Wednesday, May 27, 2015

ஆர் கே நகர் தொகுதியில் தலித் வாக்குகள் - ரவிக்குமார்


2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆர் கே நகர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 277037 அதில் தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை 38266. அதாவது 13.81%. கடந்த பதினான்கு ஆண்டுகளில் தலித் வாக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து இப்போது சுமார் ஐம்பதாயிரத்தை எட்டியிருக்கும். தற்போது இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் இந்தத் தொகுதியில் அந்த ஐம்பதாயிரம் தலித் வாக்குகளுக்கு சமூக ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ ஏதேனும் மதிப்பு இருக்கிறதா? அப்படி மதிப்பிருந்தால் அந்தத் தொகுதி தலித் மக்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதிலும் இருக்கிற தலித்துகள் பயன்பெறக்கூடிய திட்டங்களை வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கும். ஆனால் அப்படி எதுவும் இப்போது நடக்கவில்லை.

சென்னை மாவட்டத்துக்குள் எழும்பூர், திருவிக நகர் என இரண்டு தனித் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 25% தலித் வாக்குகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக சென்னை மாவட்டத்தில் சுமார் 14% தலித் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளின் அரசியல் மதிப்பு என்ன?

பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் தலித் அரசியலுக்கு சென்னைதான் களமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆவணங்களில் அந்த வரலாற்றைப் பார்க்கலாம். சின்னத்தம்பி என்ற தலித் தலைவரின் பின்னால் திரண்ட தலித்துகள் எப்படி பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தார்கள் என்பதை, 'பறையர் கலகம்' என பிரிட்டிஷ் ஆவணங்களில் பதிவாகியிருக்கும் அவற்றின் வரலாற்றை யூஜின் இர்ஷிக் எழுதிய நூலில் காணலாம் ( Dialogue and History - Constructing South India, 1795-1895, Eugene F. Irschick, University of California Press, 1994). அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், முனுசாமிப் பிள்ளை என உலகறிந்த தலித் தலைவர்கள் சென்னையை மையமாக வைத்தே களப்பணி ஆற்றினார்கள். அதன்பின்னர் சத்தியவாணிமுத்து, டாக்டர் சேப்பன், சக்திதாசன், சுந்தரராசனார், வை.பாலசுந்தரம், கருப்பன் அய்ஏஎஸ் எனப் பல்வேறு தலைவர்களின் அரசியல் பணிகள் சென்னையில்தான் சுற்றிச் சுழன்றன. ஆனால் அந்தப் புகழ்மிக்க தலித் அரசியல் வரலாறு இந்த 21 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியற்றுப் போய்விட்டது.

தலித் வாக்குகள் அரசியல் ரீதியாக திரட்டப்பட்டால் எந்தவொரு தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடியவையாக அந்த வாக்குகளே இருக்கும். ஆனால் அவற்றை அரசியல்ரீதியாகத் திரட்டுவதில் தலித் கட்சிகள் போதிய வெற்றியை சாதிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் இருக்கும் தனித் தொகுதிகளில் செல்வாக்கு பெற்றிருக்கும் தலித் கட்சிகள் ஏன் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள தனித் தொகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தமுடியவில்லை என்பது சிந்தனைக்குரிய வினாவாகும். கிராமப் புறங்களைப்போல வன்கொடுமைகளை மட்டுமே மையப்படுத்தி பெருநகரங்களில் தலித் அரசியல் செயல்பட முடியாது. பெருநகரங்களில் தலித்துகள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான பிரச்சனைகளைக் கையிலெடுத்தால்தான் அவர்களை அரசியல் ரீதியாகத் திரட்டமுடியும்.

சென்னையில் வசிக்கும் தலித்துகளின் முதன்மையான பிரச்சனை குடியிருப்புதான். 2013 ஆம் ஆண்டு சென்சஸ் கமிஷனர் வெளியிட்ட விவரங்களின்படி தமிழ்நாட்டில் 58 லட்சம் பேர் குடிசைகளில் வசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 19 லட்சம் (32% ) பேர் தலித்துகள். சென்னையில் மட்டும் 13.5 லட்சம் குடிசைவாசிகள் உள்ளனர். அதில் பாதிக்கு மேற்பட்டோர் தலித்துகள்தான். ஏற்கனவே குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளின் கதியைப் பார்த்தால் குடிசைகளே பரவாயில்லை என்றுதான் தோன்றும். இந்த அவலநிலையை மாற்றுவதற்கு தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வேலைதேடி குடிபெயரும் தலித்துகள் சாக்கடை ஓரங்களில், நடைபாதை மேடைகளில் விலங்குகளைவிடக் கேவலமாக இன்னும் எத்தனைகாலம் கிடப்பது?

சென்னை தலித்துகளின் பிரச்சனைகள் தீரவேண்டுமானால் அவர்களின் வாக்குகள் அரசியல் மதிப்பைப் பெறவேண்டும். அவை காசுக்கு வாங்கப்படும் பண்டம் என்ற நிலை மாறவேண்டும். தலித் வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றுவது முதன்மையாக தலித் மக்களின் பொறுப்பு. தம்மிடம் இருக்கும் வாக்குரிமையை அதன் அரசியல் மதிப்பறிந்து பயன்படுத்தும் அளவுக்குத் தலித்துகள் தன்னுணர்வு பெறாதவரை அவர்களுக்கான அரசியல் உரிமைகளை வெல்லுவது எளிதாக இருக்காது.

தன்மதிப்பும் தற்சார்பும்தான் சமத்துவத்தைக் கொண்டுவரும். இதை சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாழும் தலித்துகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் வாக்குகளை அரசியல் மதிப்பு கொண்டவையாக மாற்றுவதற்கு இந்த இடைத்தேர்தலை தலித் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தத் தொகுதியில் உள்ள குடிசைவாசிகள் அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவோம் , அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment