Friday, July 22, 2011

தாராசுரம் ஓவியங்கள் சொல்லும் கதை எவருக்காவது தெரியுமா?கும்பகோணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம். இரண்டாம் ராஜராஜன் காலத்தில் ( கி.பி.12 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட அழகிய கோயில்தான் இந்த ஊரின் சிறப்பு. கட்டிடக் கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்க அந்தக் கோயிலுக்கு சிலநாட்களுக்கு முன்னால் போயிருந்தேன். அந்தக் கோயிலின் கருவறைக்குமேல் உள்ள கோபுரத்தின் வெளிப்புறம் முழுவதும் அருமையான வண்ணங்களைக்கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. கோயிலின் நுழைவாசலின் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் இருக்கும் மண்டபத்தில் அண்மைக்காலத்தில் அங்கு புனரமைப்புப் பணிகள் செய்தபோது கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர்.அந்த மண்டபத்தின் சுவரிலும் ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் தெளிவாகத் தெரிந்த இரு ஓவியங்களை எனது அலைபேசியின் காமிராவால் படம் பிடித்தேன். இந்த ஓவியங்கள் சொல்லும் கதை எவருக்காவது தெரியுமா? 


11 comments:

 1. (அ) முதலில் இருப்பது ஒரு துவாரபாலர்.
  திரிபங்க நிலை.


  மெசோபடோமியா, எகிப்து சிற்பங்களில் இராது.

  க்லாஸிக்கல் கிரீஸில் காணலாம். கிரேக்கர்கள்
  கண்ட இந்த கான்ட்ராபோஸ்டோ நிலை,
  வடமேற்கு இந்தியாவில் காந்தாரத்தில்
  அறிமுகம் ஆனது. பின்னர் குஷாணர், குப்தர்கள்
  வளர்த்தனர். த்ரிபங்கம் சிறப்பாகப் பயன்படுவது
  சோழர்காலத்தில்.

  (ஆ) விஷ்ணுவின் வராக அவதாரம்.


  இரண்டும் சோழர் காலமா? தெரியவில்லை.
  விஜயநகர்??

  நா. கணேசன்

  ReplyDelete
 2. நிறப்பிரிகை வலைப்பூவின் இரண்டாம் படம் வராஹ முகத்துடன் உள்ளது. வாராஹி
  வழிபாடு பிற்காலச் சோழர்களால் இங்கு அறிமுகமானது.
  தஞ்சைப் பெரியகோயிலில் வாராஹி வழிபாடு உண்டு.இம்மாதம் சிறப்பு ஆராதனைகள்
  நடக்கும்.

  கலிங்கர் தொடர்பால் தமிழகம் வந்திருக்கலாம்


  தேவ்

  ReplyDelete
 3. நன்றி, தேவ். தமிழில் வராகிமாலை என்ற பழைய
  நூல் இருக்கிறது. கிவாஜ அடிக்கடி எழுதுவார்.
  இணையத்தில் விளக்கங்கள் உள்ளன.

  -----

  முதலில், கல்கி, (அ) ஹயக்ரீவரோ என சந்தேகித்தேன்.
  பின்னர் வராகம் என்று தேர்ந்தேன். கைகளில்
  சங்கசக்ரம் இன்மையாலும், சைவக் கோயில் ஆனதாலும்,
  பச்சை நிறம் இருப்பதாலும்
  வராகி என்னும் ID பொருத்தமுடையது.

  இந்த சித்திரங்கள் எத்தனை உயரம்? அடிக்கணக்கா?
  இல்லை சில இஞ்ச் தானா? - ரவிகுமார் சொல்ல
  வேண்டுகிறேன்.

  நா. கணேசன்

  ReplyDelete
 4. இந்த ஓவியங்கள் ஒரு ஆள் உயரத்துக்கு கருவறை போன்று தோற்றமுடைய அமைப்பின் இரு புறங்களிலும் வரையப்பட்டுள்ளன. இதே வண்ணங்களைக் கொண்டே விமானத்தின் வெளிப்புற ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

  ReplyDelete
 5. வாராஹி - பண்டாஸுரனின் உடன்பிறப்பான விசுக்ரனை வதைத்ததால் அம்பிகையின்
  பேருவகைக்குக் காரணமானவள் (லo ஸo);

  கருவறைக்குள் துர்கை / நிசும்ப ஸூதனி இருக்கக்கூடும்


  தேவ்

  ReplyDelete
 6. இருக்கலாம். சோழர்களின் குலதெய்வம் நிசும்பசூதனி,
  அவளது மிகப்பழைய சிலை குயப்பேட்டையில் உள்ளது.
  அதன் படம் நாகசாமி எனக்கு 15-20 ஆண்டுமுன் தந்தார்.

  பிரெஞ்சு நிறுவனத்தில் பில்லியோசா காலத்தில்
  பட்டாபிராமன் செட்டியார் இருந்தார். F. L'Hernault அம்மையார்
  நல்ல அறிஞர், அவர்கள் எடுத்த படங்கள் இணையத்தில்
  ஜான் ஹண்டிங்டன் (ஒஹாயோ பல்கலை) தளம் போல்
  வரவேண்டும். ஜானை ஒரு ஆலோசகராய் வைக்கலாம்.
  ஜான் வடநாடு, காந்தாரம், ... போன்றன.

  பல்லவர் சளுக்கர், சோழர், பாண்டியர், சேரர், ...
  (+ தென்கீழ் ஆசியா) கலைகளுக்கு பிரெஞ்சு நிறுவனம்
  தளம் அமைக்க ழான் போன்றோர் உதவ வேண்டும்
  தென்கிழக்கு ஆசிய பிரெஞ்சு நிறுவந்த்துடன் சேர்ந்து
  செய்தால் சிறப்பு. ப்ரான்ஸ் தென்கிழக்கு ஆசியாவை
  சில நூற்றாண்டுகள் காலனிப்பிடியின் கீழ் வைத்திருந்தது.
  தேவ்,

  ரவிகுமார் அல்லது வேறு யாருமோ இந்த புததகத்தைப் பெற்றால்
  இந்த ஓவியங்கள் பற்றி எழுதியுளரா? என்று பார்க்கலாம்.

  ஒரு 10 முக்கியமான புஸ்தகங்கள் வந்துள்ளன.
  பாரிஸ் நகர முனைவர் பட்ட தீஸிஸ் விரிவாகி
  இரண்டு தொகுதிகளாக வந்துள்ளது:
  Darasuram
  Françoise L'Hernault, 1987.  நா. கணேசன்

  ReplyDelete
 7. அந்தக் கோயிலில் புத்தர் சிலைகளைப் பார்த்தேன். பௌத்தத்துக்கும் அந்தக் கோயிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி சுரேஷ் பிள்ளை தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். வேறு யாரேனும் அதுகுறித்து எழுதியிருக்கிறார்களா ? சுரேஷ் பிள்ளையும்கூட தாராசுரம் கோயில் புத்தர் சிலைகள் பற்றி எழுதியதாக நினைவில்லை. அங்கே இருக்கும் கட்டிடக்கலை அம்சங்கள் குறித்துதான் அவர் அதிகம் எழுதியதாக ஞாபகம் . திரு கணேசன் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஃ பிரெஞ்ச் நூலில் அதுகுறித்து ஏதேனும் எழுதப்பட்டிருக்கலாம்.
  ரவிக்குமார்

  ReplyDelete
 8. அன்புள்ள ரவிக்குமார்,

  மிக அருமையான ஒளிப்பட பதிவுகள்! இப்படங்கள்
  பிற்காலத்தவையாக இருக்கும் எனத் தோன்றுகின்றது.
  என்றாலும், இவை இருக்கும் சீரழிந்த நிலை மிகவும்
  வருத்தத்தைத் தருகின்றது!

