( இடமிருந்து வலம் ) ரவிக்குமார் ,விஜயவேணு கொபால் , நடன காசிநாதன் ,கா.ராஜன், வீ.செல்வகுமார்
நடன காசிநாதன் அவர்களுக்கு இராமகி அவர்கள் நினைவுப் பரிசை வழங்குகிறார்
இரவிக்குமார் ஒருங்கிணைத்த இந்த ( தொல்லியல் ஆய்வுகள் 1961 - 2011 ) ஆய்வரங்கில் பங்குகொள்ளும் அரியதோர் நல்வாய்ப்பைப் பெற்றேன்!
மிகச்சிறந்த ஆய்வாளர்கள் மிகச்சிறப்பாக தமிழில் ஆய்வுக்கருத்துகளைப் படைக்கக் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!
காலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கிய மூத்த ஆய்வாளர் வேணுகோபால் அவர்களின் ஒவ்வொரு மொழியும் அறிவும் தெளிவும் மிக்கதாய், அவ்வப்பொழுது மிகுந்த நகைச்சுவையுடையதாயும் அமைந்திருந்தது!
கல்வெட்டு ஆய்வாளர் விஜய் வேணுகோபால் ஐயாவைப் பற்றி நான் பெருமையாகக் கேட்டிருந்தாலும், இதுவே நான் முதன்முறையாக அவர் பேசக் கேட்டது. தொல்லியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததையும் ஆய்வாளர்கள் எதிர்கொண்ட வியப்பூட்டும் விளைவுகளையும் வேணுகோபால் ஐயா கூறிய விதம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இதே போல நான் முதன் முறையாக முனைவர் நடன காசினாதன் அவர்களின்
ஆய்வுரைப் பேச்சையும் இப்பொழுதே கேட்கின்றேன். மிகச்சிறப்பாக
தமிழரின் தொன்மையைச் சுட்டும் தொல்லியல் வரலாற்றுத் தடயங்களை
அழகுடன், வலுவுடன் எடுத்துக் காட்டினார்.
அடுத்து பேச வந்த முனைவர் தயாளன் அவர்களின் நேர்மையையும், அவருடைய அறிவுத்திறனையும் பிறர் பெருமைபடக் கூறக் கேட்டு மிக மகிழ்ந்தேன்! தயாளன் அவர்கள் தாச்சு மகால் (தாஜ் மகால்) கட்டத்தின் அமைப்பைப் பற்றியும் பொதுவாக பாதுகாப்பதில் கைக்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறினார். காலை அமர்வில் கடைசியாகப் பேசிய முனைவர் வேதாச்சலம் தென்மாவட்டங்களில் காணப்பட்ட கல்வெட்டுகள் தொல்லியல் கூறுகள் பற்றிக் கூறினார்.
காலை அமர்வு முடிந்தவுடன் மிகச் சுவையான அறுசுவை பகல் உணவும் படைத்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது!
பிற்பகல் இன்னும் ஓர் அரிய ஆய்வுரை விருந்து! முதலில் புதுச்சேரி பேராசிரியர் க. இராசன் மிக நேர்த்தியான காட்சியுரை நிகழ்த்தினார். கொடுமணல் அகழாய்வில் அவர் அணி கண்டு நிறுத்திய
உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் அணுகிய முறையையும்,
இடர்கலையும் ஐயங்களையும் அழகாக முன் வைத்துப் பேசினார்.
இதுவே பேராசிரியர் இராசன் அவர்களின் ஆய்வுரையை நான் நேரில் கேட்பது முதன் முறை. எத்தனை இனியவர்! எளிமையன இயல்பான தன்மைகொண்டவர்! ஆய்வரங்க நிறைவில், முனைவர் இராசன் அவர்களுக்கு பரிசு வழங்க என்னை அழைத்தபோது அதனை அரிய நற்பேறாகக் கொண்டேன்! இரவிக்குமாருக்கும் என் நன்றி!
பேராசிரியர் இராசனுக்கு அடுத்ததாக முனைவர் செல்வக்குமார் தொல்பழங்காலத் தடயங்களை முன் வைத்து அரிய ஒரு காட்சியுரையை நிகழ்த்தினார். தென்னிந்தியாவில் எப்படி இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மாந்த இனமும், முன்மாந்த இனங்களும் (hominids) வாழ்ந்து வந்திருந்தனர் என்பதைக் காட்டினார்.
கடைசியாக முதுபெரும் ஆய்வாளர் வேணுகோபால் ஐயா அவர்கள், பிரான்சிய கழகம் செய்து வரும் அரிய பணிகளைப் பற்றி (தமிழ் இலக்கியம், தமிழர் தொல்லியல் பற்றியவை) அழகுற தொகுத்துக் கூறினார்கள்.
எத்தனை தொழில்நேர்த்தியுடன் அனைவரும் பங்குகொண்டனர், எத்தனை அழகுற அனைத்தியும் ஒருங்கிணை8த்திருந்தார் திரு இரவிக்குமார் என்று நினைந்து வியந்தேன். நானும் பங்குக்கொள்ளுமாறு அமைந்ததை நினைத்து மிக மகிழ்கின்றேன்!
அன்புடன்
சி.ஆர்.செல்வகுமார்
( கனடா )
நன்றி : தமிழ் மன்றம்
No comments:
Post a Comment