தோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவிட இயக்கம், ஹியூகோ கொரிஞ்சியின் புதிய நூல், மணற்கேணி இதழ், அம்பேத்கர், நிறப்பிரிகை என்று பல விஷயங்களைப் பேசினார். நடப்பு அரசியல் பின்னணியில் சமீபத்தில் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், ‘கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ என்னும் தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அம்பேத்கர் திடல் சென்றிருந்தேன்.
தலைப்பு சரிதான், ஆனால் ‘தலித் பார்வையில் பாஜக ஆட்சி’ என்னும் உப தலைப்பை ரவிக்குமார் வைத்தது ஏன் என்னும் கேள்வியை எழுப்பினார் சிறப்புரை ஆற்றிய தோழர் ஜி. ராமகிருஷ்ணன். ‘மதவாதம், வெறுப்பு அரசியல், சாதிய பாகுபாடுகள், தீண்டாமை, வகுப்புவாதம் என்று அனைத்தையும் ரவிக்குமார் இடதுசாரி நிலைப்பாட்டில் நின்று எதிர்த்திருக்கும்போது எதற்குத் தனியாக ‘தலித் பார்வையில்’ என்று அட்டையில் குறிப்பிடவேண்டும்?’ வலதுசாரிகளின் பலம் சமீபகாலமாக பெருகிவருவது குறித்து அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை என்றார் ஜிஆர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையளிக்கும்படியாக இருக்கிறது. குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி என்று மாநில அரசாங்கங்கள் இறங்கிவருவது இந்தப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. ‘வர்க்கப் போரட்டத்தின் ஒரு பகுதியாகவே விவசாயப் போராட்டத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.’ என்றார் தோழர் ஜிஆர்.
‘தலித் பார்வையில் பாஜக ’ என்று உபதலைப்பு இடவேண்டிய அவசியத்தை ரவிக்குமார் பின்னர் விளக்கினார். பாஜகவின் தலித் வாக்கு வங்கி முன்பைவிட இப்போது அதிகரித்திருக்கிறது. ராம் விலாஸ் பாஸ்வான், அத்வாலே ஆகிய தலித் தலைவர்களை உள்ளிழுத்துக்கொண்டு தலித் வாக்குகளைத் தீவிரமாக வேட்டையாடிக்கொண்டிருக்கிறது மோடியின் பாஜக. கேரளாவில் அய்யன்காளி புகழ் பாடுகிறார் மோடி. அவ்வாறே நாராயண குருவையும் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறார். மற்றொரு பக்கம், புரட்சியாளர் அம்பேத்கரை இந்துத்துவ வலைக்குள் சிக்கவைக்க அவர் கட்சியினர் முயன்றுகொண்டிருக்கிறார்கள். தலித்துகளைக் கவர்ந்திழுக்கவும் நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பர்கள்தாம் என்று காட்டிக்கொள்ளவும் இத்தகைய முயற்சிகளில் மோடி ஈடுபட்டு வருகிறார். இது தவறான, மோசடியான போக்கு என்பதை நிரூபிக்கவேண்டும். நடைபெறுவது தலித்துகளுக்கும் விரோதமான ஆட்சி என்பதை அழுத்தமாக உணர்த்தவே அந்த உபதலைப்பு என்றார் ரவிக்குமார்.
முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டுமல்ல; தற்சமயம் நடைபெறுவது அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சி என்றார் ஜவாஹிருல்லா. மோடியின் ஆட்சியை ஏன் ஜனநாயக ஆட்சி என்று அழைக்கமுடியாது என்பதை விரிவாக விவரித்தார் திருமாவளவன். மக்களின் முடிவுகள் அல்ல, குறிப்பிட்ட சில கும்பல்களின் முடிவுகளே இன்று நம்மை ஆதிக்கம் செய்கின்றன. நம் அன்றாட வாழ்வில் இந்தக் கும்பல்கள் தலையிட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருவருடைய வீட்டு சமையலறைக்குள் சென்று, என்ன சமைக்கப்பட்டிருக்கிறது என்று சரிபார்த்து பிறகு தாக்கும் துணிச்சல் எங்கிருந்து சிலருக்கு வருகிறது? மாடுகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளை இடைமறித்து, தகுந்த ஆவணங்கள் இருந்தாலும் தாக்கும் அதிகாரத்தைச் சிலருக்கு யார் அளித்தது? இந்தக் கும்பல்கள் தங்களுக்கான அதிகாரத்தை எங்கிருந்து பெறுகின்றன?
மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது நிலவும் கும்பலாட்சி கொடுங்கோன்மை ஆட்சியாக மாறிவிடும். கும்பலாட்சிக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. ஆனால் கொடுங்கோன்மை ஆட்சிக்கு அந்த அங்கீகாரமும் கிடைத்துவிடும். அப்படி நேர்வதை நாம் அனுமதிக்கக்கூடாது என்றார் திருமாவளவன். மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். ‘விமரிசனங்கள் பல இருந்தாலும் அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதை நாங்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அதுதான். திமுகமீதும்கூட விமரிசனங்கள் இருக்கின்றன என்றாலும் பாஜக அவர்களையும் சேர்த்தே வீழ்த்த நினைக்கிறது. அதிமுகவின் இடத்தில் ஒருவேளை சிபிஎம் வந்து அமர்ந்தால் ரத்தனக் கம்பளம் விரித்து வரவேற்கலாம். ஆனால் பாஜக போன்ற ஜனநாயக விரோத சக்திகள் வருவதை எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும்?’
வகுப்புவாத அபாயத்துக்கு எதிரான அணிதிரட்டலை எப்படி மேற்கொள்வது? ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதன்மூலம் என்றனர் திருமாவளவனும் ரவிக்குமாரும். வர்க்க உணர்வை வலுப்படுத்துவதன்மூலம் என்றார் தோழர் ஜிஆர்.
அழைப்புக்கும் உரையாடலுக்கும் நன்றி, தோழர் ரவிக்குமார். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தோழர்கள் முகமது யூசுஃப், சிந்தனைச்செல்வன் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
( தோழர் மருதன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருக்கும் பதிவு )