பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழருக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து 7-11-2012 முதல் 9-11-2012 வரை உலகத் தமிழர் மாநாடு ஒன்றை ஒருங்கிணைக்கின்றன. இம்மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஓர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை வருமாறு:
முக்கியமானதொரு கட்டத்தில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு மற்றும் பிரித்தானியத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கு முதலில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்மையில் நடந்து முடிந்த அய்.நா. மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கை அரசின் மீது தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, அங்கு தமிழர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறையைக் கண்டித்திருக்கின்றன.
2011 மார்ச் மாதத்தில் அய்.நா. அவையால் அனுப்பப்பட்ட நிபுணர் குழு தெரிவித்திருந்த கருத்துக்களை இங்கு நான் வலியுறுத்துகிறேன். வன்னிப் பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவில் இலங்கை அரசாங்கம் வன்முறை புரிந்தது என்பதை அந்தக் குழு உறுதி செய்திருந்தது.
இப்போதும் இலங்கையில் இரகசிய முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இத்தகைய கொடுமைகளைத் தீர்ப்பதற்கான எந்தவோர் ஏற்பாடும் இலங்கையில் இல்லை. அங்கு நீதித் துறையும்கூட அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கி றது.
வெள்ளை வேன்களில் வந்து தமிழ் இளைஞர்களைக் கடத்துவதாகவும், 2009 மே மாதத்திற்குப் பிறகு நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை இலங்கையில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
ஊடகவியலாளர்களும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகள் இனப்படுகொலை என்ற பிரிவில் அடங்கக்கூடியவை. 2004-2008 ஆண்டுகளுக்கிடையே ஊடவியலாளர்கள் 31 பேர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 24 பேர் தமிழர்கள்.
இலங்கை அரசு சர்வதேசச் சமூகத்தை ஏமாற்றும்விதமாக தடுப்பு முகாம்களை மூடி வருகிறது. ஆனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை தமது சொந்த ஊருக்குச் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்கள் எந்த வசதியுமற்ற அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
'மெனிக் முகாமில்' அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் தமிழர்கள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை அனுப்பப்படவில்லை என்பது இதற்கோர் உதாரணம் ஆகும்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களின் நிலங்களையும் கட்டிடங்களையும் சட்டவிரோதமாக அபகரித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.
சிங்களவர்களை வலிந்து தமிழர் பகுதிகளில் குடியேற்றும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழர்களின் அன்றாட வாழ்க்கை சிங்கள இராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது வீடுகளில் தனிப்பட்ட சடங்குகளைச் செய்வதற்குக்கூட இராணுவத்திடம் அனுமதிபெற வேண்டிய நிலை உள்ளது. முடிதிருத்தும் கடைகளையும் மளிகைக் கடைகளையும்கூட இராணுவமே நடத்துகிறது. விவசாயத்திலும் மீன்பிடித் தொழிலிலும் சிங்கள இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மறுக்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் சர்வதேசச் சமூகம் அறிந்திருந்தும், இலங்கை அரசே இதுகுறித்து விசாரித்து நீதி வழங்க வேண்டுமென்று கூறிவருகிறது. இனவெறிபிடித்த இலங்கை அரசை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. மூன்றாண்டுகள் கடந்து விட்டன. எந்தவொரு நம்பிக்கையும் கண்ணில் தெரியவில்லை.
ஆகவே, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு உடனடியாக சர்வதேச சுயாதீனமான விசாரணை ஒன்றை ஏற்பாடு செய்து இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஈழத்தமிழர் பிரச்சனையை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றும் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவிலிருக்கும் தேசியக் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக நான் முயற்சி எடுப்பேன் என்றும் உங்களிடம் உறுதிகூறுகிறேன். நன்றி.
இவ்வாறு இலண்டனில் நடைபெறும் சர்வதேசத் தமிழர் மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
No comments:
Post a Comment