Tuesday, May 26, 2015

சங்க இலக்கியத்தில் தீண்டாமைக்கு சான்று உள்ளதா?


” சாதி குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் வெறும் விவரணைகளை விளக்கங்களாக எடுத்துக்கொண்டு அவற்றை சாதியின் தோற்றம் குறித்த கோட்பாடுகளாகக் கருதி வாதிட்டனர்” என அம்பேத்கர் ‘ இந்தியாவில் சாதிகள்’ என்ற தனது ஆய்வுரையில் குறிப்பிட்டார். தான் மாணவராக இருந்த காலத்தில் சாதி குறித்த ஆய்வுகளில் செல்வாக்கு செலுத்திவந்த செனார்ட் ( Emile Charles Marie Senart ), நெஸ்ஃபீல்டு(J.C.Nesfield), சர்.எச்.ரிஸ்லி (Sir Herbert Risley) டாக்டர் கெட்கர் (Dr S.V.Ketkar) ஆகியோரது கருத்துகளை தனது ஆய்வுரையில் பரிசீலித்த அம்பேத்கர் அவற்றின் குறைபாடுகள் எவை என்பதை எடுத்துக் காட்டினார். சாதிகளின் உருவாக்கத்தில் ’அகமணமுறையின்’ முக்கியத்துவத்தை உணர்த்தினார். வகுப்புகள் சாதிகளாக உருமாறியதில் ‘போலச் செய்தல்’ ‘ சாதி விலக்கம்’ ஆகியவற்றுக்கு உள்ள பங்கினை விளக்கினார்.  

1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூட்டப்பட்ட மானுடவியல் ஆய்வரங்கில் அவர் சமர்ப்பித்த அந்த ஆய்வுரைக்கு இது நூற்றாண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் சாதி குறித்து எத்தனையோ ஆய்வுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாலும் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால்,அம்பேத்கர் தனது ஆய்வுரையில் குறிப்பிட்டதுபோல ” சாதி என்பது வெகுகாலம் நீடித்திருக்க முடியாது, ஏனெனில் அதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம்” என எந்தவொரு ஆய்வாளரும் கூறவில்லை. சாதி ஒழிப்புக்காக அவரைப்போல தம் வாழ்க்கையை எவரும் அர்ப்பணிக்கவுமில்லை. ஏனெனில் மற்றவர்களுக்கெல்லாம் சாதி ஒரு ஆய்வுப் பொருள், அம்பேத்கருக்கோ அது ‘உயிரின் வாதை’.

இந்திய சாதியமைப்பு முறை குறித்து நிலைபெற்றுவிட்டகற்பிதங்களில் ஒன்று அது இந்த நாட்டில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலவி வருகிறது என்பதாகும். சாதியமைப்பின் தொன்மையை ஏற்றுக்கொள்கிற மனம் அதை அத்தனை எளிதாக மாற்றிவிடமுடியாது என்று நம்பிவிடுகிறது. அதனால் பேச்சுவழக்கில் ‘பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இங்கு நிலவிவரும் சாதி” என யாரேனும் குறிப்பிட்டால் அதை எந்தவித உறுத்தலுமில்லாமல் ஏற்றுக்கொள்கிறது.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிட சாதியின் கொடுமை அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில் ’ சங்க காலத்திலேயே சாதி இருந்தது, தீண்டாமை இருந்தது’ என்று வாதிடுகிற அறிவாளிகள் இருப்பது வியப்புக்குரியதல்ல. அவர்களுக்குச் செவ்வியல் இலக்கியமும் தெரிவதில்லை, சமூகவியல் உண்மைகளும் புரிவதில்லை. தமது வெறுப்பு அரசியலுக்கு, உள்நாட்டு உதாரணங்கள் வழக்கிழந்து போய்விட்ட நிலையில் அவர்கள் மேலைநாட்டாரின் ‘ஆராய்ச்சிகளை’ துணைக்கழைத்து வருகின்றனர். 

’சங்ககாலத் தமிழ்ச் சமூகம் இன்றிருப்பதுபோலவே ஒரு சாதிய சமூகமாகத்தான் இருந்தது’ என வாதிடுகிற ஒருவர்தான், ‘தமிழுக்குச் செம்மொழித் தகுதி உள்ளது’ என்று சான்றிதழ் வழங்குபவராகவும் இருக்கிறார் என்பது தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் அவல நிலைக்கு அடையாளம். அதை மாற்றுகிற ஒரு சிறு முயற்சிதான் இந்த நூல். 

அரசாங்கத்தார் அங்கீகரிக்காவிட்டாலும் ’தமிழறிஞர்’ என அழைக்கப்படுவதற்குத் தகுதிபெற்ற முனைவர் வீ.எஸ்.ராஜம் அவர்கள் இந்த நூலை கட்டுரைத் தொடராக எழுதியபோது அதை மணற்கேணி ஆய்விதழில் வெளியிட்டேன். இன்னும் பரவலான கவனத்தைப் பெற்று விவாதங்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் இதை இப்போது நூலாக வெளியிடுகிறேன். 

தமிழர்கள் தற்சார்பை இழந்து நிற்பதால் தற்போதைய செவ்வியல் தமிழ் ஆய்வுச்சூழல் பெரிதும் மேலைநாட்டு ஆய்வாளர்களின், நிறுவனங்களின்  கருணையை எதிர்நோக்கியிருக்கிறது. சமூகவியல் ஆய்வுகளும் அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அது தடுக்கப்படவேண்டும். தமிழ் ஆய்வுகளின் தற்சார்பு மீட்கப்படவேண்டும். அதற்கு ‘அறிவுலகத் தீண்டாமை’ அகற்றப்படவேண்டும். இந்த நூல் அதற்கான தூண்டுதலைத் தருமென நம்புகிறேன். 

( முனைவர் வீ. எஸ். ராஜம் எழுதி மணற்கேணி வெளியீடாக வந்துள்ள ' சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை இன்ன பிற .... என்ற நூலுக்கு ரவிக்குமார் எழுதிய பதிப்புரை) No comments:

Post a Comment