Tuesday, September 8, 2015

பொருளாதார மந்தநிலையும் பிரதமரின் ஆலோசனையும் - ரவிக்குமார்



இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. திரு மோடி பிரதமராகப் பதவியேற்றபோது இருந்த 25 ஆயிரம் புள்ளிகளுக்குக் குறைவான நிலைக்கு பங்குச் சந்தை வந்துவிட்டதாக இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. ஒரு டாலருக்கு 66.83 ரூபாய் என்ற அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருக்கிறது. 

கவலையளிக்கும் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக இந்தியப் பிரதமர் திரு மோடி இன்று தொழிற்துறையினரையும் பொருளாதார நிபுணர்களையும் நேற்று (08.09.2015) சந்தித்திருக்கிறார். 
துணிச்சலாக முதலீடுகளை அதிகப்படுத்துங்கள் என அவர்களிடம் பேசியிருக்கிறார். கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும் எனத் தொழில்துறையினர் கேட்டிருக்கின்றனர். 

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாம் கூடுதல் விலை கொடுக்கவேண்டியதிருக்கும். அதே நேரத்தில் இது ஏற்றுமதிக்கு சாதகமானது என சிலர் கூறுகின்றனர். சீன பணமான யுவானின் மதிப்பை அந்த நாடு குறைத்ததால் ஏற்றுமதி வாய்ப்புகள் அந்த நாட்டை நோக்கிச் செல்லும் வாய்ப்பு அதிகரித்தது. அதுபற்றிய கவலை இந்திய ஏற்றுமதியாளர்களிடம் எழுந்தது. சீனாவைப் பின்பற்றி  இந்திய ரூபாயின் மதிப்பை நமது அரசு குறைக்கவேண்டும் (Devaluation) என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் நமது அரசாங்கம் குறைக்காமலேயே ரூபாய் வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதை ஏற்றுமதிக்கு சாதகமாகத் திருப்புவது சாத்தியமா என்பதை நாம் சிந்திக்கவேண்டும். "ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தால் ஏற்றுமதி காப்பற்றப்படும்" என ஸ்டேட் பேங்க்கின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியிருப்பது சரியானதுதானா? என்பதையும் ஆராயவேண்டும். 

பருத்தி ஏற்றுமதியில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ரூபாயின் வீழ்ச்சி பருத்தி ஏற்றுமதியை அதிகரிக்க உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் ரூபாயின் மதிப்பு குறைவது ஜவுளித் துறையில் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரும் நட்டத்தையே உண்டாக்கும் என  நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அங்கு நாம் சீனாவுடன் போட்டிபோடவேண்டியுள்ளது. 

முதலாளிகள் வலியுறுத்துவதுபோல தாராளமயத்தை, தனியார்மயத்தை துரிதப்படுத்துவதால் மட்டும் அன்னிய முதலீடுகளை ஈர்த்துவிடமுடியாது. இன்றைய சிக்கலிலிருந்து மீள்வதற்கு வேளாண் துறைக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்ற ஆலோசனையை அரசு பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. 

அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிப்பதுமட்டுமே இன்றைய சிக்கலை எதிர்கொள்வதற்குப் போதாது. மாற்றுகளை முன்மொழியவேண்டும். இடதுசாரிப் பார்வைகொண்ட பொருளாதார அறிஞர்கள் அதை நோக்கிக் கவனம் குவிப்பது அவசியம். குறிப்பாக தாமஸ் பிக்கெட்டி அவர்கள் Top Incomes - A global Perspective என்ற நூலில் முன்வைத்துள்ள விவரங்களும் அவரது கருத்தாக்கமும் இன்றைய இந்திய சூழலைப் புரிந்துகொள்ள உதவுமா என்பதை பரிசீலிக்கவேண்டும். 

No comments:

Post a Comment