலுவலகங்கள், அரசு சார்பான அலுவலகங்கள் எல்லாவற்றிலும் பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது. C.F.L  என்று சொல்லப்படுகின்ற Compact Fluorescent Lamp-களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது.  அதுமட்டுமல்லாமல் பல்புகளை முற்றாகத் தடை செய்திருக்கின்றது.  அப்படிச் செய்ததன்மூலம் நாள் ஒன்றுக்கு 100 மெகா வாட் மின்சாரத்தை அந்த மாநிலத்திலே  மிச்சப்படுத்துகிறார்கள்.  

அதுமட்டுமல்லாமல், இதே முறையை வீடுகளிலும் பின்பற்றினால் நாள் ஒன்றுக்கு 800 மெகா வாட் மின்சாரம் அங்கே மிச்சப்படுத்தப்படும் என்று திட்டமிட்டு, அதற்கான செயல்பாட்டிலே அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள்.  புதிதாக மின்னிணைப்புகள் பெற வேண்டுமென்று சொன்னால், அந்த வீடுகளிலே பல்புகளுக்குப் பதிலாக சி.தி.லி. மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தால்தான் அங்கே புதிய மின்னிணைப்புகள்  வழங்கப்படுகின்றன.  அப்படி ஒரு அறிவிப்பை நம்முடைய மாநில அரசும் செய்வதற்கு முன்வர வேண்டும். ஏற்கெனவே நம்முடைய மின்சாரத் துறை சார்பாக C.F.L ஐப் பயன்படுத்துவதற்கான அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும் அது Optional ஆகத்தான் இருக்கிறது. அது நுகர்வோர்களுடைய விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது.  அது கட்டாயமாக்கப்படவேண்டும்.  

அதிலும் குறிப்பாக, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் இதிலே முன்முயற்சி எடுத்து உள்ளாட்சித் துறை சார்பாக செய்யப்படுகின்ற அனைத்துப் பணிகளுக்கும் குறிப்பாக பஞ்சாயத்துகளிலே  மின் விளக்குகள் பொருத்துகின்ற பணிகள் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் இந்த C.F.L.-ஐப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். 
அதுமட்டுமல்லாமல், நாம் இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.  ஏற்கெனவே 60 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியிருக்கின்றோம்.  மேலும் 40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு இப்பொழுது நாம் அனுமதியளித்திருக்கின்றோம்.  இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெறுகிறவர்கள், வீடுகளிலே, C.F.L. இருக்க வேண்டும் என்பதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினால் நிச்சயமாக தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற கூடுதல் மின் செலவை நாம் இந்த , C.F.L..-ஐப் பயன்படுத்துவதன்மூலம் ஈடுகட்ட முடியும்.

அதுமட்டுமல்லாமல், இப்போது தொழிற்சாலைகளிலே ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதித்திருக்கின்றோம்.  ஜெனரேட்டர்களுக்கு மானியமும் நம்முடைய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இப்போது சர்வதேச சந்தையிலே கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்திருக்கிறது.  ஒரு  பேரல் 57 டாலர்  என்கின்ற அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது.  இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு நாம் இந்த ஜெனரேட்டர்களுக்கு வழங்குகின்ற டீசல் மொத்தத்திற்கும் மத்திய அரசு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்கின்ற கோரிக்கையை நாம் முன்வைத்து மத்திய அரசிடமிருந்து அந்த டீசலுக்கான வரி விலக்கைப் பெறவேண்டும். அப்படிச் செய்தோமேயானால் நம்முடைய மாநிலத்திற்கான நிதி இழப்பையும் ஈடுகட்ட முடியும். . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ரவிக்குமார், உரையை முடியுங்கள். நேரம் ஆகிவிட்டது.

திரு. து. ரவிக்குமார்: அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நமக்கு மத்திய மின் பகிர்மானத்திலிருந்து வரவேண்டிய மின்சாரத்திலே குறைவு ஏற்பட்டதனால்தான் இத்தகைய தடையை நாம் இங்கே சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.  இதனிடையே ஒரு செய்தி எனக்கு மின்னஞ்சலிலே வந்தது.  அதிலே நமது மாநிலத்தைச் சேர்ந்த கார்வேந்தன் என்கிற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.பி. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து அவர் கோரிக்கை விடுத்து, இன்றைக்கு 600 மெகா வாட் அளவுக்கு  மின்சாரம். . .

பிற்பகல் 1-30

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன்னனுமதியுடன் பேரவையின் அலுவல் நேரம் நீட்டிக்கப்படுகிறது.  உரையை முடியுங்கள்.  மணி 1-30 ஆகிவிட்டது

திரு. து. ரவிக்குமார்: மத்திய அரசு வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக ஒரு செய்தி வந்து இருக்கிறது. அது உண்மையா என்பதையும் நான் உங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழும் என்ற ஒரு கருத்தை மட்டும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன், வணக்கம்.     

