Sunday, December 1, 2013

தி.மு.க பொதுக்குழு : எதிர்பார்ப்புகளும் வாய்ப்புகளும் - ரவிக்குமார்
காங்கிரஸுடன் தொடர்வது அரசியல் தற்கொலை

பா.ஜ.கவுடன் சேர்வது கருத்தியல் தற்கொலை

டிசம்பர் 15 ஆம் தேதி தி.மு.க பொதுக்குழு கூடவிருப்பதாக வெளியான அறிவிப்பையொட்டி தமிழக அரசியல் களத்தில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி அதில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதால் அந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை இயக்கும் சக்தியாக எப்போதும் தி.மு.க தான் இருந்துவருகிறது. அதற்கு முதன்மையான காரணம் தி.மு.க தலைவர் கலைஞரின் அரசியல் சாதுர்யம்தான்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாத அளவுக்கு தி.மு.க சந்தித்த தோல்விக்குப் பிறகு, ஆளும் கட்சியால் அடுக்கடுக்காய் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்குப் பிறகு, மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி கூட்டணியில் வைத்துக்கொண்டே குழி பறித்ததைப் பார்த்த பிறகு ‘ தி.மு.க இனி அவ்வளவுதான்’ என்று பேசி மகிழ்ந்தவர்களின் வாயை அடைக்கும்விதமாக தமிழக அரசியலின் மைய சக்தியாக தி.மு.கவை மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மாற்றிக்காட்டினார். அதற்கு திரு.மு.க .ஸ்டாலின் அவர்களின் ஓய்வு ஒழிவற்ற உழைப்பு உறுதுணையாக இருந்தது.

தி.மு.க பொதுக்குழு கூடுகிற நேரத்தில் ஏற்காடு இடைத் தேர்தலின் முடிவு தெரிந்திருக்கும், ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களின் முடிவுகளும் வெளியாகியிருக்கும். ஏற்காடு இடைத் தேர்தலைப் பொருத்தவரை அங்கு ஆளும் கட்சி வெற்றி பெற்றால்கூட அது அவர்கள் போராடிப் பெற்ற வெற்றியாகத்தான் இருக்கும். முடிவு எப்படியிருந்தாலும் ஏற்காடு இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு சில விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்ப்பதில் தமிழகத்திலிருக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்பதை அது எடுத்துக்காட்டியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதன்மூலம் தமது வாக்குகள் தி.மு.கவுக்குப் போகவேண்டும் என அவை முடிவுசெய்திருப்பதையும், அதிமுக வெற்றி பெறுவதை தமிழக எதிர்க் கட்சிகள் யாவும் விரும்பவில்லை என்பதையும் அவை வெளிப்படுத்திவிட்டன.

காங்கிரஸ் கூட்டணி தி.மு.கவுக்கு உதவுமா?

ஏற்காடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக தி.மு.கவுக்கு ஆதரவு தராதது தி.மு.கவுக்கு நன்மையே. ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் ஓரளவு தனது பலத்தைத் தக்கவைக்கக்கூடும்; 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் காங்கிரஸின் தயவைப் புறக்கணித்துவிட முடியாது என்றாலும் இன்றைய தமிழக அரசியல் சூழலில் காங்கிரஸோடு கூட்டுசேர்வதென்பது அரசியல் தற்கொலை தவிர வேறல்ல. தி.மு.க இல்லையென்றால் அ.தி.மு.க என்று மாறி மாறி சவாரிசெய்த காலம் மலையேறிவிட்டது. இப்போது காங்கிரஸுடன் கூட்டணி சேரலாம் என்ற யூகம்கூட அ.தி.மு.க வுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அவர்கள் காசுகொடுத்து சூனியம் வைத்துக்கொள்ளும் அசட்டுத்தனத்தை செய்யமாட்டார்கள் என நம்பலாம்.
பாராளுமன்றத் தேர்தல் என்றாலே தேசியக் கட்சி ஒன்றுடன் கூட்டணி சேர்ந்துதான் சந்திக்கவேண்டும் அப்போதுதான் பிரதமர் யாரென்று சொல்ல முடியும். தமிழக மக்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு விதமாகவும், பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு விதமாகவும் வாக்களிக்கிறார்கள். எனவே வேறு வழியில்லாமல் காங்கிரஸோடு தொடரத்தான் வேண்டும் என்ற முடிவை தி.மு.க எடுக்கக்கூடும் என்ற யூகங்கள் ஒருபுறம் பரப்பப் படுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சியிலிருந்து அரசியல் கட்சிகள் எதைக் கற்றுக்கொண்டனவோ இல்லையோ மக்கள் ஒரு உண்மையைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தாம் இங்கிருக்கும் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறோம் என்பதை அவர்கள் இப்போது தெளிவாகத் தெரிந்தே இருக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டிருப்பதால்தான் அ.தி.மு.க இப்போது தனது தலைமையை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. எனவே பாராளுமன்றத் தேர்தல் என்பதால் ஒரு தேசியக் கட்சியை சுமந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் தி.மு.கவுக்கு இல்லை.

