Friday, April 25, 2014

கருணையின் அரசியல்

ரவிக்குமார்
( 21.2.2014 ல் எழுதப்பட்டது) 

எல்லாமே அரசியல் ஆகிவிட்ட நமது நாட்டில் இப்போது கருணையும் அரசியலாகிவிட்டது. குடியரசுத் தலைவரின் கருணை நிராகரிக்கப்பட்ட சாந்தன் , முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தணடனைக் குறைப்புச் செய்து உச்சநீதிமன்றம் உயிர்க்கொடை அளித்தது. இழந்த வாழ்நாள் போக எஞ்சிய காலத்தை அவர்களுக்கு வழங்கும்விதமாகத் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யப்போவதாக அறிவித்தது.ஆனால் அந்த அறிவிப்பு இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

ராஜிவ் காந்தியின் பெயரை முன்வைத்து அரசியல் செய்ய அனைத்து உரிமையும் கொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது தமிழக அரசுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக்கூடாது என்ற மத்திய அரசின் மனுவை ஏற்று உச்சநீதிமன்றமும் தமிழக அரசைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. 

மன்னித்தலும் கருணையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை.கருணை என்பது குற்றத்தை அழித்துவிடுவதில்லை, குற்றத்தால் எழும் வருத்தத்தைத்தான் அது அழிக்கிறது. குற்றம் குறித்த நினைவையல்ல அதனால் எழும் ஆத்திரத்தைத்தான் கருணை மறக்கச்செய்கிறது.குற்றத்துக்கு எதிரானப் போராட்டத்தை அது தடுக்கவில்லை, மாறாக வெறுப்பை மட்டும்தான் போக்குகிறது.அன்பின் இடத்தில் நிற்கிறது கருணை. அன்புகாட்ட முடியாதபோது வெறுப்பைக்காட்டாமல் இருப்பதே பெரிய விஷயம்தான். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறப்படுவதுண்டு.மறக்காமலே மன்னிப்பதற்குப் பெயர்தான் கருணை. இதை காங்கிரஸ்காரர்களும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் புரிந்துகொள்ளவேண்டும். 

பேரறிவாளன் உள்ளிட்ட மூன்றுபேரின் தண்டனையைக் குறைக்கும்போது உச்சநீதிமன்றம் இறுதியாக ஒன்றைக் குறிப்பிட்டது: “ ஆயுள் தண்டனை என்றால் ஒருவரின் ஆயுட்காலம் முழுவதும் என்றுதான் பொருள். ஆனால் அது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432ன் கீழ் பொருத்தமான அரசாங்கம் வழங்கும் தண்டனைக் குறைப்புக்கும், பிரிவு 433 ஏ இல் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.” என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இங்கே பொருத்தமான அரசாங்கம் என்றால் அது மாநில அரசையே குறிக்கும். தண்டனைக் குறைப்பு செய்ய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் கீழ் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தணடனைக் குறைப்பு செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கும் குடியரசுத்தலைவருக்கும் என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம் மாநில ஆரசுக்கும் ஆளுநருக்கும் இருக்கிறது. இந்த அதிகாரம் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதுதான் என்றாலும் மாநில அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிடமுடியாது. உள்நோக்கத்தோடு தண்டனைக் குறைப்பு செய்யப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்தாலோ, தணடனைக் குறைப்பில் ஒருசிலருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தாலோதான் நீதிமன்றம் தலையிடும். 

விடுதலை குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பேசியபோது “மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார். மாநில அரசே தன்னிச்சையாக முடிவெடுக்காமல் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கவேண்டியதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருந்தார்: “ இ ந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஒரு வழக்கை சி.பி.ஐ விசாரித்தது என்பதாலேயே மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கவேண்டுமென அவசியமில்லை. சி.ஆர்.பி.சி பிரிவு 435 இதைத் தெளிவாகச் சொல்கிறது. ” குறைக்கப்படும் அந்தத் தண்டனையானது சி.பி.ஐ ஆல் புலனாய்வு செய்யப்படும் மத்திய அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையிலான குற்றத்துக்காக இருந்தாலோ; மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்து ஒன்றுக்கு சேதம் விளவிப்பதாகவோ, அதைக் கைப்பற்றிக்கொள்வது தொடர்பானதாகவோ இருந்தாலோ; மத்திய அரசின் ஊழியர் குற்றம் செய்திருந்தாலோ அதுகுறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்” என அந்தப் பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. இங்கு புலனாய்வு குறித்து பேசப்படவில்லை, தண்டனை குறித்துதான் பேசப்படுகிறது. 

