Wednesday, October 29, 2014
கொள்ளிக்கட்டையால் தலை சொறியும் இந்துத்துவ அமைப்புகள்
Monday, October 27, 2014
தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக்குவது எப்போது?
Saturday, October 25, 2014
பீஹாரும் தமிழகமும்: பாஜக காலூன்றுவதைத் தடுக்க திராவிடக் கட்சிகள் செய்யவேண்டியது என்ன? - ரவிக்குமார்
Friday, October 17, 2014
பறை இசையின் பெருமைபேசும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
Wednesday, October 8, 2014
லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை
லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை
ஹரியானாவில் தலித்துகள் காங்கிரசைத் தோற்கடிக்கப்போகிறார்கள்?
Sunday, October 5, 2014
மேக்நாத் சாஹா (1893-1956)
Thursday, October 2, 2014
குப்பையில் வீசப்பட்ட கொள்கை - ரவிக்குமார்
நமது காலத்தை எலக்ட்ரானிக் யுகம் என்று சொல்லலாம்.மின்னணு சாதனங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் இப்போது கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. உணவைப்போல அத்தியாவசமானதாகிவிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை அவற்றின் பயன்பாடு முடிந்ததும் நாம் வீசியெறிந்துவிடுகிறோம். அவை மின்னணுக் கழிவுகளாக மாறுகின்றன. நமது வீட்டில் சேரும் குப்பைக் கூளங்களை ஒழித்துக்கட்டவே நாம் இன்னும் பழகவில்லை. அப்படியிருக்கும்போது மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதுபற்றி நமக்கு என்ன விழிப்புணர்வு இருக்க முடியும்?
குப்பையாக வீசியெறியப்படும் எலக்ட்ரானிக்சாதனங்களிலும் விலைமதிப்புமிக்க பொருட்களும் இருக்கவே செய்கின்றன. நாம் பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டரை எடுத்துக்கொண்டால் அதில் சுமார் அறுபது விதமான பொருட்கள் இருக்கின்றன. அவற்றுள் பலவற்றை நாம் மீண்டும் பயன்படுத்த முடியும். மின்னணு சாதனங்களில் தாமிரம், வெள்ளி முதலான உலோகங்கள் மட்டுமின்றி தங்கமும்கூட பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் தோண்டியெடுக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் மூன்று சதவீதம் இப்படியான மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் பல்லாடியம் என்ற உலோகத்தில் பதின்மூன்று சதவீதமும், கோபால்ட் என்ற உலோகத்தில் பதினைந்து சதவீதமும் இப்படி மின்னணு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் அபூர்வமான உலோகம் என சொல்லப்படும் ஹஃப்னியம் போன்ற உலோகங்களும்கூட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இச்சாதனங்கள் கழிவுகளாக மாறும்போது இந்த உலோகங்களைப் பிரித்தெடுப்பது லாபமான ஒரு தொழிலாகும். அந்தத் தொழில் உலகின் பல்வேறு இடங்களில் இப்போது நடந்து வருகிறது என்றபோதிலும், அவை சுகாதாரமான முறையில் செய்யப்படவில்லை. இந்தியாவில் இந்த சுகாதாரமற்ற பணியில் குழந்தைகள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
உலக அளவில் எலக்ட்ரானிக் கழிவுகள் மலைமலையாக குவிந்து வருகின்றன. ஐ.நா. சபையின் அறிக்கையின்படி ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது மில்லியன் டன்கள் இப்படி கழிவுகளாக உருவாகின்றன என்று தெரியவந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது 65 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளனர். உலக அளவில் அமெரிக்காதான் எலக்ட்ரானிக் கழிவுகளை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறது. அதற்கு அடுத்து சீனா. சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா.
நம் நாட்டின் எலக்ட்ரானிக் நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் மட்டும் ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் டன் மின்னணுக்கழிவுகள் உற்பத்தியாவதாக அஸ்ஸோசம் (ASSOCHAM ) அறிக்கை தெரிவிக்கிறது. 2020 இல் இந்திய அலவில் தற்போது இருக்கும் கம்ப்யூட்டர் கழிவுகளின் அளவு 500 மடங்கு அதிகரிக்கும் எனவும் அது எச்சரித்திருக்கிறது.
