Saturday, October 25, 2014

பீஹாரும் தமிழகமும்: பாஜக காலூன்றுவதைத் தடுக்க திராவிடக் கட்சிகள் செய்யவேண்டியது என்ன? - ரவிக்குமார்



பிற்போக்குத் தனத்தின் எடுத்துக்காட்டாக நாம் பீஹாரைச் சொல்வது வழக்கம். ஆனால் பலவிதங்களில் பீஹாருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒற்றுமை உண்டு. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுச்சி, அதன் விளைவாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பவற்றில் பீஹாருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒற்றுமையைக் காணலாம். பீஹாரில் உயர்சாதியினர் சுமார் 14% முஸ்லிம்கள் 17% தலித்துகள் 16% பிற்படுத்தப்பட்டோர் சுமார் 51% உள்ளனர்.பீஹாரின் மக்கள் தொகையில் 85% கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். 

வளர்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்து அண்மையில் பீஹார் மிகப்பெரிய வியப்பை உண்டாக்கியது. அதை ஊடகங்களும் உரத்துப் பேசின. ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய ஆச்சர்யம் பீஹாரில் தலித் ஒருவர் முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பீஹாரை ஆண்டுகொண்டிருந்த ஐக்கிய ஜனதா தளம் பாராளுமன்றத் தேர்தலில் மிகமோசமான தோல்வியை சந்தித்த பிறகு பீஹார் அரசியலில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. அரசியலில் எதிர்த் துருவங்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கைகோர்த்தன. எவரும் எதிர்பார்க்காத விதத்தில் தலித் ஒருவர் முதல்வராக்கப்பட்டார். 

தமிழ்நாட்டோடு ஒப்புநோக்கினால் பீஹாரில் தலித்துகளின் எண்ணிக்கை சுமார் 5% குறைவு. அங்கு சாதிய ஒடுக்குமுறை அதிகம். ஆனால் அந்த மாநிலத்தில் தலித் ஒருவர் முதல்வராக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை. 

பீஹாரைப்போலவே தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் அரசியலும் இப்போது ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு தருவதற்கு இங்கிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மனம் இல்லை. ஓட்டுக்குக் காசு கொடுப்பது, இலவசங்களைக் கொடுப்பது என்ற மலிவான உத்திகள் மூலம் தலித்துகளின் வாக்குகளை வாங்கிவிடலாம் என அவை கருதுகின்றன. இப்போதைக்கு அந்த உத்திகள் வெற்றியைக்கூட தரலாம். ஆனால் எப்போதும் தலித்துகளை இப்படி ஏமாற்ற முடியாது. 

தலித்துகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்ற திட்டத்தை யாரேனும் முன்வைத்தால் அப்போது இந்த இலவசங்களும் பணமும் செல்லாமல் போய்விடும். ஒவ்வொரு தேர்தலிலும் தலித்துகளின் வாக்குகள்தாம் தமிழ்நாட்டின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன. இதை திராவிடக் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். 

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பாஜக இப்போதைக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் உத்தியையே பின்பற்றிவருகிறது. இங்குள்ள பிற்படுத்தப்பட்டோரின் கட்சிகளோடுதான் அது கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்குத் தொடரக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே அது தனது தேர்தல் உத்தியை மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

பிரபலமான நடிகர்களைக் கட்சியில் சேர்த்தால் வெற்றிபெறலாம் என்பது தவறான வழிமுறையாகும். தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் அந்த வழிமுறையை பாஜகவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவேண்டுமெனில் அது தலித்துகளை நோக்கித்தான் தனது கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.பீஹாரில் நித்திஷ்குமார் கையாண்ட உத்தியை பாஜக தமிழ்நாட்டில் கையில் எடுக்கவேண்டும். அதைத் தவிர அக்கட்சிக்கு வேறு வழியில்லை. 

தலித் அஸ்திரத்தை பாஜக கையிலெசடுப்பதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருக்கும் திராவிடக் கட்சிகள் விழித்துக்கொள்வார்களா? ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் விதத்தில் பரந்துபட்ட சமூக அணிசேர்க்கையை உருவாக்குவார்களா? அப்படியானதொரு ஜனநாயக அணுகுமுறையைக் கையிலெடுக்காமல் தொடர்ந்தும் தலித்துகளின் ஆதரவைப் பெற முடியாது என்பதை இப்போதாவது திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா? 

1 comment:

  1. திராவிடம் புறக்கணிக்கப்பட்டாலே அது சாத்தியப்படும்

    ReplyDelete