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இ.த.ச பிரிவு 120 பி மற்றும் 302 இன் கீழ்தான் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது. அதை நீதிபதி காத்ரி தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் தெளிவாகக் காணலாம். நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ததையும், நளினி உள்ளிட்ட ஏழுபேருக்கு இதச பிரிவு 302 மற்றும் 120 பி ஆகியவற்றின்கீழ் தண்டனையை உறுதிசெய்ததையும் வழிமொழிந்த நீதிபதி காத்ரி அவர்கள், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததையும் ஏற்றுக்கொண்டு ஆமோதித்தார். ஆக இந்த வழக்கு சிபிஐ ஆல் புலனாய்வு செய்யப்பட்டிருந்தாலும், முதலில் தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டிருந்தாலும் இதச பிரிவுகளின்கீழ்தான் தண்டனை வழங்கப்பட்டது என்பதால் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்ய மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க அவசியமே இல்லை. அதைத்தான் பிரிவு 435 உட்பிரிவு 1 சொல்கிறது.

மத்திய அரசிடம் கலந்து ஆலோசிப்பது அவசியம்தான் என மாநில அரசு உண்மையாகவே நம்புமேயானால் சிஆர்பிசி பிரிவு 435 உட்பிரிவு 2 இன் படி மத்திய அரசும் தண்டனைக் குறைப்புச் செய்யும்வரை அது காத்திருக்கத்தான்வேண்டும். அப்புறம்தான் விடுதலை செய்யமுடியும்.அப்படி மத்திய அரசு தண்டனைக் குறைப்புசெய்து உத்தரவிடாமல் மாநில அரசு செய்யும் தண்டனைக் குறைப்பு செல்லாது என அந்தப் பிரிவில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்கப் போய்விட்டால் மூன்றுநாள் கெடு விதிப்பதோ நாங்களே தன்னிச்சையாக விடுவிப்போம் எனச் சொல்வதோ முடியாது என்பதுதான் உண்மை.

தற்போது தமிழக அரசின் முடிவை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம் என்னவிதமான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன என்பதைத் தெரிவிக்குமாறு மாநில அரசிடம் கேட்டிருக்கிறது. ”தண்டனைக் குறைப்பு என்பது கைதி ஒருவரின் உரிமை அல்ல, அது மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரம். தண்டனைக் குறைப்பின்போது அரசாங்கம் குறிப்பிட்ட சிலரை விலக்கிவைக்கலாம். ஆனால் அப்படி விலக்கிவைப்பதற்கான காரணம் நியாயமானதாகவும், சமூகத்துக்குப் பயன்தரும் விதத்திலும் இருக்கவேண்டும். சமூகத்துக்குக் கேடுவிளைவிப்பவர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையால் பயனடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என சனபோய்னா சத்யநாராயணா எதிர் ஆந்திர மாநில அரசு என்ற வழக்கில் (2003) தீர்ப்பளித்தபோது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் கீழ் மாநில அரசுக்குள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரம், சி.ஆர்.பி.சி யின் பிரிவு 435 இன் விளக்கம் ஆகியவற்றையெல்லாம் தென்தமிழன் எதிர் தமிழக அரசு என்ற வழக்கில் தீர்ப்பளிக்கும்போது (2009) விரிவாகவே நீதிபதி சந்துரு அவர்கள் ஆராய்ந்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் ஒரேவிதமானவைதான் என்று கூறியிருக்கும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரம் சிஆர்பிசி யின் பிரிவு 435 ஐ சார்ந்தது அல்ல, அது தனிப்பட்ட அதிகாரம் ( Plenary Power ) என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்தத் தீர்ப்பை வைத்துப் பார்த்தால் தமிழக அரசு இந்த வழக்கில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்க முடிவு செய்தது தேவையற்றது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. 

மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது எனத் தமிழக முதல்வர் சவால்விட்டுப் பேசினாலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அவருக்குத் தயக்கம் இருக்கிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது. இதே குற்றவாளிகளுக்கு மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும்  என 2011 ஆம் ஆண்டில் கோரிக்கை விடுக்கப்பட்டபோது அவர் மத்திய அரசின் உள்துறை அனுப்பிய ஒரு கடிதத்தை சுட்டிக்காட்டி அப்படியொரு அதிகாரம் தனது அரசுக்கு இல்லை என்றார். “  குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளதையும் எடுத்துக் கூறினேன்.” எனத் தற்போது சட்டப்பேரவையில் பேசும்போதும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் மூலம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள்கூட கட்டுப்படுத்த முடியாது என்கிறபோது உள்துறை அமைச்சகத்தின் விளக்கக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி தனது அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் அப்போது சொன்னதை நாம் ஏற்கமுடியவில்லை. இப்போதும்கூட தனது அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மத்திய அரசிடம் ஆலோசனை கலந்திருப்பதும் நமக்கு வியப்பளிக்கிறது. 

அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும். அதற்குத் தேவையான நெறிமுறைகளை வகுக்கவேண்டும். இந்த ஏழுபேரை மட்டுமல்ல, அந்த நெறிமுறைகளின்படி எத்தனைபேருக்கு விடுதலை பெறத் தகுதியிருக்கிறதோ அத்தனைபேரையும் விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசுக்கு கெடு விதிப்பதும், சவால் விடுவதும் அரசியல். மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறையில் வாடும் கைதிகளை விடுவிப்பதே கருணை. தமிழக முதல்வரிடம் நாடு எதிர்பார்ப்பது கருணையைத்தானே தவிர கருணையின்பேரிலான அரசியலை அல்ல. 

( கட்டுரையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் )

 

மேலவளவிலிருந்தும் ஒரு தலித் அல்லாத மனிதன்

மேற்கு டெக்சஸ்

பேயைப்போல காய்ச்சும் சூரியன்

எனது மனைவி

அவள் பெயர் ஜோ


வயலில் பருத்தி எடுத்தபடி 

அவள் கேட்டாள்: 

" நம் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு

போகச்சொல்கிறார்களே என்ன ஆவோம்?"


பழையகாரில் மூட்டைமுடிச்சுகளோடு

கிளம்பிவிட்டோம்

எந்த திசை

எங்கே போவது 

எதுவும் தெரியாது


ஒன்று மட்டும் தெரியும்

சூரியன் பேயைப்போல காய்ச்சும்

மேற்கு டெக்சஸில்

என்னைப்போல ஒரு 

கறுப்பன் இருக்க முடியாது


- இது லாங்க்ஸ்டன் ஹியூஸின் கவிதை. அந்த டெக்சஸிலிருந்து ஒரு வெள்ளையர் - அவர் பெயர் மைக்கேல் காலின்ஸ். இப்போது என்னோடு தங்கி என் தேர்தல் பணிகளை ஆராய்ச்சி செய்துவருகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவர். ' விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு' குறித்து ஆய்வு செய்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இப்போது என்னுடன் தங்கி தேர்தல் நடைமுறைகளைக் கவனிக்கிறார். 


இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் முடிந்து தங்கியிருக்கும் இடத்துக்குவரும்போது நள்ளிரவு கடந்துவிட்டது. சாப்பிட எதுவுமில்லை. இருந்த ஒன்றிரண்டு பழங்களைப்பகிர்ந்துகொண்டோம். 