ஐ.நா. சபை 2020ஆம் ஆண்டில் உலகெங்கும் எந்த அளவுக்கு எலக்ட்ரானிக் கழிவு இருக்கும் என்பதைக் கணக்கிட்டிருக்கிறது. பழைய கம்ப்யூட்டர்களால் சேரும் எலக்ட்ரானிக் கழிவு 2007ஆம் ஆண்டில் இருந்ததைவிட சுமார் நானூறு சதவீதம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் அது ஐநூறு சதவீதம் அதிகரிக்கும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. மொபைல் போன்களால் உருவாகும் மின்னணுக் கழிவு சீனாவில் 2007ஆம் ஆண்டில் இருந்த அளவைவிட 2020இல் ஏழு மடங்கு அதிகரிக்கும் என்றும், ஆனால் அது இந்தியாவில் பதினெட்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் ஐ.நா.வின் அறிக்கை எச்சரித்திருக்கிறது. நமது உள்நாட்டில் உருவாகும் எலக்ட்ரானிக் கழிவுகள் ஒருபுறம் என்றால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து இங்கே வந்து ரகசியமாகக் கொட்டப்படும் கழிவுகள் இன்னும் ஏராளம்.
ஐ.நா. சபையால் தயாரிக்கப்பட்டிருக்கும் அறிக்கைஉலக நாடுகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறது. முதல் பிரிவில் இருக்கும் கென்யா, உகான்டா, பெரு, செனகல் ஆகிய நாடுகள் எலக்ட்ரானிக் கழிவுகளை முன்னதாகவே வகைப்படுத்தி கையாளக்கூடிய திறன் கொண்டவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவில் இந்தியாவும், சீனாவும் உள்ளன. இங்கும் அத்தகைய கட்டமைப்பு வசதி உள்ளது என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது பிரிவிலிருக்கும் தென்னாப்பிரிக்கா, மொராக்கோ, கொலம்பியா, மெக்சிகோ, பிரேஸில் ஆகிய நாடுகளில் எலக்ட்ரானிக்கழிவுகளை கையாளக்கூடிய திறன் இருந்தாலும், அதற்கான தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதில் பிரச்சனை இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகிறது.
எலக்ட்ரானிக் கழிவுகளை ஒழித்து கட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கடைபிடிக்கப்படும் சட்டம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே மின்னணுக் கழிவுகளை ஒழித்துக் கட்டுவதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த சட்டமாகும். மின்னணு சாதனங்களை விற்பவர்களே அப்பொருட்கள் கழிவாக மாறும்போது மீண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் முன்வரவேண்டும். அவர்களே மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆபத்தில்லாத முறையில் அவற்றை ஒழித்துக்கட்டுவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் அங்குள்ள நடைமுறை. இந்த நடைமுறையை நமது நாட்டிலும் கடைபிடித்தால் நல்லது.
நான் எம்.எல்.ஏ வாக இருந்தபோது எலக்ட்ரானிக் கழிவுகளைக் கையாளுவது குறித்து கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். அதை ஏற்று 2010 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கழிவுக் கொள்கை ஒன்றை தமிழக அரசு உருவாக்கியது. அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, மேற்பார்வையிடுவது ஆகிய பொறுப்புகள் சுற்றுச்சூழல் துறையிடம் அளிக்கப்பட்டது. எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்வது, சேர்ந்தவற்றை மறு சுழற்சி செய்வது, உற்பத்தியாளர்களே கழிவுகளை சேகரித்து ஆபத்தில்லாத முறையில் அவற்றை அழிப்பது என பல நல்ல அம்சங்கள் அந்தக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன.
தமிழக அரசு உருவாக்கிய எலக்ட்ரானிக் கழிவுக் கொள்கை இப்போது நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தவொரு தடயமும் தற்போதைய அரசின் கொள்கைவிளக்கக்குறிப்பில் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பலவற்றுக்கும் நேர்ந்த கதிதான் இந்த எலக்ட்ரானிக கழிவுக் கொள்கைக்கும் நடந்திருக்கிறது போலும்.
மலைபோலக் குவிந்துகிடக்கும் குப்பைகளால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என்ற போராட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சாதாரண குப்பைகளைவிட எலக்ட்ரானிக் குப்பைகளால் வரும் பாதிப்பு மிக மோசமானதாயிருக்கும். சரியான்முறையில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மிகப்பெரிய எலக்ட்ரானிக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவிடுவது திண்ணம்.
( 26.5.2014ல் எழுதப்பட்டது )