Tuesday, December 31, 2013

பிரதமருக்கு ஒரு திறந்த மடல் .....இந்தியப் பிரதமர் திரு மன்மோகன்சிங் அவர்களே வணக்கம்! 


ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நீங்கள் பிரதமர் பொறுப்பேற்ற கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நல்லதும் கெட்டதுமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்திய மக்களின் கல்வி, தனிநபர் வருமானம், சுகாதாரம்- உள்ளிட்ட பல தளங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்துக்காக உங்களைப் பாராட்டுகிறேன். கிராமப்புற வேலை உறுதித் திட்டம், உணவுப்பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் முதலான பல நல்ல காரியங்களை உங்கள் தலைமையிலான அரசு செய்திருக்கிறது. வாழ்த்துகள்! 

நீங்கள் செய்தவற்றுக்காக உங்களைப் பாராட்டும் அதே நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய சில பணிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: 


இந்த நாட்டின் மக்கள் தொகையில் கால் பங்கினராக இருக்கும் தலித் மக்கள் இன்னும் மோசமான வாழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அவர்களது முன்னேற்றம் பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் முதன்முறை பதவியேற்றபோது அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுவாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளும் பாதியில் நிற்கின்றன. அவற்றை நிறைவேற்றுங்கள். 


இரண்டுமுறை நீங்கள் பிரதமர் ஆனதில் தமிழகத்தின் ஆதரவு முக்கியமானது. ஆனால் தமிழர்கள் என ஒரு இனம் இருப்பதே உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகமும் குரல் கொடுத்தும்கூட நீங்கள் காவிரிப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு சிக்கலிலும் தமிழகத்தை வஞ்சித்தீர்கள். தொடர்ந்து எமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் மௌனம் காக்கிறீர்கள். நாங்கள் வேண்டவே வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தும் அணு உலைகளை திணிக்கிறீர்கள். ஈழத் தமிழரின் இனப்படுகொலைக்குப் பங்காளியாக இருந்தது மட்டுமின்றி இப்போதும் சர்வதேச அரங்குகளில் இலங்கையைக் காப்பாற்ற முய்ல்கிறீர்கள். 


திரு மன்மோகன் சிங் அவர்களே! நீங்கள் பிரதமராகப் பதவியேற்றபோது எனது மகன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உங்கள் கல்வித்தகுதிகளையும் பணி அனுபவங்களையும் பட்டியலிட்டு இவர் பிரதமராவதில் பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரைப்போன்ற லட்சக் கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த நீங்கள் உங்களுக்கு வரலாறு வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


 உங்களுக்கிருந்த நெருக்கடிகளை நான் அறியேன். அந்த நெருக்கடிகளை மீறி நீங்கள் கற்ற கல்வி உங்களை மனிதராக வைத்திருக்கும் என நம்பினேன். நீங்கள் சுயநலம் இல்லாதவர் எனவே அறிவு உங்களிடம் வெற்றிபெறும் என நினைத்தேன். 


இன்னும்கூட சில நாட்கள் மிச்சமிருக்கின்றன. நீங்கள் பேச விரும்பியதைப் பேசுவதற்கும் செய்ய விரும்பியதைச் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இனப் பகைவர் என்ற கறையோடும் தலித் மக்களின் துரோகி  என்ற அவப்பெயரோடும் நீங்கள் விடைபெறவேண்டுமா? சிந்தியுங்கள். 

No comments:

Post a Comment