திருவள்ளூரில் அடிக்கும் வெயில் லாங்க்ஸ்டன் ஹியூஸ் வர்ணிக்கும் டெக்சஸின் பேய் வெயிலைவிடப் பயங்கரமானது. அந்த வெயிலில்காய்ந்து, பட்டினி கிடந்து, கிடைத்த இடத்தில் உறங்கி - என் உற்ற நண்பர்களில் ஒருவராகிவிட்டார் மைக்கேல். அவர் ஒவ்வொரு நாளும் தரும் feedback எனக்கு மிகப்பெரும் தெம்பைத் தருகிறது. ஒவ்வொருநாளும் தனது blog இல் அதைப்பற்றி எழுதியும் வருகிறார். கறுப்பர்களை விரட்டியடித்த அவரது முன்னோரின் கொடுங்குணத்தை எண்ணிப் பார்க்கிறேன். அண்மையில் ஆஸ்கர் விருதைப் பெற்ற 12 years a slave திரைப்படத்தில் கதையின் நாயகன் எப்படி அடிமையாக ஆக்கப்படுகிறான் என்பதை சித்திரிக்கும் காட்சி மனதில் ஓடுகிறது.


 மனிதர்கள் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். டெக்சஸிலிருந்து ஒரு மைக்கேல் காலின்ஸ் வந்திருப்பதைப்போல வெண்மணியிலிருந்தும் மேலவளவிலிருந்தும் யாரேனும் ஒரு தலித் அல்லாத மனிதன் வரக்கூடும். அவனுக்காக நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன். 


அன்றிரவு மைக்கேல் எனக்கு ஒரு பேனாவைப் பரிசளித்தார். gift pack செய்து அழகாக வைக்கப்பட்டிருந்த பேனா. தேர்தல் பணிகள் முடிந்தவுடன் அந்தப் பேனாவால் அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதவேண்டும். லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதை எழுப்பிய கேள்விக்கு அது பதிலாக இருக்கும். 

Tuesday, April 22, 2014

அரிய கட்டுரை இது

மணற்கேணி இதழில் வெளியாகியிருக்கும் தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் கட்டுரை குறித்த பதிவு 

==========================


முனைவர் இராசம் அம்மையாரின், நான்கு பகுதிகள் கொண்ட

அருமையான கட்டுரையை மணற்கேணியின் அண்மைய 

இதழில் படிக்க முடிந்தது.


சாதி ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் ஆயுநருக்கு

அரிய கட்டுரையை வழங்கியிருக்கிறார் முனைவர் இராசம் அவர்கள்.


சங்க இலக்கியங்களை, நுனிப்புல் மேய்வது போலப் படித்துவிட்டு

சாதி, தீண்டாமை பற்றியெல்லாம் பொருந்தாதக் கருத்துரைப்போரை

வெட்கிப்போகச்செய்யும், அரிய கட்டுரை இது என்றால் 

மிகையல்ல. 


சாதி, தீண்டாமை பற்றி, வெறும் சொல்லடைவுகளை வைத்துக்

கட்டுரைகளை மேலோட்டமாக எழுதி, அதையே சாதிக்க முயல்வர்களிடம்

இருந்து முழுக்க மாறுபட்டு, ஆழ்ந்த, செறிவான கருத்தியலை அடித்தளமாகக்

கொண்ட இக்கட்டுரை மிகச்சிறந்தது.


"அகராதிகளெல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்கு என்று இருந்த காலம் அது" - 

என்ற, கட்டுரையின் ஒரு வரி சொல்லும் செய்திகள் மிக விரிவானவை;

தற்காலத் தமிழ்க்கல்வியை எண்ணுகையில் வலிக்கவும் வைக்கிறது.


புலை என்ற சொல்லை வின்சுலோவின் அகராதி உள்ளிட்ட பல அகராதிகளில்

இருந்து மட்டும் பொருள் கண்டு ஆய்வு செய்தால் புலையின் கதியும், கட்டுரைகளின் கதியும் எப்படி ஆகும் என்று எண்ணிப்பார்க்கவே அச்சம் வருகிறது. 