காங்கிரஸோடு தி.மு.க கூட்டணி வைத்தால் அதற்கு மிகக் குறைந்தது ஏழெட்டு இடங்களையாவது ஒதுக்கவேண்டும்.அந்த இடங்கள் அனைத்தும் அ.தி.மு.கவுக்கு தெரிந்தே தாரை வார்க்கப்படும் இடங்கள் என்றுதான் பொருள்படும்.அப்படி இடங்களைத் தாரைவார்த்து காங்கிரஸுடன் போவதால் தி.மு.கவுக்கு கிடைக்கும் லாபத்தைவிட நட்டமே அதிகம். இரண்டுமுறை ஆட்சியிலிருந்து மிக அதிக அளவில் மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் காங்கிரஸுடன் சேர்வதால் கிடைக்கும் வாக்குகளின் சதவீதத்தைவிட அத்துடன் சேர்வதால் தி.மு.கவுக்கு எதிராக விழும் வாக்குகளின் சதவீதம் அதிகமாக இருக்கும்.இந்தக் கணக்கு தி.மு.க தலைமைக்குத் தெரியாத ஒன்றல்ல.

2014 தேர்தலில் தனித்துவிடப்படலாம் என்பதை காங்கிரஸ் தலைமையும் உணர்ந்தே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் திரு. ப.சிதம்பரம் அவர்கள் நடத்திய சென்னைக் கருத்தரங்கம்.

ஜம்போ கூட்டணி சாத்தியமாகுமா ?

அண்மைக்காலமாக தினமலர், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட சில பத்திரிகைகளில் தி.மு.க தலைமையில் தே.மு.தி.க, பா.ம.க, வி.சி.க,புதிய தமிழகம், ம.ம.க, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முதலான கட்சிகள் சேர்ந்து மிகப்பெரிய ஜம்போ கூட்டணி உருவாகப்போவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. அது சாத்தியமா என்பதைவிடவும் தி.மு.கவுக்கு சாதகமாக அந்த ஏடுகள் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை, மாறாக அப்படியொரு கூட்டணி உருவாகிவிடக்கூடாது என்பதே அவர்களின் விருப்பம் என்று உறுதியாகச் சொல்லலாம்.பிறகு ஏன் அப்படி செய்தி வெளியிடுகின்றன என்ற கேள்வி எழும். தே.மு.தி.கவை குழப்புவதற்கும், ஆளும் கட்சியை உஷார்படுத்துவதற்கும்தான் அப்படியான செய்திகளை அவை வெளியிடுகின்றன. அதுமட்டுமின்றி அப்படியொரு மெகா கூட்டணி அமைந்தால்தான் தங்களால் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை தி.மு.க தொண்டர்களிடம் உருவாக்கி அவர்களின் தன்னம்பிக்கையை, தற்சார்பை சீர்குலைக்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.ஒருபேச்சுக்கு அப்படியொரு கூட்டணி அமைவதாக வைத்துக்கொண்டால் அதில் தி.மு.க 20 இடங்கள்கூட நிற்கமுடியாது. அக்கூட்டணி 25 - 30 இடங்களைப் பிடிப்பதாக வைத்துக்கொண்டால்கூட தி.மு.கவுக்கு அதிகபட்சமாக 10 - 12 இடங்கள்தான் கிடைக்கும்.  அது தேர்தலுக்குப் பிறகான அதன் பேர சக்தியை முற்றிலுமாக மட்டுப்படுத்திவிடும். எனவே இந்த ஜம்போ கூட்டணி சாத்தியமா என்பதைவிட தேவையா என்ற கேள்வியே முக்கியம்.

பாரதிய ஜனதா கட்சியுடன் தி.மு.க சேரலாமா?

காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்பதை ஒப்புக்கொள்ளும் தி.மு.கவினர் பலர் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது என்று கருதுகின்றனர். அவர்களைவிடவும் பா.ஜ.க தரப்பில் அந்த ஆசை அதிகமாகவே இருக்கிறது.பா.ஜ.கவுக்கென்று தமிழ்நாட்டில் பெரிய வாக்குவங்கி ஏதுமில்லை. அக்கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது அத்துடன் கூட்டணி வைத்திருந்த அதி.மு.கவும், தி.மு.கவும் உருவாக்கித் தந்த செல்வாக்கையும்கூட அக்கட்சியால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. நரேந்திர மோடிக்கு ஆதரவாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் ஊடகமாயையின் விளைவால் ஒருவேளை தி.மு.கவினர் இப்படி நினைக்கலாம்.

ஊடகங்களில் மோடி அலை எப்படி போலியாக உருவாக்கப்படுகிறது என்பதை அண்மையில்  ’கோப்ராபோஸ்ட்’ என்ற இணையதளம் அம்பலப்படுத்தியது. தமிழ்நாட்டில் மோடிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாக வாரம் இருமுறை இதழ் ஒன்றில் வெளியான செய்திகள்கூட இந்தவகைப்பட்ட மோசடிதான் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.  ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் மோடி அலையின் வரையறையை உலகுக்குத் தெரியப்படுத்திவிடும். எனவே பா.ஜ.கவுடன் சேர்ந்தால் வெற்றி பெறலாம் என நினைப்பது எவ்விதத்திலும் தர்க்கபூர்வமானதல்ல.

தற்போது தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினரின் நம்பிக்கையையும், தலித்துகளின் ஆதரவையும் பா.ஜ.க வுக்காக இழப்பது தேவைதானா என்பதையும் தி.மு.க சிந்தித்துப் பார்க்கவேண்டும்.1999 இல் தி.மு.க செய்த தவறை மீண்டும் அது செய்துவிடக்கூடாது. அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் தி.மு.க தனக்கென்று சொல்லிக்கொள்ள எந்தவொரு தனித்தன்மையும் இல்லாமல் போய்விடும்.பா.ஜ.கவுடன் சேராவிட்டால் சிறுபான்மையினர் அனைவரும் தி.மு.கவுக்கு வாக்களித்துவிடுவார்கள் எனக் கூற முடியாது. ஆனால் பா.ஜ.கவுடன் சேர்ந்தால் சிறுபான்மையினரின் ஒரு சதவீத ஓட்டுகூட தி.மு.கவுக்குக் கிடைக்காது. அது சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சேதத்தை தி.மு.கவுக்கு ஏற்படுத்திவிடும்.

அ.தி.மு.க கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

இப்போதைய சூழலில் அதிமுகவுக்குப் புதிதாகக் கூட்டணிக்கட்சிகள் கிடைப்பதற்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. அதற்குக் காரணம் அவர்கள்தான். பிரதமர் கனவோடு இருக்கும் அதிமுக தலைமை அதற்காகக் குறைந்தது 25 இடங்களிலாவது வெற்றிபெற்றாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ளது. எனவே அக்கட்சி முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டாகவேண்டும். அகில இந்திய அளவில் தனக்கு லாபி செய்வதற்காகத்தான் அது இடதுசாரிகளைத் தனது அணியில் வைத்திருக்கிறது. அது இடதுசாரிகளுக்கும் தெரியும். அவர்களுக்கு ஒன்றிரண்டு இடங்களிலாவது வெற்றி பெற்றாகவேண்டும், தங்களது பலத்தை 40 க்கும் மேல் உயர்த்த தமிழ்நாட்டில் சில இடங்களில் வெற்றிபெறவேண்டியது அவர்களுக்கும் தேவையாக இருக்கிறது. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணி என்று அவர்கள் நம்புவதால்தான் அவர்கள் அக்கூட்டணியில் வலியப் போய் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க அல்லது காங்கிரஸோடு அதிமுக கூட்டணி அமைக்க விரும்பினால் அது சாத்தியம்தான். ஆனால் புறச்சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. பா.ம.கவோ, ம.தி.மு.கவோ, தே.மு.தி.கவோ அக்கட்சியுடன் சேர்வதற்கு வாய்ப்பில்லை. காங்கிரஸோடு சேர்வதால் அ.தி.மு.கவுக்கு  லாபமில்லை, பா.ஜ.கவுடன் சேர்ந்தால் பிரதமர் கனவைக் கலைத்துக்கொள்ளவேண்டியிருக்கும். எனவே பெரும்பாலும் இடதுசாரிக் கட்சிகளோடு மட்டும் கூட்டணி என்ற நிலையைத்தான்  அதி.மு.க  எடுக்கும். இடதுசாரிகளையும் கழற்றிவிட்டுவிட்டுத் தனியே நிற்கலாம் என்பதுதவிர அதற்கு வேறு வழியில்லை.

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சேருமா?

இப்போதைக்குத் தனது முடிவைப்பற்றி எந்தவித சமிக்ஞையும் கொடுக்கவில்லையென்றாலும்கூட தேமுதிகவுக்கு கூட்டணி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.  அதி.மு.கவுடன் போவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், காங்கிரஸ் குறித்து சிந்திக்கவே முடியாது என்று ஆகிவிட்ட சூழலில் ஒன்று அது பாஜகவுடன் போகலாம், அல்லது திமுகவுடன் சேரலாம் என்பதே தற்போது தே.மு.தி.கவின் முன்னுள்ள வாய்ப்புகள். ’பாராளுமன்றத் தேர்தல் நமக்கு முக்கியமல்ல அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்பதுதான் முக்கியம், தி.மு.கவுடன் சேர்ந்தால் அது பாதிக்கும்’ என்று யாரோ கட்டிவிட்ட கதையை நம்பினால் அது பா.ஜ.கவுடன் போகும்( அப்படிப் போனால் அது பா.ஜ.கவுக்கு லாபமே தவிர தேமுதிகவுக்கு அதனால் பிரயோஜனமில்லை) பாராளுமன்றத் தேர்தலில் சில இடங்களிலாவது வெற்றி பெறாவிட்டால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி யாவும் அ.தி.மு.கவால் வந்தது என்ற அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதை அக்கட்சி உணர்ந்தால் அது தி.மு.கவுடன்தான் சேரும்.

ஐந்து முனைப் போட்டி தி.மு.கவுக்கு அனுகூலம்:

தற்போதிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் ஐந்துமுனைப் போட்டி உருவாவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
1. தி.மு.க +வி.சி.க+ம.ம.க+புதியதமிழகம்+முஸ்லிம் லீக் கூட்டணி;
2. அ.தி.மு.க+ச.ம.க+இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி
3. காங்கிரஸ் + சிறிய அமைப்புகள் கூட்டணி ( இதில் புதிய தமிழகமும் சில முஸ்லிம் அமைப்புகளும் சேரக்கூடும்)
4. பா.ஜ.க+ம.தி.மு.க+ஐ.ஜே.கே+கூட்டணி ( இதில் தே.மு.தி.க சேரக்கூடும்)
5. பா.ம.கவின் சாதிக் கூட்டணி ( இது பா.ஜ.கவுடன் சேரக்கூடும்)
என ஐந்து அணிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறினால் அது ஆளும் கட்சிக்கு அனுகூலம் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் மேலே கண்டவாறு ஐந்து முனைப் போட்டி உருவானால் அது தி.மு.க அணிக்கே சாதகமாக அமையும். பா.ஜ.க தலைமையில் ஒரு அணி உருவாகும் பட்சத்தில் அது அ.தி.மு.கவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க,பா.ம.க, ம.தி.மு.க  எல்லாம் சேர்ந்து ஒரு மெகா கூட்டணி உருவாகி நான்குமுனைப் போட்டி ஏற்பட்டால்கூட பா.ஜ.க அணி அதிகபட்சம் ஐந்து இடங்களுக்குமேல் வெல்ல முடியாது. அப்போதும் அது தி.மு.க அணிக்கே சாதகமாக அமையும்.

தி.மு.க அணியில் தே.மு.தி.க இணைந்தால் அக்கூட்டணியின் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என்பது உண்மைதான். அப்படி சேராவிட்டாலும்கூட அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தேர்தல் களம் தி.மு.க அணிக்கே சாதகமாக இருக்கும்.

காங்கிரஸுடன் தொடர்வது அரசியல் தற்கொலை, பா.ஜ.கவுடன் சேர்வது கருத்தியல் தற்கொலை. இதைப் புரிந்துகொண்டு தனது தொண்டர்களை வழிநடத்தும் ஆற்றல் தி.மு.க தலைவர் கலைஞருக்கு உண்டு என்பதே நமது நம்பிக்கை.    


   
     

  

No comments:

Post a Comment