Tuesday, April 22, 2014

அரிய கட்டுரை இது

மணற்கேணி இதழில் வெளியாகியிருக்கும் தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் கட்டுரை குறித்த பதிவு 

==========================


முனைவர் இராசம் அம்மையாரின், நான்கு பகுதிகள் கொண்ட

அருமையான கட்டுரையை மணற்கேணியின் அண்மைய 

இதழில் படிக்க முடிந்தது.


சாதி ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் ஆயுநருக்கு

அரிய கட்டுரையை வழங்கியிருக்கிறார் முனைவர் இராசம் அவர்கள்.


சங்க இலக்கியங்களை, நுனிப்புல் மேய்வது போலப் படித்துவிட்டு

சாதி, தீண்டாமை பற்றியெல்லாம் பொருந்தாதக் கருத்துரைப்போரை

வெட்கிப்போகச்செய்யும், அரிய கட்டுரை இது என்றால் 

மிகையல்ல. 


சாதி, தீண்டாமை பற்றி, வெறும் சொல்லடைவுகளை வைத்துக்

கட்டுரைகளை மேலோட்டமாக எழுதி, அதையே சாதிக்க முயல்வர்களிடம்

இருந்து முழுக்க மாறுபட்டு, ஆழ்ந்த, செறிவான கருத்தியலை அடித்தளமாகக்

கொண்ட இக்கட்டுரை மிகச்சிறந்தது.


"அகராதிகளெல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்கு என்று இருந்த காலம் அது" - 

என்ற, கட்டுரையின் ஒரு வரி சொல்லும் செய்திகள் மிக விரிவானவை;

தற்காலத் தமிழ்க்கல்வியை எண்ணுகையில் வலிக்கவும் வைக்கிறது.


புலை என்ற சொல்லை வின்சுலோவின் அகராதி உள்ளிட்ட பல அகராதிகளில்

இருந்து மட்டும் பொருள் கண்டு ஆய்வு செய்தால் புலையின் கதியும், கட்டுரைகளின் கதியும் எப்படி ஆகும் என்று எண்ணிப்பார்க்கவே அச்சம் வருகிறது. 


புலையன் என்ற சொல்லுக்கு எத்தனைத் தவறான பொருள்கள் சொல்லப்படுகின்றன என்று மிக அழுத்தமாக, பசுமரத்தாணியாகக் கருத்துகளையும் ஆதாரங்களையும் எடுத்துவைக்கிறார் கட்டுரை ஆசிரியர்.


"ஆவுரித்துத் தின்றுழலும் புலையனேனும்" எனும் அப்பரடிகளின் வரியை

மட்டும் மேற்கோள் காட்டி, புலையன் என்பவனுக்குப் பொருத்தப்படும்

பொருள்கள்/பண்புகளின் பொருந்தாமையை மிகத் தெளிவாக எடுத்துவைக்கிறார்.


இக்கட்டுரை பலவாறாக சிந்திக்க வைக்கிறது. 


இதைப்படித்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி,


ஆ உரிக்கிறான் - சரி

தின்கிறான் - சரி

உழல்கிறான் - அது ஏன் என்பதுதான்.


ஊன் உண்பவர், அல்லது ஆ உண்பவர் எல்லாம் உழல்பவர்

என்று பொருள் கொள்ள முடியுமா? அவர்கள் எல்லாம் புலையர்கள்

என்றால், மேனாட்டினர் தொடங்கி சீனர்கள் வரை எல்லாருமே புலையர்கள்தான்.


அப்பரடிகளின் வரியை மேற்கோள் காட்டுபவர்கள், 

ஆவுரித்துத் தின்பவன் புலையனா? ஆவுரித்துத் தின்று உழல்பவன் புலையனா?

என்றும் சிந்தித்துப் பார்த்து எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.


அப்பரடிகளின் இவ்வரியை மேற்கோள் காட்டுநர்,


"வஞ்சகப்  புலைய  னேனை  வழியறத்  தொண்டிற்  பூட்டி    

அஞ்சலென்  றாண்டு  கொண்டாய்  அதுவுநின்  பெருமை  யன்றே..." 

என்று அப்பர் சொல்கிறாரே - அப்படியென்றால் அப்பர் புலையரா?

என்ற கேள்வி எழுகிறது. அது என்ன வஞ்சகப் புலையன்?

புலையன் வேறு - வஞ்சகப் புலையன் வேறா? இங்கே வஞ்சகம் எதற்கு

வரவேண்டும்?


ஆட்டுக்கறியும் கள்ளும் சுவைத்த அந்தணரான கபிலர் புலையரா

என்ற கேள்வியை இராசம் அம்மையார் எழுப்புகிறார். அதைப்போன்றே

மாணிக்கவாசகரையும் புலையர் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி

எனக்கு எழுகிறது.


"புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள் 

    புரிந்தனை - புரிதலும் களித்து 

தலையால் நடந்தேன் விடைப்பாகா" என்பார் மாணிக்கவாசகர். (செத்திலாப்பத்து).

தன்னைப் புலையனாக அப்பரடிகள் சொல்வதுபோலவே, 

மாணிக்கவாசகப்பெருமானும் தன்னைப் புலையன் என்று சொல்கிறார்.


"பொய்ம்மையே பெருக்கி பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப்

 புலையனேன் தனக்கும் 

செம்மையே ஆன சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே..."

என்று பிடித்தபத்தில் கூறுவார் மாணிக்கவாசகர்.

(அது என்ன புழுத்தலைப் புலையன்)


"புலையாயின  களைவானிடம் (சிவபெருமானிடம்)...."

என்பார் ஞானசம்பந்தர்.  "புலைகள் தீரத் தொழுமின்..." என்பார் சுந்தரமூர்த்திகள்.

இவையும் காணத்தக்கன.


அப்படியென்றால் புலை என்பது என்ன - புலையன் என்பவன் யார்

புலையின் பண்புகள் யாவை? என்று தேடுவோமாயின் - அதற்கு

நல்ல அடிப்படையையும் கருத்தாழமிக்க பார்வைகளையும்

தருகின்ற கட்டுரையாக முனைவர் இராசம் அம்மையாரின் கட்டுரை அமைகிறது.

பல நுனிப்புல் கட்டுரைகளும் பிட்டு மடல்களும் அடிபட்டுப் போகின்றன.

நேரிய சிந்தனையாளர்களுக்கு இக்கட்டுரை விருந்தாகும்.


அன்புடன்

நாக.இளங்கோவன்No comments:

Post a Comment