புலையன் என்ற சொல்லுக்கு எத்தனைத் தவறான பொருள்கள் சொல்லப்படுகின்றன என்று மிக அழுத்தமாக, பசுமரத்தாணியாகக் கருத்துகளையும் ஆதாரங்களையும் எடுத்துவைக்கிறார் கட்டுரை ஆசிரியர்.


"ஆவுரித்துத் தின்றுழலும் புலையனேனும்" எனும் அப்பரடிகளின் வரியை

மட்டும் மேற்கோள் காட்டி, புலையன் என்பவனுக்குப் பொருத்தப்படும்

பொருள்கள்/பண்புகளின் பொருந்தாமையை மிகத் தெளிவாக எடுத்துவைக்கிறார்.


இக்கட்டுரை பலவாறாக சிந்திக்க வைக்கிறது. 


இதைப்படித்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி,


ஆ உரிக்கிறான் - சரி

தின்கிறான் - சரி

உழல்கிறான் - அது ஏன் என்பதுதான்.


ஊன் உண்பவர், அல்லது ஆ உண்பவர் எல்லாம் உழல்பவர்

என்று பொருள் கொள்ள முடியுமா? அவர்கள் எல்லாம் புலையர்கள்

என்றால், மேனாட்டினர் தொடங்கி சீனர்கள் வரை எல்லாருமே புலையர்கள்தான்.


அப்பரடிகளின் வரியை மேற்கோள் காட்டுபவர்கள், 

ஆவுரித்துத் தின்பவன் புலையனா? ஆவுரித்துத் தின்று உழல்பவன் புலையனா?

என்றும் சிந்தித்துப் பார்த்து எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.


அப்பரடிகளின் இவ்வரியை மேற்கோள் காட்டுநர்,


"வஞ்சகப்  புலைய  னேனை  வழியறத்  தொண்டிற்  பூட்டி    

அஞ்சலென்  றாண்டு  கொண்டாய்  அதுவுநின்  பெருமை  யன்றே..." 

என்று அப்பர் சொல்கிறாரே - அப்படியென்றால் அப்பர் புலையரா?

என்ற கேள்வி எழுகிறது. அது என்ன வஞ்சகப் புலையன்?

புலையன் வேறு - வஞ்சகப் புலையன் வேறா? இங்கே வஞ்சகம் எதற்கு

வரவேண்டும்?


ஆட்டுக்கறியும் கள்ளும் சுவைத்த அந்தணரான கபிலர் புலையரா

என்ற கேள்வியை இராசம் அம்மையார் எழுப்புகிறார். அதைப்போன்றே

மாணிக்கவாசகரையும் புலையர் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி

எனக்கு எழுகிறது.


"புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள் 

    புரிந்தனை - புரிதலும் களித்து 

தலையால் நடந்தேன் விடைப்பாகா" என்பார் மாணிக்கவாசகர். (செத்திலாப்பத்து).

தன்னைப் புலையனாக அப்பரடிகள் சொல்வதுபோலவே, 

மாணிக்கவாசகப்பெருமானும் தன்னைப் புலையன் என்று சொல்கிறார்.


"பொய்ம்மையே பெருக்கி பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப்

 புலையனேன் தனக்கும் 

செம்மையே ஆன சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே..."

என்று பிடித்தபத்தில் கூறுவார் மாணிக்கவாசகர்.

(அது என்ன புழுத்தலைப் புலையன்)


"புலையாயின  களைவானிடம் (சிவபெருமானிடம்)...."

என்பார் ஞானசம்பந்தர்.  "புலைகள் தீரத் தொழுமின்..." என்பார் சுந்தரமூர்த்திகள்.

இவையும் காணத்தக்கன.


அப்படியென்றால் புலை என்பது என்ன - புலையன் என்பவன் யார்

புலையின் பண்புகள் யாவை? என்று தேடுவோமாயின் - அதற்கு

நல்ல அடிப்படையையும் கருத்தாழமிக்க பார்வைகளையும்

தருகின்ற கட்டுரையாக முனைவர் இராசம் அம்மையாரின் கட்டுரை அமைகிறது.

