நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமெனக் கூறப்படும் நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அது பெற்றிருக்கும் இடங்கள் சற்றே அந்தக் கட்சிக்கு ஆறுதலைத் தந்திருக்கின்றன. அங்கு எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதைவிடவும் அந்த ஆட்சி சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 35 சதவீதமிருக்கும் பழங்குடிகள் மற்றும் 12 சதவீதம் இருக்கும் தலித் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதே முக்கியம்.

கடந்த முறை வெற்றிபெற்ற ரமண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் சத்தீஸ்கரில் மீண்டும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் கூறிவந்தன. பா.ஜ.க-வுக்கு 51 முதல் 66 இடங்கள்வரை கிடைக்குமென்றும் காங்கிரஸுக்கு 20 முதல் 42 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் பல்வேறு விதமான கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. மற்ற மாநிலங்களில் அந்தக் கணிப்புகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன என்றாலும், அதிருப்தி வாக்குகளால் பா.ஜ.க. அரசுகள் பாதிக்கப்படவில்லையென்ற கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் மதிப்பீடு சத்தீஸ்கரில் பொய்த்துப் போயிருக்கிறது.
சத்தீஸ்கரில் மேலும் சில இடங்களைக் காங்கிரஸ் வென்றிருக்க முடியும். ஆனால், அண்மைக் காலமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவரும் பா.ஜ.க. ஆதரவு புகைமூட்டம் சத்தீஸ்கரின்மீதும் கவிந்துகிடந்தது. அதில் சிக்கிக்கொண்ட காங்கிரஸ்காரர்களும் யதார்த்தத்தைப் பார்க்க முடியாமல் திகைத்துப்போனார்கள். தங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்குக் கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைமையும் தவறிவிட்டதென்றே சொல்ல வேண்டும். 

காங்கிரஸின் கனவு
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் ஒன்றுபட்ட மத்தியப் பிரதேசத்தில் பழங்குடிகளும், தலித் மக்களும் பாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களித்துவந்தார்கள். சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டதற்குப் பிறகும் அவர்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் கனவு கண்டிருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு அங்கு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தபோதுதான் காங்கிரஸின் உறக்கம் கலைந்தது. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், ஸேவா பாரதி போன்ற அமைப்புகளைத் துவக்கி, சங்கப் பரிவார அமைப்புகள் பழங்குடிகளின் மத்தியில் பணியாற்றியதன் விளைவே இந்த மாற்றம். காங்கிரஸ் கட்சி ஆதிவாசிகளை வெறும் வாக்கு வங்கியாக நினைத்திருக்க சங்கப் பரிவார அமைப்புகளோ ஒருபுறம் பழங்குடிகளின் மத்தியில் பணியாற்றிவந்த கிறித்தவ தொண்டுநிறுவனங்களை அச்சுறுத்தி விரட்டியடித்தல், இன்னொருபுறம் பழங்குடிகளுக்குக் கல்வி, மருத்துவம் முதலான சேவைகளைச் செய்தல் என்ற இருமுனைத் தாக்குதலை மேற்கொண்டு அவர்களைத் தமது அரசியல் வலைக்குள் கொண்டுவந்துவிட்டன. 

பழங்குடிகளின் ஐயம்
சங்கப் பரிவாரங்களின் நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்ட பின்னரும்கூட காங்கிரஸ் பழங்குடிகளுக்காக உருப்படியான திட்டங்கள் எதையும் உருவாக்கவில்லை. 

அண்மையில் மத்திய அரசால் இயற்றப்பட்ட நில ஆர்ஜித சட்டம் ஆதிவாசிகளுக்கு உதவக்கூடியதுதான் என்றபோதிலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் குறிவைத்துதான் காங்கிரஸால் அந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்ற ஐயம் பழங்குடிகளுக்கு எழாமலில்லை. அதுமட்டுமின்றி பழங்குடிகளின் பாரம்பரியமான வனப்பகுதிகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த காங்கிரஸை அவ்வளவு எளிதாக அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. 

பழங்குடிகளின் வாக்குகளைக் கவர்ந்த பா.ஜ.க. அதே அணுகுமுறையைப் பயன்படுத்தி அங்கிருக்கும் தலித் மக்களை ஈர்க்க முடியவில்லை. அதற்குக் காரணம் அங்கு தலித் சமூகத்தின் பெரும் பகுதியாக இருக்கும் சத்நாமிகள். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் குரு காஸிதாஸ் என்பவரால் வழிநடத்தப்பட்ட அந்த மக்கள் பாரம்பரியமாக இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானவர்கள். குரு காஸிதாஸ், மகாத்மா காந்திக்கு ஆதரவாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், அவருக்குப் பிறகு குருவாக வந்த ஆகம் தாஸ் என்பவரின் மனைவியான மினி மாதா இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். 

கன்ஷிராம் வருகை
1972-ல் அவர் விமான விபத்தில் இறந்ததற்குப் பின்னர், அந்தச் சமூகத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் கன்ஷிராம் அரசியல் களத்துக்கு வந்தார். அதன் பின்னர் சத்நாமிகள் பெரும்பாலும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். ஆனால், மாயாவதியின் சாதுர்யமற்ற அணுகுமுறை இந்தத் தேர்தலில் அவர்களை மீண்டும் காங்கிரஸ் பக்கம் தள்ளியிருக்கிறது. 

சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 10 தொகுதிகள் அவர்களுக்கான தனித் தொகுதிகளென்றாலும், அவர்கள் சுமார் 50 தொகுதிகளின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களது வாக்குகளை காங்கிரஸிடமிருந்து பகுஜன் சமாஜ் கட்சி பிரித்தது பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் சத்தீஸ்கரின் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் எண்ணிக்கை பலம்வாய்ந்ததாக இருக்கும் சாகு சாதியினரின் ஆதரவைக் குறிவைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தனர். 

ஆட்டம் கண்ட ஆதரவு தளம்
சாகு மற்றும் ஆதிவாசிகளின் ஆதரவுதான் கடந்த இரண்டுமுறையும் பா.ஜ.க-வை ஆட்சியில் அமர்த்தியது. ஆனால், அந்த ஆதரவுத் தளம் இப்போது ஆட்டம்காண ஆரம்பித்திருக்கிறது. அதன் வெளிப்பாடே பா.ஜ.க-வின் வாக்கு சதவீதமும் இடங்களும் குறைவதற்குக் காரணம். இதுவரை மற்ற சாதியினரால் தலைமைதாங்கப்பட்டு வழிநடத்தப்பட்டுவந்த ஆதிவாசிகள் ஒரு ஆதிவாசி மாநிலம் என சொல்லத் தக்க அளவுக்குப் பழங்குடி மக்கள்தொகையைக் கொண்ட சத்தீஸ்கரில் ஒரு பழங்குடி இனத்தவர் ஏன் முதல்வராக வரக் கூடாது என்ற கேள்வியை இப்போது கேட்கத் தொடங்கிவிட்டனர். பா.ஜ.க-வுக்கு உள்ளேயே அதற்கான குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன. 

சத்தீஸ்கரில் ஆட்சி அமைப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும் அது இனிமேலும் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரின் குரலை அலட்சியப்படுத்த முடியாது. சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, குறைக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அளவை முன்புபோல உயர்த்தித் தர வேண்டும், தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் அரசியலில் உரிய முக்கியத்துவம் தர வேண்டும். இவை இரண்டையும்விட முக்கியமாக, சுரங்க உரிமைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்காமல் ஆதிவாசிகளிடமே வழங்க வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. 

ரவிக்குமார், எழுத்தாளர்; தொடர்புக்கு: manarkeni@gmail.com