Saturday, December 28, 2013

ஆம் ஆத்மி அரசாங்கம் தமிழ்நாட்டில் மின்கட்டணத்தைக் குறைக்குமா ?



டெல்லியில் ’மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்போம்’ என அர்விந் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அக்கட்சி முதலில் நிறைவேற்றவேண்டிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. 


தற்போது டெல்லியில் ஒருவர் 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அவர் 3300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். முதல் 200 யூனிட்டுகளுக்கு 3.90 வீதம் 780/- அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 5.80 வீதம் 1160/- அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 6.80 வீதம் 1360/-. ஆக மொத்தம் 3300 ரூபாய். இதைப் பாதியாகக் குறைக்கப்போவதாக கெஜ்ரிவால் சொல்லியிருக்கிறார். அப்படிக் குறைத்தால் 1650/- ரூபாய்தான் வரும். 


தமிழ்நாட்டில் ஒருவர் அதே 600 யூனிட் மின்சாரத்தை இப்போது வீட்டுக்குப் பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ருபாய் வீதம் 600/- அடுத்த 300 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் வீதம் 1200/- அடுத்த 100 யூனிட்டுகளுக்கு 5.75 வீதம் 575/- ரூபாய். ஆக மொத்தம் 2375/- ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். 


தற்போதிருக்கும் நிலையில் டெல்லியைவிட தமிழகத்திலிருக்கும் மின்கட்டணம் குறைவு என்றாலும் கெஜ்ரிவால் கட்டணக் குறைப்பு செய்துவிட்டால் அதனுடன் ஒப்பிட தமிழ்நாட்டு மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். ஊழல் காரணமாகவே டெல்லியில் மின்கட்டணம் அதிகமாக இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வந்தது. தமிழ்நாட்டில் மின்கட்டணம் அதிகமாக இருப்பதற்கு எது காரணம் எனத் தெரியவில்லை. 


டெல்லியில் அர்விந் கெஜ்ரிவால் மின்கட்டணத்தைக் குறைத்துவிட்டால் நிச்சயம் அது தமிழக அரசியலில் எதிரொலிக்கும். இங்கு மட்டும் ஏன் அதிகக் கட்டணம் என்ற கேள்வி எழும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை சும்மாவிடமாட்டார்கள். 


டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. டெல்லி மின் மிகை மாநிலம். தமிழ்நாட்டிலோ குளிர்காலத்திலும்கூட பல மணிநேர மின்வெட்டு.

மின்சாரம் இருக்காது ஆனால் மின்கட்டணம் மட்டும் ஆயிரக் கணக்கில் செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா?

Friday, December 27, 2013

ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்கவேண்டும்!

சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட

ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்க

இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர்கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  தமிழீழத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடன் சுற்றுப் பயணத்திலிருந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர்.  எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில் அவரை சிங்களப் படையினர் கைது செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மகா தமிழ்பிரபாகரன் ஏற்கனவே இலங்கைக்குச் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


பொதுவாகஊடகவியலாளர்கள் எவரையும் இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற சனநாயக விரோத நடவடிக்கையில் இராஜபக்சே அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.  சர்வதேச ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும்,மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும்,இலங்கைத் தீவினுள் நுழையவே விடாமல் தடுக்கப்படுவதும் அங்கே தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.  தற்போது மகா தமிழ்பிரபாகரனும் அவ்வாறே சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.


சிங்களப் படையினரின் இத்தகைய சனநாயக விரோதப் போக்கை அனைத்துலக ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்திட முன்வரவேண்டும். இப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கையை உடனடியாகக் கண்டித்ததைப் போல சிங்கள அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்பதுடன்தமிழ் பிரபாகரனை விரைவாக மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

 

இவண்

 

தொல்.திருமாவளவன்


 


Thursday, December 26, 2013

2013 ஆம் ஆண்டின் சமூக அநீதியாளர் யார்?



தமிழ்நாட்டில் சமத்துவ சிந்தனைக்குத் தடைபோட்டு, குடி அரசுக் கோட்பாடுகளைக் குழிதோண்டிப் புதைத்து,   எளிய மக்களின் வாழ்வில் மிகப்பெரும் இன்னல்களை ஏற்படுத்தியதில் முதலில் நிற்கும் ஒரு நபரை அடையாளம் கண்டு அவருக்கு ' சமூக அநீதியாளர்' என்ற விருதை வழங்க விரும்புகிறேன். இந்த விருதை அவர் தனது பெயரில் முன்னாலோ பின்னாலோ போட்டுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. இந்த விருது ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கப்படும். 


தகுதிகள்: 


1. சமூக அநீதியாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு சமூக இயக்கம்/ அரசியல் கட்சி/ அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி இருந்தால் அதில் தடையும் இல்லை.


2. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் சொல்லாலும் செயலாலும் சமூக சமத்துவத்துக்கு எதிரானவராகவும்; சமூக அமைதியைக் கெடுப்பவராகவும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிகளைப் புறக்கணிப்பவராகவும் இருக்கவேண்டும். 


3. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவரால் சட்டம் ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்பட்டு சமூக அமைதி சீர்குலைந்ததற்கான ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படவேண்டும். 


விருதாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை: 


விருதாளரைத் தேர்ந்தெடுப்பதில் முழுமையான ஜனநாயகத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். எனவே சமூக வலைத் தளங்களில் பங்கேற்றுள்ள அனைவரும் இதில் பங்களிப்புச் செய்யலாம். 


விருது பெறுபவருக்கு சமூகநீதியைப் போதிக்கும் விதமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதி ஒன்று அனுப்பி வைக்கப்படும். தாங்கள் விரும்பினால் அதுபோலவே  யார்வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். 


விருதுக்குத் தகுதியானவர் யார் என்பதை ஓரிரு வரிகளில் விளக்கி இங்கே பின்னூட்டமாக இடுங்கள். 


இதைக் கண்ணுறும் ஊடக நண்பர்கள் இந்தச் செய்தியைத் தமது ஊடகங்களில் வெளியிட்டு உதவுங்கள். 


இந்த அறிவிப்பை நண்பர்கள் தமது முகநூல் மற்றும் வலைப் பூக்களில் பகிரும்படி வேண்டுகிறேன். 

Sunday, December 15, 2013

ஒற்றுமைக்கான ஓட்டம்


ஓடலாம் வா என அழைக்கிறாய்


ஓட்டம் என்றதும் 

நினைவுக்கு வருகிறது பதறி ஓடிய சிறுமியின் முகம்

குழந்தையைத் தேடிக்கொண்டு ஓடிய தாயொருத்தியின்  கதறல்

தப்பித்து ஓடிய முதியவரின் தோற்றம்


விரட்டிக்கொண்டு ஓடியவர் 

தீப் பந்தத்தோடு ஓடியவர்

வயிற்று சிசுவை வகிர்ந்தெடுத்து

கொளுத்திய களிப்பில்

கூச்சலிட்டு ஓடியவர்

நினைவுக்கு வருகிறது 


தெருக்களில் ஓடிய

வன்மம்

குருதி


ஊரெங்கும் வெறுப்பை ஓடவிட்ட 

நீ அழைக்கிறாய்

ஒற்றுமைக்கான ஓட்டத்துக்கு


ஓட்டம் என்றதும் நான் நினைத்துக்கொள்கிறேன்

அந்த சிறுமியின் முகத்தை

தாயின் அலறலை

முதியவரின் தோற்றத்தை

வன்மத்தை

ரத்தத்தை....

Saturday, December 14, 2013

மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மக்களின் தலைவிதியா?



2014 இல் மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற யூகங்கள் இப்போது சிறிய கட்சிகளுக்கும்கூட அதிகாரப் பசியை அதிகப்படுத்தியுள்ளன. அப்படி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் இந்தக் கட்சிகள் எந்தத் துறைகளைக் கேட்கும்? வருமானமும் அதிகாரமும் எங்கே அதிகம் இருக்குமோ அந்தத் துறைகளுக்குத்தான் போட்டியும்  அதிகமிருக்கும் என்பது வெளிப்படை.

இந்தியாவிலிருக்கும் மாநிலக் கட்சி எதற்கும் தனியே பொருளாதாரக் கொள்கையோ, வெளியுறவுக் கொள்கையோ , பாதுகாப்புக் கொள்கையோ இருப்பதாகத் தெரியவில்லை. இருபது வருட கூட்டணி ஆட்சி அனுபவத்துக்குப் பிறகும்கூட இதைப்பற்றி மாநிலக் கட்சிகள் கவலைப்படவில்லை. அவை தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் எந்த அளவுக்கு உலக ஞானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாடு அறியும். அவர்கள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்களா என்று பார்க்கப்படுகிறது. தேர்தலில் செலவுசெய்வார்களா என்று பார்க்கப்படுகிறது. அவர்களது சாதி வாக்குகளை வாங்கக்கூடியவர்களா என்று பார்க்கப்படுகிறது. இதெல்லாம் இன்றைய அரசியலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இவற்றைப் பார்க்கும் கட்சித் தலைமைகள் அவர்களது ஆளுமை என்னவென்று பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி ஒரு துறையை சிறப்பாக நிர்வகிக்க முடியும்? கடந்த இருபது ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிலிருந்து சென்று மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்து ஒரு துறையில் முத்திரை பதித்தவர் இவர் என எத்தனைபேரை நாம் குறிப்பிட முடியும்?

தேசியக் கட்சிகளைப் புறக்கணித்து மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பதென்பது மக்களின் தலைவிதி என்ற மிதப்பில் மாநிலக்கட்சிகளின் தலைமைகள் நடந்துகொண்டால் அதற்கான விலையை அவை கொடுக்கத்தான் வேண்டியிருக்கும்.