  வராகி (வாராகி) உருவம் இப்படி இருக்கும் என்பதற்கு
  வேறு வலுவூட்டும் சான்றுகள் உள்ளனவா?
  வராகம் என்றால் பன்றி, கேழல். முதலில் நீங்கள்
  இட்ட படங்களில் உள்ளது வராகி (பன்றி/கேழல்) போல்
  இல்லையே! முகம் குதிரை போல அல்லவா உள்ளது?
  ஃகயக்ரீவர் என்றும் நினைக்க இடம் உண்டோ? ஆனால்
  பெண் தெய்வ வடிவு அல்லவே ஃகயக்கிரீவர்.

  அன்புடன்
  செல்வா

  ReplyDelete
 9. அன்பின் ரவிக்குமார்,
  ஒரு சிறு துணுக்குத் தகவல் ... கர்ப்பிணிப்பெண் சிலை ஒன்று எல்லாத் தமிழகக் கோவிலிலும் இருக்கும் என்று சிறு வயதில் கேட்டிருக்கிறேன்; ஆனால் உறுதியாகத் தெரியாது. மதுரை மீனாட்சி கோயிலில் உண்டு; நண்பர்கள் காட்டிப் பார்த்திருக்கிறேன் -- சிவன் சந்நிதியில், அனுமார், கிருஷ்ணன் சிலைகளுக்கு எதிர்ப்புறம் இருக்கும் தூணில் இந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் சிலை, மகப்பேற்றுக்கோலத்தில்.
  இதில் வேடிக்கை என்ன என்றால் ... மகப்பேற்றுக் காலத்தில் அந்தக் காலப் பெண்கள் படுத்திருந்தார்களா அல்லது நின்றிருந்தார்களா என்று யாரும் திட்டமாகச் சொல்லவில்லை.
  தொல்காப்பிய உரையில் "அரசி பொறையுயிர்த்த கட்டிலின் கீழ்" என்று காணப்படுகிறது. இதை வைத்து மகப்பேற்றுக் காலத்தில் அந்தக் காலப் பெண்கள் கட்டிலில் படுத்திருந்தனர் என்றும் சொல்கிறார்கள். ("வயலில் வேலை செய்த உழத்தியர் கட்டிலுக்கு எங்கே போனார்கள்?" என்று என் மனம் கேட்கிறது.)
  எது உண்மை?
  மிகப் பல ஆண்டுகளுக்கு முன் எகிப்திய கிளியோபாட்ரா பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவள் குழந்தை பெற்றெடுக்கும் காட்சியைக் காட்டியிருந்தனர். அவள் தன் இரு கைகளையும் இரும்புச் சங்கிலியால் மேலே தூணில் பிணித்துக்கொண்டு கால்களை அகல விரித்துக் குந்தியிட்டு வயிற்றுச் சுமையை இறக்க முயன்ற காட்சி மனதை விட்டு அகலவில்லை!
  நம் நாட்டுக் கோயில்களும் அதேபோன்ற பழைய முறையைக் காட்டுகின்றனவோ? எனக்கு இதற்குமேல் சொல்லத் தெரியவில்லை. மேலும் பார்த்தால் நல்லது.
  அன்புடன்,
  ராஜம்

  ReplyDelete
 10. மகப்பேறு குறித்த இந்தச் சிற்பம் பிரகாரத்தில் இருக்கும் எண்ணற்ற சிற்பங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல அங்கே அனுமார் கிருஷ்ணன் சிலைகள் இல்லை. நின்ற கோலத்தில் குழந்தைப் பெற்றார்களா? அல்லது படுத்த நிலையில் பெற்றார்களா என்பது முக்கியமான கேள்விதான். இதுகுறித்து இலக்கிய பதிவுகள் ஏதும் இருக்கின்றனவா ?
  இந்தக் கோயிலில் போரிடும் பெண்களைச் சித்திரிக்கும் சிற்பங்களும் உள்ளன . அவற்றை இப்போது என் வலைப்பூவில் ஏற்றுகிறேன்.
  ரவிக்குமார்

  ReplyDelete
 11. விருத்தாசலம் கோபுரத்திலும் நின்ற நிலையில் பிரசவிக்கும் பெண் மற்றும் தாதிகள் சுதைச்சிற்பம் ஒன்ரு உள்ளது.

  ReplyDelete