பல நுனிப்புல் கட்டுரைகளும் பிட்டு மடல்களும் அடிபட்டுப் போகின்றன.

நேரிய சிந்தனையாளர்களுக்கு இக்கட்டுரை விருந்தாகும்.


அன்புடன்

நாக.இளங்கோவன்















பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது

இன்று மாலை ஆறு மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது. நான் மதியம் இரண்டு மணியோடு திருவேற்காட்டில் பிரச்சாரத்தை முடித்துவிட்டேன். ( ஊத்துக்கோட்டையில் திட்டமிட்டிருந்த பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை). 


நாளொன்றுக்கு 14 மணி நேரம் தோலைத் தாண்டி எலும்பில் சுட்ட வெயிலில் இனி நிற்கவேண்டாம். என் குதிகால்களில் இருக்கும் கொப்புளத்துக்கு சிகிச்சை செய்துகொள்ளலாம். இனி பட்டாசுகளின் புகையில் மூச்சுத் திணற வேண்டாம். 45 நாட்கள் இருந்த மன அழுத்தம் குறைந்து சற்றே நிம்மதி உண்டானது. 


யாருக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளர்கள் முடிவு செய்திருப்பார்கள். அதை 24 ஆம் தேதி அவர்கள் தெரிவிக்கப்போகிறார்கள். அது மே 16 ஆம் தேதி தெரியப்போகிறது. வாக்குப்பதிவு நாள்வரை விழிப்போடு இருக்கவேண்டும். அதன்பின் ஓயாமல் என்னை அழைத்துக்கொண்டிருக்கும் புத்தகங்களோடு மனம்விட்டுப் பேசலாம்!

Saturday, April 5, 2014

இரண்டுகோடி இதயங்களின் துடிப்பு



இன்று வேட்புமனு தாக்கல்செய்த கணத்தில் என் மனம் தாங்க முடியாத பாரத்தில் நசுங்கியது, கண்கள் கசிந்தன. என்மீது எங்கள் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி ஒருபுறம் பெருமிதமும் இன்னொருபுறம் அச்சமும் உண்டானது. சிதம்பரம் தொகுதியில் அவர் வெற்றி பெறுவது உறுதி. திருவள்ளூரில் நான் வென்றால்தான் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம். அதை சாதிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு என் தோளில் விழுந்துள்ளது. 


நான் எவ்வளவோ மறுத்தும் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். நான் மறுத்துக் கூறிய காரணங்களைவிட எங்கள் தலைவர் என்னை நிறுத்துவதற்கு சொன்ன காரணங்கள் வலுவாக இருந்தன. எனவே இதை நான் ஏற்றுக்கொண்டேன். 


திமுக வினர் என்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு களப்பணியாற்றிவருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணி நம்பிக்கையளிக்கிறது. இந்தத் தொகுதியிலிருக்கும் தலித் மக்கள், கட்சி சார்பைத் தாண்டி எனக்கு வாக்களிக்க முடிவுசெய்துவிட்டனர் என்பது கிராமங்களில் நான் பிரச்சாரம் செய்தபோது தெரிந்தது. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.இவையெல்லாமே எனது மனப் பிரமையாகக்கூட இருக்கக்கூடும். அடுத்த 18 நாட்களில் நாங்கள் செய்யப்போகும் களப்பணியே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும். 


இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாக்கு எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என ஏற்படுத்தினார் அம்பேத்கர். ஆனால் எல்லா வெற்றிக்கும் ஒரே மதிப்பு இல்லை. திருவள்ளூரில் நான் பெறப்போகும் வெற்றிக்குப் பின்னால் 'தலித் இயக்கம் ஒன்றுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் ' என ஏங்கும் சுமார் இரண்டுகோடி தலித் இதயங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன!

Wednesday, April 2, 2014

திருவள்ளூரில் தலித் மக்களின் கல்வி பின்னடைவுக்குக் காரணம் என்ன?



