Thursday, September 10, 2015

ஒரு தலையங்கமும் சில கேள்விகளும் -ரவிக்குமார்காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்வதில் காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு இருக்கும் தயக்கம் குறித்து The Hindu நாளேடு Sceptical Old Guard என்ற தலையங்கத்தை இன்று ( 11.09.215) வெளியிட்டிருக்கிறது. 

காங்கிரஸ் தலைவராக மேலும் ஒரு ஆண்டு நீடிக்க சோனியா காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு வழங்கிய அனுமதியை எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து ராகுலைப் பாதுகாக்கும் யுக்தியாகவும் அந்தத் தலையங்கம் சித்திரித்திருக்கிறது. "தலைவர் பதவியை சலுகையாகவோ பொது சேவையை தியாகமாகவோ " பார்க்கக்கூடாது என அறிவுரை வழங்கவும் அது தவறவில்லை. 

இதைத் தலையங்கமாக எழுதியதைவிட ராகுல் காந்திக்கு தனிப்பட்ட கடிதமாக எழுதியிருக்கலாம். ஏனெனில் புறவயப்பட்ட பார்வை இதில் இல்லை. இன்று காங்கிரஸ் கட்சிக்கு என்ன தேவை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு 2014 தேர்தலில் அது ஏன் இப்படியொரு தோல்வியை சந்தித்தது என்ற கேள்வியைக் கேட்டாகவேண்டும். அந்தக் கேள்வியைக் கேட்டால் UPA-2 ன் மக்கள்விரோத செயல்பாடுகளை விமர்சிக்கவேண்டியிருக்கும். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளமாக இருந்த மக்களின் வாழ்க்கையைச் சூறையாடும்விதமாக மன்மோகன் சிங் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் இருந்ததைப் பேசவேண்டியிருக்கும். தற்போதைய பாஜக அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தேர்தல் வெற்றி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளின் விளைவு என்பதைச் சொல்லவேண்டியதிருக்கும். அவற்றைப் பேசாமல் ராகுல் காந்திக்கு அறிவுரை வழங்குவதற்காக ஒரு தலையங்கத்தை இந்தியாவின் முன்னணி நாளேடு எழுதுவதென்பது அதிர்ச்சியளிக்கிறது. 

அடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைப் புத்துயிர்ப்புப் பெற வைப்பதற்கு அக்கட்சி தனது கருத்தியலை மறு கண்டுபிடிப்புச் செய்யவேண்டும். தலித், ஆதிவாசிகளை வெறும் வாக்குவங்கிகளாகப் பார்ப்பது; போலி மதச்சார்பின்மை பேசி சிறுபான்மையினரை ஏய்ப்பது; உலக வங்கி, ஐ.எம்.எஃப் முதலான நிறுவனங்களின் முகவர்களாகச் செயல்படும் Technocrats கையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது முதலான போக்குகளிலிருந்து விடுபடவேண்டும். 

இரண்டுமாதம் விடுப்பு எடுத்துக்கொண்டுபோய் அதன்பிறகு வந்து வாய்ச்சவடால் பேசிவிட்டால் அடுத்த பிரதமராகிவிடலாம் என நினைப்பது அரசியல் முதிர்ச்சியிமையின் வெளிப்பாடு மட்டுமல்ல, மக்களை கிள்ளுக்கீரையாக எண்ணும் இறுமாப்பும்கூட. 

காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது எனக் காட்டவேண்டும் என உண்மையிலேயே அந்தக் கட்சி கருதுமேயானால் அவர் மன்மோகன் சிங்கின் வாரிசு அல்ல நேருவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர் என்பதையாவது தெளிவுபடுத்தவேண்டும். 

The Hindu தலையங்கம் He has a lot to learn from Prime Minister Modi எனக் குறிப்பிட்டிருக்கிறது. அது முற்றிலும் தவறு. மோடியிடமிருந்து கற்பது காங்கிரசை இன்னொரு பாஜகவாக மாற்றுவதற்கே இட்டுச்செல்லும். அதை எந்தவொரு காங்கிரஸ் தொண்டரும் ஏற்கமாட்டார். 

No comments:

Post a Comment