Monday, November 5, 2012

முள்ளிவாய்க்கால் படுகொலை சுதந்திரமான சர்வதேச விசாரணை கோரி லண்டனில் உலகத் தமிழர் மாநாடு தொல். திருமாவளவன் பங்கேற்கிறார்




பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழருக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து 7-11-2012 முதல் 9-11-2012 வரை உலகத் தமிழர் மாநாடு ஒன்றை ஒருங்கிணைக்கின்றன.  இம்மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஓர் அரங்கில் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவை குறித்து அய்.நா. பேரவையின் முயற்சியில் சர்வதேசச் சமூகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.  அதாவது, சிங்கள அரசின் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ இல்லாத வகையில் சர்வதேச நாடுகள் இடம்பெறும் சுதந்திரமான விசாரணைக் குழு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்னும் குரல் உலகத் தமிழர்களிடையே எழுந்துள்ளது.  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவில் மட்டுமே இத்தகைய விசாரணையை மேற்கொள்ள முடியும் என்னும் அடிப்படையில் இந்நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து இந்நாடுகளின் அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் கூட்டத்தில் சிங்கள அரசால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையினை அல்லது பரிந்துரைகளை சிங்கள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டது.  இனப்படுகொலை செய்துள்ள ஓர் இனவெறி அரசு தங்களைத் தாங்களே விசாரித்துக்கொள்வது என்பது வேடிக்கையாக உள்ளது.  ஆகவே, அய்.நா. பேரவையின் முன்முயற்சியில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு சர்வதேசச் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற மாநாடாக இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களின் அழைப்பை ஏற்று தமிழகத்திலிருந்து ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளார்கள்.  அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார் .

தற்போது ஈழத்தில் நிலவும் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாத நடவடிக்கைகள், செயலிழந்து கிடக்கிற மறுகட்டுமானம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் போன்ற பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ள இம்மாநாட்டை, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பின் தேவை குறித்தும் சர்வதேசச் சமூகத்தின் ஆதரவு குறித்தும் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு களமாகக் கருதி விடுதலைச் சிறுத்தைகள் இம்மாநாட்டில் பங்கேற்கிறது .


No comments:

Post a Comment