திருவள்ளூர் மாவட்டம் தொழில் வளர்ச்சி நிறைந்ததாக இருந்தாலும் கல்வியில் பின்னடைவாகவே இருந்துவந்துள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்தான் அது மேம்பட்டிருக்கிறது. 1991 இல் 66.22% ஆக இருந்த கல்விகற்றோர் எண்ணிக்கை 2001 இல் 76.54% ஆகவும் 2011 இல் 86.73 % ஆகவும் உயர்ந்திருக்கிறது. கல்வி நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் 10% வித்தியாசம் இருக்கிறது. அதைவிடவும் அதிர்ச்சி தரும் செய்தி இந்த மாவட்டத்தில் 

இருக்கும் SC/ST மக்களில் கல்வியறிவு பெற்றோர் 52.7% மட்டுமே என திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறையின் இணையதளம் சொல்கிறது. இந்த அளவு இடைவெளி வேறு எந்த மாவட்டத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. 


இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 37 லட்சம் என்பதைக் கவனத்தில் கொண்டால் இந்த மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகள் போதாது. துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் (1397 ) உயர்நிலை/ மேனிலைப்பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் (148 + 454) இடையில் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கும்போது இங்கே இடைநிறுத்தம் ( drop out ) அதிகமாக இருக்குமோ என்ற ஐயத்தை உருவாக்குகிறது. 


திருவள்ளூரில் நான் வெற்றி பெற்றால் எனது முன்னுரிமை இந்த மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்துவதுதான். அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கும் தலித் மக்களின் கல்விக்கும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏழை எளிய மக்கள் தரமான கல்விபெறுவதை உறுதிசெய்யவேண்டும். 


Tuesday, April 1, 2014

திருவள்ளூரை வாட்டும் மின்வெட்டுப் பிரச்சனை



தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் தொகுதியில் மின்வெட்டுதான் முதன்மையான பிரச்சனை. இதனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அல்லல்படுகின்றனர். 


இன்று மூன்று மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகச் சொன்னார்கள். வறுத்தெடுக்கும் வெயில் மின்வெட்டின் பாதிப்பை அதிகமாக்கிக் காட்டுகிறது. 


புதிய மின்னுற்பத்தித் திட்டங்கள் துவக்குவதில் முனைப்புகாட்டாத தமிழக அரசு மின்வெட்டுப் பிரச்சனைக்கும்கூட மத்திய அரசின்மீதே பழிபோடுகிறது. மின் தொகுப்பிலிருந்து மின்பகிர்மானம் செய்வதற்கானக் கட்டமைப்பு வசதிகளைச் செய்துதரும் பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்தது என்றாலும் அதற்காகும் செலவில் ஒரு பகுதியை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளவேண்டும். 


மின் உற்பத்தியை அதிகரிப்பது ஒருபுறமிருக்க மின்சாரம் வீணாவதைத் தடுத்தாலே நமது மாநிலத்தின் மின் வெட்டுப் பிரச்சனையை ஓரளவு போக்க முடியும். நாம் நுகர்கிற மின்சாரத்தின் அளவில் மூன்றில் ஒரு பகுதி பகிர்மானத்தின்போது  (transmission & distribution) வீணாகிவிடுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 20% மின்சாரம் இப்படி வீணாகிறது. கொரியா போன்ற நாடுகளில் இது 4% கூட இல்லை. இப்படி மின்சாரம் வீணாவதற்கு முக்கிய காரணம் மின் வினியோகத்தில் பயன்படுத்தப்படும் தரமற்ற மின் வடங்களும் ட்ரான்ஸ்பார்மர்களும் தான். தரம் குறைந்த மின் கம்பிகளை மாற்றுவது, நல்ல ட்ரான்ஸ்பார்மர்களை அமைப்பது போன்ற விஷயங்களில் தமிழக அரசு அக்கறைகாட்டினால் அதனால் மிச்சமாகும் மின்சாரத்தைத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தமுடியும். 


மின் பகிர்மானத்தில் நேரிடும் மின் விரயத்தின் அளவை 2015 இல் 15% ஆகக் குறைப்பதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை 2020 க்குள் 7% ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.